2023-2024-ம் ஆண்டுக்கான கர்நாடக மாநில பட்ஜெட் அம்மாநில சட்டமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

இந்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாஜக அரசின் கடைசி பட்ஜெட்டை மாநில முதல்வரும் நிதியமைச்சருமான பசவராஜ் பொம்மை தாக்கல் செய்தார்.

பட்ஜெட் கூட்டத்திற்கு வந்த முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமைய்யா தனது காதுகளில் காவி நிற சாமந்தி பூவை வைத்திருந்தார்.

காலை 10.15 மணிக்கு பசவராஜ பொம்மை தனது பட்ஜெட் உரையை தொடங்கிய போது, ​​ ‘பொம்மை மாநில மக்களின் காதில் பூ வைக்க வந்துள்ளார்’ என்று சித்தராமையா கிண்டலாக கூறினார்.

சித்தராமையாவின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த முதல்வர் பொம்மை, “எதிர்க்கட்சி தலைவர்கள் இப்படி காதில் பூ வைத்துக் கொள்வது சரியல்ல. மக்கள் காதில் இவ்வளவு நாள் பூ சுற்றியவர் சித்தராமையா அதனால் தான் கடந்த தேர்தலில் மக்கள் அவர் காதில் பூ வைத்தனர். இந்த முறையும் கர்நாடக மக்கள் உங்கள் காதில் பூ வைக்கும் நிலை ஏற்படும்” என்று பேசினார்.

பொம்மையின் பேச்சில் குறுக்கிட்ட சித்தராமையா, “இந்த பட்ஜெட் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள ஏழு கோடி மக்களின் காதில் பூ வைக்க உள்ளீர்கள் என்பதை தெரிவிக்கவே நாங்கள் காதில் பூ வைத்துள்ளோம்” என்றார்.

அதற்கு அமைச்சர்கள் ஸ்ரீராமுலுவும், ஆர்.அசோகாவும் எழுந்து நின்று, “சித்தராமையா-வின் இந்த நடவடிக்கை மரபை மீறுவதாக உள்ளது” என்று கூறினர்.

அதற்கு உடனடியாக பதிலளித்த சித்தராமையா, “பாஜகவுக்கு கண்ணியமே இல்லை. இதுவரை வழங்கப்பட்ட 600 வாக்குறுதிகளில் 51 வாக்குறுதிகளைக் கூட நிறைவேற்றவில்லை” என்று கடுமையாக சாடினார்.

இதனைத் தொடர்ந்து ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சியினரிடையே அமளி ஏற்பட்டதைத் தொடர்ந்து தலையிட்ட சபாநாயகர் விஸ்வேஷ்வர் ஹெகடே காகேரி இருதரப்பினரையும் சமாதானம் செய்தார்.

பட்ஜெட் கூட்டம் முடிந்தவுடன் சட்டசபை வளாகத்தில் காதில் பூ வைத்தபடி இருந்த கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமார் அருகில் வந்த முன்னாள் முதல்வரும் பாஜக தலைவருமான எடியூரப்பா அவரது காதில் இருந்த பூவை எடுக்க முயற்சி செய்தது அங்கிருந்தவர்களிடையே சிரிப்பை வரவழைத்தது.