சீனாவில் தொழிற்சாலைகளை மூட அரசு உத்தரவு… மின்னணு பொருட்களின் உற்பத்தி குறைவால் விலையேறும் அபாயம்

Must read

சீனாவில் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவு கடும் வெயில் மற்றும் அனல் காற்று வீசுவதால் தொழிற்சாலைகளில் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் அனல் காற்றுடன் கடும் வெயில் வாட்டிவதைத்து வரும் நிலையில் சிச்சுவான் மாகாணத்தில் நிலவும் மின் பற்றாக்குறையை போக்க, அனைத்து தொழிற்சாலைகளையும் 6 நாட்களுக்கு மூட அம்மாகாண நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

செமிகண்டக்டர் மற்றும் சோலார் பேனல்கள் உற்பத்தி செய்யும் முக்கிய இடமாக விளங்கும் சிச்சுவானில் ஆப்பிள் (Apple – AAPL) ஃபாக்ஸ்கான் (Foxconn) மற்றும் இன்டெல் (Intel – INTC) உள்ளிட்ட உலகின் மிகப்பெரிய எலக்ட்ரானிக்ஸ் நிறுவனங்களின் தொழிற்சாலைகள் உள்ளன இதற்கு வழங்கப்படும் மின்சாரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் லித்தியம் சுரங்க மையமாக இந்த மாகாணம் உள்ள நிலையில் மின்சார கார் பேட்டரிகளின் உற்பத்தி முடங்கியுள்ளது தவிர மூலப்பொருளின் விலை பலமடங்கு அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டின் பல நகரங்களில் 100 டிகிரிக்கும் அதிகமான வெப்பநிலை நிலவுவதால் கடந்த அறுபது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான வெப்பத்தை சீனா எதிர்கொள்கிறது.

இதனால் அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் ஏர் கண்டிஷனிங் தேவை அதிகரித்து, மின் கட்டமைப்பின் மீது அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. வறட்சி காரணமாக அணைகளின் நீர்மட்டமும் குறைந்ததால் நீர்மின் நிலையங்களில் மின்சார உற்பத்தி வெகுவாக குறைந்துள்ளது.

இந்த நிலையில், சீனாவின் மிகப்பெரிய மாகாணங்களில் ஒன்றான சிச்சுவான் மாகாணத்தில் மொத்தமுள்ள 21 நகரங்களில் 19 நகரங்களில் இந்த வாரம் திங்கள் முதல் சனிக்கிழமை வரை அனைத்து தொழிற்சாலைகளிலும் உற்பத்தியை நிறுத்துமாறு ஞாயிறன்று அவசர அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

சிச்சுவான் தவிர ஜியாங்சு, அன்ஹுய் மற்றும் ஜெஜியாங் உள்ளிட்ட மற்ற முக்கிய மாகாணங்களிலும் கடும் வெப்பம் நிலவுவதால் மின் விநியோகம் தடைபட்டுள்ளது, இதனால் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு மின்சாரத்தை சேமிக்க வலியுத்தியுள்ளன.

சீனாவில் நிலவும் கடும் வெப்பத்தால் தொழிற்சாலைகள் ஒரு வார காலத்திற்கு மூடப்படுவதால் பாலி-சிலிகான் மற்றும் லித்தியம் விநியோகம் கடுமையாக பாதிக்கப்படும் மற்றும் விலை ஏற்றம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

 

More articles

Latest article