ருள்மிகு காலபைரவ வடுகநாதர் திருக்கோயில், திருப்பூர் மாவட்டம், குண்டடத்தில் அமைந்துள்ளது.

காசு இருந்தால் காசிக்குச் செல்லுங்கள், காசு இல்லை என்றால் குண்டடத்துக்கு வாருங்கள் என்று குண்டடம் ஸ்ரீ காலபைரவ வடுகநாதரின் சிறப்பைப் பற்றி கிருபானந்தவாரியார் ஸ்வாமிகள் சொல்வார். பைரவர் என்றால் எல்லோருக்கும் முதலில் நினைவுக்கு வருவது காசி மாநகரின் காவல் தெய்வமான ஸ்ரீ காலபைரவர்தான். புராணச் சிறப்பு வாய்ந்த காசி மாநகரை, எந்த வித தீய சக்திகளும் அண்ட விடாமல் காவல் காத்து வருபவர் அங்கே குடி கொண்டுள்ள ஸ்ரீகாலபைரவர். காசிக்குச் செல்லும் பக்தர்கள் திரும்பும்போது அவரைத் தரிசித்தால்தான் யாத்திரை பூர்த்தி பெறும் என்று புராணம் சொல்கிறது.

பைரவர் என்பவர், சிவனின் அம்சம். சேத்திரங்களை இவர் காப்பதால் சேத்திரபாலகர் என்றும் அழைக்கப்படுகிறார். நான்கு வேதங்களே நாய் வடிவில் பைரவருக்குக் காவலாக இருக்கின்றன. 64 வேறுபட்ட வடிவங்களில் பைரவர் திருமேனிகளைப் பிரித்துச் சொல்வார்கள். பைரவரை வழிபட்டால் அனைத்து வளங்களும் கிடைக்கம். பொன்னும், பொருளும் மன அமைதியும், மகிழ்ச்சியும் இவரை வழிபட்டால் கிடைக்கக் கூடிய சில செல்வங்கள். பதினெட்டு சித்தர்களுள் ஒருவரான கொங்கணர், பைரவரை வழிபட்டு அட்டமாசித்திகளை அடைந்தார். செம்பைத் தங்கமாக்குதல், எத்தகைய நோயையும் குணமாக்க வல்ல மூலிகை மருந்துகளைத் தயாரித்தல் போன்ற பிரமிப்பான கலைகளில் கொங்கணர் தேர்ந்து விளங்கியதற்கு பைரவரின் அருளே பிரதான காரணம்.

பிரம்மதேவன் செருக்கடைந்து திரிந்த ஒரு காலம் உண்டு. அப்போது பிரம்மனுக்கு ஐந்து தலைகள் (நான் முகன் என்ற பெயர் பிற்பாடு வந்திருக்க வேண்டும். திசைகளின் காவலனாக, படைப்புத் தொழிலின் அதிபதியாக விளங்கியதாலும், ஐந்து தலைகளுடன் அவதரித்தாலும் உலக இரட்சகனான சிவ பெருமானையே மதிக்கத் தவறினார் பிரம்மன். அதோடு, தேவர்கள் மற்றும் முனிவர்கள் அனைவரும் தன்னையே வணங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். இதுகுறித்து சிவனிடம் சென்று முறையிட்டனர் தேவர்கள். சினம் கொண்டார் சிவபெருமான். பிரம்மனின் செருக்கை அடக்கத் தீர்மானித்தார். தனது சக்தியால் பைரவரை உருவாக்கி, பிரம்மனின் தலைகளில் ஒன்றை கிள்ளி வரும்படி ஆணையிட்டார். வீராவேசத்துடன் புறப்பட்ட பைரவர், பிரம்மனின் ஐந்து தலைகளுள் நடுவில் இருந்த ஒரு தலையைத் தன் நகத்தால் கிள்ளி எடுத்தார். இந்த பைரவர் அம்சமே வடுகதேவர். (வடுகன் என்றால் பிரம்மச்சாரி) புராணத்தில் சொல்லப்பட்ட தகவல் இது.

குண்டடத்து பைரவரின் திருநாமம், ஸ்ரீகாலபைரவ வடுகநாத சுவாமி. இங்கு உறையும் ஈசனின் திருநாமம் விடங்கீஸ்வரர். விடங்கர் என்ற முனிவர் தவம் இருந்தமையால் இந்தப் பெயர். அம்பாள் திருநாமம். விசாலாட்சி, என்றாலும் பைரவர் கோயில், வடுகநாதர் கோயில் என்று சொன்னால்தான் பலரும் இந்தக் கோயிலை அடையாளம் காட்டுகிறார்கள். பைரவருக்கு சிறப்பான வழிபாடு நடந்து வருகிறது.

கோவை – மதுரை நெடுஞ்சாலையில் குண்டடம் இருக்கிறது. கோவையில் இருந்து சுமார் 82 கி.மீ பல்லடம் – தாராபுரம் மார்க்கத்தில் இரண்டு ஊர்களுக்கம் நடுவில் இருக்கிறது குண்டடம். பல்லடத்தில் இருந்து சுமார் 28 கி.மீ தாராபுரத்தில் இருந்து 16 கி.மீ. தொலைவு. மகாபாரத காலத்திலேயே குண்டடம் சிறப்புற்று விளங்கியதாக புராணம் சொல்கிறது. கீசகன் என்பவன், திரௌபதியின் மேல் மோகம் கொண்டதால் அவனைக் கொன்றான் பீமன். கொன்ற இடம்தான் குண்டடம். இது பின்னாளில் “குண்டடம்” ஆகிவிட்டது.

பாண்டவர்கள் அஞ்ஞாதவாசத்தின்போது மறைந்து வாழ்வது குண்டடத்தில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் உள்ள ருத்ராபதிக்கு வந்தனர். இங்குள்ள தொரட்டி மரத்தின் பொந்தில்தான் தனது வில், அம்பு போன்ற ஆயுதங்களை மறைத்து வைத்தான் அர்ஜுனன். இதனால் இந்த மரத்தின் அடியில் உள்ள விநாயகர் வில் காத்த விநாயகர் என்று இன்றும் அழைக்கப்படுகிறார். இந்த ஆலயத்தை சூழ்ந்த பகுதியில் 1990 ஆம் வருடம் கிணறு வெட்டும்போது பூமிக்கடியில் இருந்து கைப்பிடி இல்லாத வாள், யானையின் தந்தம், குதிரை மற்றும் யானையின் எலும்பு கிடைத்ததாகத் தொல்பொருள் துறையின் ஆய்வு ஒன்று சொல்கிறது.

தற்போது உள்ள தாராபுரத்துக்கு அந்த நாளில் விராடபுரம் என்று பெயர். அஞ்ஞாதவாசத்தின்போது விராடபுரம் அரண்மனையில் ஒரு வருடம் பேடியாக இருந்தான் அர்ஜுனன். ஒரு வருடம் முடிந்து திரும்பும்போது ஒரு நாள் சூர்ய உதய நேரத்தில் அர்ஜுனனின் பேடி வேஷம் நீங்கியது. இது நீங்கிய இடம் சூரியநல்லூர் எனப்படுகிறது. இது தாராபுரத்துக்கும் குண்டடத்துக்கும் நடுவே இருக்கிறது.

புராணச் சிறப்பும் வரலாற்று முக்கியத்துவமும் குண்டடத்துக்கு அதிகம் உண்டு. அந்நியர்கள் ஆட்சிக் காலத்தில் ஆலயம் தொடர்பான பல ஆதாரங்கள் சிதைக்கப்பட்டுள்ளன. அந்தத் தாக்குதலில் பெரியகளந்தை ஆதீஸ்வரர், எரகாம்பட்டி நாகலிங்க ஸ்வாமி, குண்டடம் வடுநாத சுவாமி, தாராபுரம் அகஸ்தீஸ்வரர், கூத்தம்பூண்டி சொர்ணேஸ்வரர் முதலான பல சுற்றுப்பட்ட ஆலயங்கள் தாக்குதலுக்கு உள்ளாகின. பல கல்வெட்டுக்கள் அழிந்து போய்விட்டன. ஆனாலும் பெருமைகளையும் மகிமைகளையும் தன்னகத்தே கொண்டு காலபைரவ வடுகநாத சுவாமி இன்றைக்கு அருள் பாலித்துக் கொண்டிருக்கிறார் என்கிறார் குண்டடம் ஊர்ப் பெரியவர் ஒருவர்.

 

தற்போது ஆலயம் அமைந்துள்ள பகுதி ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் இலந்தை, அரசு போன்ற மரங்கள் நிறைந்த பெரும் வனமாக திகழ்ந்தது. இந்து வனம் எனப்பட்ட இந்தப் பகுதியில் விடங்கர் எனும் முனிவர் இந்த வனத்தில் சிவபெருமானை நினைத்து தவத்தில் இருந்தார். அப்போது அரக்கர்களால் தனக்குத் தொல்லைகள் நேரக்கூடாது என்று காசியில் உள்ள விஸ்வநாதரை மனமுருகப் பிரார்த்தித்தார் விடங்கர். அவரது பிரார்த்தனைக்கு இணங்க காலபைரவ மூர்த்திகளுள் ஒருவரான வடுக பைரவரை விடங்கரின் பாதுகாப்புக்காக அனுப்பினார் காசிவிஸ்வநாதர். இறைவன் இட்ட பணியைச் செவ்வனே செய்தார் வடுகபைரவர். முனிவரது தவத்துக்கு இடையூறு செய்யும் அரக்கர்களை அழித்தார். இந்து வனத்தில் ஒரு இலந்தை மரத்தடியில் புற்றில் நிரந்தரமாகக் குடிகொண்டார் வடுகபைரவர். காலம் உருண்டது. அருகே ஓர் அரசமரத்தடியில் பாம்படீஸ்வரர், சுயம்புமூர்த்தியாகக் கிளம்பினார். இந்த வனம்தான் சேர நாட்டின் எல்லைப் பகுதி. எனவே சேர நாட்டைச் சேர்ந்த வாணிபச் செட்டியார்கள் வியாபார நிமித்தமாகப் புறப்பட்டு இரவுப் பொழுதை இந்த வனத்தில் கழித்துவிட்டு மறுநாள் காலையில் மதுரைக்குப் புறப்படுவார்கள். ஒருமுறை சேர நாட்டைச் சேர்ந்த வியாபாரிகள் வண்டிகளில் மிளகு மூட்டைகளை எடுத்துப் புறப்பட்டனர். இரவு நேரம் நெருங்கவே இந்த வனத்தில் தங்கிவிட்டு மறுநாள் புறப்படத் தீர்மானித்தனர். அப்போது இலந்தை மரத்தின் அடியில் குடிகொண்டிருந்த பைரவர் கிழ வடிவம் எடுத்து மிளகு வியாபாரி ஒருவரை நெருங்கினார். உடல் நிலை சரியில்லை, கஷாயம் வைக்க வேண்டும். நீங்கள் கொண்டு வந்த மூட்டையில் இருந்து சிறிது மிளகு எடுத்துத் தாருங்கள் என்றார். வியாபாரிக்கு அதில் விருப்பம் இல்லை. எனவே மூட்டைக்குள் இருப்பது மிளகு இல்லை, பாசிப்பயறு என்றார். கிழவரும் அப்படியா என்று கேட்டுவிட்டு அங்கிருந்து மறைந்தார்.

நாட்கள் ஓடின. மதுரைக்குப் போய்ச் சேர்ந்த வியாபாரிகள் பாண்டிய மன்னரிடம் ஒரு விலை பேசி சரக்குகள் அனைத்தையும் விற்றனர். மூட்டைகளை எடுத்துக் கிடங்கில் அடுக்குவதற்கு முன் அரண்மனைச் சிப்பந்தி ஒருவனிடம், ஒரு மூட்டையைப் பிரித்து உள்ளே இருப்பது மிளகுதானா என்று சோதிக்கும்படி பாண்டிய மன்னன் சொன்னான். அதன்படி சிப்பந்தி ஒரு மூட்டையைப் பிரிக்க, உள்ளே இருந்தவை பாசிப்பயறு. மிளகு வியாபாரிகளுக்கோ வியர்த்துவிட்டது. முகம் சுளித்த மன்னன், வேறொரு மூட்டையைப் பிரித்துப் பார்க்கச் சொன்னான். அதிலும் பாசிப்பயறு. இப்படி எல்லா மூட்டைகளிலுமே பாசிப்பயறு இருப்பதைக் கண்ட மன்னன், சேர நாட்டு வியாபாரிகள் தன்னை ஏமாற்ற முயன்றதாகச் சொல்லி அவர்களுக்குத் தண்டனை தரத் தீர்மானித்தான். அப்போது, பைரவரின் திருவிளையாடல் நிகழ்ந்தது. எந்த வியாபாரியிடம் பைரவர் மிளகு கேட்டாரோ, அவருக்கு திடீரென சாமி வந்தது. மிளகு மூட்டைகளை பாசிப்பயறு ஆக்கியது நான்தான்டா என்றார் அந்த வியாபாரி. மற்றவர்கள் நம்பினாலும் மன்னன் இதை நம்பத் தயார் இல்லை. எனவே சாமி ஆடிய செட்டியாரைப் பார்த்து “எனக்கு இருப்பது இரண்டு குழந்தைகள். பெண்ணுக்கு வாய் பேச முடியாது. பையனுக்கு நடக்க முடியாது. இந்த இரு குழந்தைகளையும் நீ குணப்படுத்தினால் நீ சொல்வதை நான் நம்புகிறேன்” என்றார்.

நான் குடிகொண்டிருக்கும் புற்றை அழித்து என்னை சந்நிதியில் குடியேற்று; அபிஷேகங்கள் செய்; மிளகு சாற்றி வழிபடு; உன் குழந்தைகளைக் குணப்பத்துகிறேன்” என்று வியாபாரி வடிவில் வந்த பைரவர் சொன்னார். பாண்டியமன்னனும் அதை சிரமேற்கொண்டு சேரநாட்டு எல்லைக்கு வந்தான். இலந்தை மரத்தின் அடியில் புற்றில் குடி கொண்டிருக்கும் பைரவரை வெளியே எடுத்தான். மண்டபம் கட்டி பிரதிஷ்டை செய்தான். பைரவருக்கு மிளகு சாற்றி வழிபட்டான். பைரவர் அருளியபடியே, எட்டுநாட்களில் மன்னனின் குழந்தைகள் நலம் பெற்றன. இதனால் இந்த பைரவரை “பயறாக்கிய முத்துவடுகநாத சுவாமி” என்றும் அழைப்பது உண்டு.

விடங்கர் தவம் இருந்த இடத்தில் விடங்கீஸ்வரர் இலிங்கத் திருமேனியை அமைத்தான். தவிர விசாலாட்சி அம்மன், கல்யாண சுப்ரமண்யர் மற்றும் பரிவார தேவதைகளை பிரதிஷ்டை செய்தான். ஏழு பிராகாரங்களையும் எட்டுத் தெப்பக்குளங்களையும் அமைத்தான். இந்த நிகழ்வுக்குப் பிறகு சாமி வந்து ஆடிய வியாபாரி பிரதிஷ்டை ஆன பைரவர் சந்நிதிக்குள் வழிபடுவதற்காக நுழைந்தார். ஆனால் திரும்பவே இல்லை. உள்ளேயே ஐக்கியமாகிவிட்டதாகக் கருதப்படுகிறது. இதுகுறித்து ஆலய அர்ச்சகர் நம்மிடம் சொல்லும்போது காவல் தெய்வமான பைரவருக்கே இங்கு காவலாக இருக்கிறார் செட்டியார். இதையே அவர் சந்நிதிக்குள் ஐக்கியமான நிகழ்ச்சி உணர்த்துகிறது. ஆதிசைவ சிவாச்சார்யர்கள், கொங்கு வேளாளர்கள், யாதவர்கள், வைசியர்கள், தேவர்கள், பண்டிதர்கள், செங்குந்தர்கள் என்று பல தரப்பட்ட குலத்தாருக்கும் இது குலதெய்வக் கோயிலாக விளங்குகிறது. ஆலய விசேஷத் திருநாட்களில் இவர்கள் குடும்பத்துடன் வந்து வழிபட்டுச் செல்கிறார்கள்.

ஆலயத்துக்குள் நுழைவதற்கு முன் திருக்குளம். இராஜகோபுரம் தாண்டி உள்ளே நுழைகிறோம். விடங்கீஸ்வரர் மற்றும் விசாலாட்சி ஆகிய திருவுருவங்கள் கிழக்கு நோக்கியவை. விடங்கீஸ்வரருக்கு இரு பக்கமும் மகா கணபதி, பாலமுருகன் ஆகிய விக்கிரகங்கள்.

காலபைரவ வடுகநாதரை வழிபட்டால் நவக்கிரகங்களால் ஏற்படும் தோஷங்கள் விலகும்.

விடங்கீஸ்வரர் கருவறை கோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, பிரம்மா, துர்கை ஆகிய திருவுருவங்கள் அருள் பாலிக்கின்றன. தவிர சந்திரன், சூரியன், நர்த்தன விநாயகர், பட்டக்காரர், கல்யாண சுப்ரமண்யர், சண்டிகேஸ்வரர், பலிபீடம், கருடாழ்வாருடன், கூடிய வரதராஜ பெருமாள், ஸ்ரீராமானுஜர், ஆஞ்சநேயர், நவக்கிரகம் போன்ற பல சந்நிதிகளுடன் ஆலயம் விரிவாக அமைந்துள்ளது.

இங்குள்ள சுப்ரமண்யர் சிலை, விசேஷமான ஓர் அம்சம். முருகனின் வாகனமான மயிலின் தலை, வழக்கத்துக்கு மாறாக இங்கு இடப்பக்கம் நோக்கி இருக்கிறது. சூர சம்ஹாரத்துக்கு முன் இந்திரன் மயிலாக இருந்து போருக்குச் சென்ற வடிவம் இது என்கிறார்கள், சிற்ப சாஸ்திர வல்லுநர்கள். தலவிருட்சம் இலந்தை மரம்.

ஆஞ்சநேயருக்கு சாற்றுவது போல் இவருக்கு வடை மாலை சாற்றப்படுகிறது. உளுந்து, மிளகு ஆகியவை கொண்டு தயார் செய்யப்படும் இந்த வடை மாலை சாற்ற விரும்புவோர், ஆலயத்தில் பணம் கட்டினால் போதும். வெண்பொங்கல் நைவேத்தியமும் இவருக்கு விசேஷம். தேங்காய் மூடியிலும் வெட்டப்பட்ட பூசணித் துண்டிலும் எண்ணெய் ஊற்றி சில பரிகாரத்துக்காக விளக்கேற்றுகிறார்கள்.