சென்னை: கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கையை கண்டு அஞ்சக்கூடாது, மாறாக மந்தை நோய் எதிர்ப்பு சக்தி கொண்டு இந்த வைரசை தடுத்து நிறுத்த முடியும் என்று முன்னாள் பொது சுகாதாரத் துறை இயக்குநர் குழந்தைசாமி கூறி உள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தொற்று கடந்த சில நாட்களாக உச்சத்தில் இருக்கிறது. தினமும் 500 பேருக்கு கொரோனா இருப்பதாக தமிழக அரசு தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பாக வெளியிடப்பட்டு வருகிறது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றன.
இந் நிலையில் தமிழக முன்னாள் பொது சுகாதாரத்துறை இயக்குநரான குழந்தைசாமி கொரோனா பரவல் பற்றியும், அதனை எதிர்கொள்ளும் முறைகளை பற்றியும் விரிவாக பேசி இருக்கிறார். கடந்த வாரம் தான் இப்பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.
7 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்குநர் பதவியை வகித்ததோடு, 2016ம் ஆண்டு வெள்ளம் முதல் கஜா புயல் வரை மாநிலத்தில் பல்வேறு நெருக்கடிகளை திறமையாக கையாண்டவர்.
முன்னதாக அவர் குறிப்பிடும் இந்த மந்தை நோய் எதிர்ப்பு சக்தி என்ன என்பதை பார்த்துவிடலாம். நோய் எதிர்ப்பு சக்தியின் மூவம் கொரோனா வைரஸை ஒன்றுமில்லாமல் செய்துவிடுவதுடன் உடலளவில் பலவீனமானவர்களையும் காப்பதுதான் ‘ஹெர்ட் இம்யூனிட்டி’ எனப்படும் மந்தை நோய் எதிர்ப்பு சக்தி வழிமுறையாகும்.
இன்னும் கொஞ்சம் விளக்கமாக இப்படி சொல்லலாம். அதாவது, ஓர் ஆட்டு மந்தையை சிங்கம் ஒன்று வேட்டையாட வருவதாக வைத்துக் கொள்வோம். சிங்கத்தின் பிடியில் இருந்து ஆடுகளை காப்பாற்ற, அந்த மந்தையில் உடலளவில் பலமாக உள்ள 60 முதல் 80 சதவீதம் வரையிலான ஆடுகளை கொண்டு, பாதுகாப்பு வளையத்தை அமைத்து சிங்கத்தை விரட்டியடித்து விட முடியும்.
இதன் மூலம், மந்தையில் பலவீனமாக உள்ள ஆடுகளையும் காப்பாற்றுவது தான் மந்தை எதிர்ப்பு சக்தி எனப்படும் ஹெர்ட் இம்யூனிட்டி. இந்த பார்முலாவை நாம் தொற்று நோய் பரவலுடன் பொருத்திப்பார்த்து நமது சவால்களை முறியடிக்க முடியும்.
அதாவது, ஒரு நாட்டின் மக்கள் தொகையில் பெரும்பான்மை சதவிகிதம் கொள்ளை நோய்க்கு எதிர்ப்பு சக்தியுடன் இருந்தால் மீதம் இருக்கும் எதிர்ப்பு சக்தி இல்லாத மக்களுக்கு நோய் பரவுவது தடுக்கப்படும். அப்படிப்பட்ட வழிமுறைதான் மந்தை நோய் எதிர்ப்பு சக்தி.
இனி அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்துள்ள பதில்களையும் பார்க்கலாம்:
கே: பொது சுகாதார இயக்குநராக இருந்த காலத்தில் நீங்கள் சந்தித்த மிகவும் சவாலான நெருக்கடி என்ன?
ப: கொரோனா வைரஸ் நிச்சயமாக எனது பதவிக்காலத்தில் நான் சந்தித்த மிகவும் சவாலான பிரச்சினை. மற்ற எல்லா நிகழ்வுகளிலும் – அது வெள்ளம் அல்லது சூறாவளியாக இருந்தாலும், பாதிக்கப்பட்ட பகுதி தெளிவாக வரையறுக்கப்படுகிறது. பிரச்சினையை தீர்க்க பிற பகுதிகளிலிருந்து, மாநிலத்திற்குள் அல்லது அதற்கு வெளியே அல்லது வேறு நாட்டிலிருந்து கூட உங்களுக்கு உதவிகள் கிடைக்கலாம். ஆனால் கொரோனா தொற்று விவகாரம் அப்படியல்ல. எங்கிருந்தும் உதவியை எதிர்பார்க்க முடியாத சூழ்நிலை. நம்முடைய சொந்த புவியியல் எல்லைகள், நம்மிடம் உள்ள வளங்களுடனும் இந்த விவகாரத்தை அணுக வேண்டும்.
கே: போதுமான வசதிகள் இல்லை என்று ஏன் நினைக்கிறீர்கள்?
ப: ஒட்டுமொத்த பொது சுகாதாரத் துறையை நாம் பலப்படுத்த வேண்டும். இதற்காக எங்களுக்கு அரசாங்கத்திடமிருந்து வசதிகளும், கவனமும் தேவை. எந்தப் பிரச்சினையும் இல்லாதபோது நாம் கண்ணுக்குத் தெரியாதவர்களாக இருக்கிறோம், நெருக்கடி எனும் போதுதான் நாம் திடீரென்று தெரிவோம். எந்தவொரு நாடும் முன்னேற, தொற்று நோய்களிலிருந்து விடுபட வேண்டும், எனவே இதற்காக வலுவான அமைப்புகளை உருவாக்க வேண்டும். சரியானதை நிர்வகிக்க சுகாதாரத் துறை ஊழியர்கள் ஏற்கனவே கூடுதல் நேரம் பணியாற்றுகின்றனர். பொது சுகாதாரம் மேலோங்குவதற்கு எங்களுக்கு கூடுதல் வசதிகள் தேவை. எங்களிடம் ஒரு வலுவான அமைப்பு உள்ளது, ஆனால் அதை நாம் பலப்படுத்த வேண்டும்.
கே: மந்தை நோய் எதிர்ப்பு சக்தியின் முக்கியத்துவத்தை நீங்கள் சில காலமாக வலியுறுத்தினீர்கள். அதை பற்றி விரிவாகக் கூற முடியுமா?
ப: காலவரையற்ற லாக்டவுன் தேவையில்லை. ஆரோக்கியமான நபர்களை அனைத்து மட்டங்களிலும் நடமாட நாம் அனுமதிக்கலாம். தொழிற்சாலைகள் பணியாளர்களுடன் தங்களது உற்பத்தியை தொடங்கலாம். கல்லூரிகள் ஜூலை மாதத்தில் செயல்பட ஆரம்பிக்கலாம், 9,10,11 மற்றும் 12 வகுப்புகள் ஆகஸ்டிலும், 6,7 மற்றும் 8 வகுப்புகள் செப்டம்பரிலும் தொடங்கலாம். தொடக்கப்பள்ளி அக்டோபரில் தொடங்கலாம். இந்த ஆண்டு மழலையர் பள்ளி திறக்க தேவையில்லை. கட்டுப்பாடுகளுடன் நாம் மக்களை நடமாட அனுமதிக்கலாம். ஒரு வருடம் இதை செய்வதன் மூலம், மந்தை நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ஒரு வருடத்தில் மந்தை நோய் எதிர்ப்பு சக்தி 60% ஆக அதிகரித்தால், வைரஸ் பரவுவதற்கான திறன் கடுமையாக முடக்கப்படும். ஆனாலும், பாதிக்கப்படக்கூடியவர்களைப் பாதுகாப்பதாக வைத்திருப்பது சவாலானதாக இருக்கும்.
கே: இதை எவ்வாறு செய்ய முடியும்?
ப: குறைந்த எதிர்ப்புச் சக்தி கொண்ட, 60 வயதுக்கு மேற்பட்டவர்களை இந்த நோய் பாதிக்கிறது. எங்கள் சவால் என்னவென்றால், வயதான மற்றும் பாதிக்கப்படக்கூடிய நபர்களை நாங்கள் அடையாளம் கண்டுகொண்டு அவர்கள் வீட்டிலேயே இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இளையவர்கள் தங்கள் பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம். நோயின் தீவிரத்தை மக்களுக்குப் புரிய வைப்பது கடினம். வயதானவர்களைத் தனிமைப்படுத்துவதற்கான ஒரு வழி என்னவென்றால், அவர்கள் கிராமங்களுக்குத் திரும்பிச் செல்ல அனுமதிக்க வேண்டும். எக்காரணத்துடன், நகரத்தில் தங்க வைக்கக்கூடாது. மற்றொரு அம்சம் நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்த நோயாளிகளைச் சரிபார்த்து, அவர்களின் உடல்நிலையை கட்டுக்குள் வைத்துக் கொள்வது தான். இது அவர்களுக்கு வைரஸை சிறப்பாக எதிர்த்துப் போராட உதவும்.
கே: கோயம்பேடு சந்தையில் இருந்து, தமிழகத்தில் எண்ணிக்கை சீராக அதிகரித்து வருகிறது. சந்தை பகுதி ஏன் போதுமான அளவில் பாதுகாக்கப்படவில்லை?
ப: நாங்கள் தேவையான நடவடிக்கைகளை எடுத்தோம், ஆனால் தொற்றுநோய் கட்டுப்பாடு மற்றும் வாழ்வாதாரத்திற்கு இடையில் சமநிலையை ஏற்படுத்த வேண்டியிருந்தது. நாங்கள் அனைத்து வாகனங்களையும் கிருமி நீக்கம் செய்தோம், மேலும் 1000 வண்டிகளை ஏற்பாடு செய்து அனைவருக்கும் கொண்டு சேர்க்கும் வகையில் நடவடிக்கை எடுத்தோம். ஆனால் மக்கள் சந்தைக்குச் செல்வதில் தான் அதிக ஆர்வம் காட்டினர். இது தேவையற்ற நடவடிக்கை. நாங்கள் சில்லறை விற்பனையை குறைத்திருந்தால், அது வர்த்தகர்களை பாதித்திருக்கும், மேலும் அவர்கள் உயிர்வாழ அதை விற்க வேண்டும்.
கே: சந்தை மூடப்படுவதற்கு முன்பு விற்பனையாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் ஏன் குறைந்தபட்சம் சோதிக்கப்படவில்லை?
ப: எண்களை பற்றி நாம் பயப்படக் கூடாத ஒரு கட்டத்தில் இப்போது இருக்கிறோம். ஆரோக்கியமான பெரியவர்களின் உடல்கள் வைரஸை எதிர்த்துப் போராடும். அவர்களின் பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டி நோய்த்தொற்று வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வைரஸ் பரவுகிறது, அதை நிறுத்த முடியாது. பாதிக்கப்படக்கூடியவர்களைப் பாதுகாப்பதில் நாம் பணியாற்ற வேண்டும். மந்தை நோய் எதிர்ப்பு சக்தி வரும் வரை, எண்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கும்.
கே: ஆனால் கேரளா போன்ற ஒரு மாநிலம் எண்களைக் குறைத்துள்ளது. நாம் அதை நோக்கி இப்போது பயணிக்க வேண்டிய நேரமா?
ப: வைரஸால் பேரழிவிற்குள்ளான நாடுகள், அதாவது பெரும்பாலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள இடங்களில், மக்கள் மந்தை நோய் எதிர்ப்பு சக்தியை வளர்ப்பதைக் கண்டிருக்கிறார்கள். எனவே, அந்த நாடுகள் பெரும் ஆரம்ப இழப்புகளை எதிர்கொண்டன, ஆனால் அவர்களுக்கு முன்னோக்கி செல்லும் பிரச்சினை அல்லது இழப்புகள் இருக்காது. வைரஸ் இனி பரவாது, அந்த நாடுகளில் இருந்து வருபவர்கள் மற்றவர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்த மாட்டார்கள். கேரளா போன்ற மாநிலங்களில் இப்போது கொரோனா இல்லை. இதன் பொருள் அவை நீண்ட காலத்திற்கு பாதிக்கப்படக்கூடியவை. இப்போது, இது ஒரு நன்மையாக இருக்கலாம், ஆனால் முன்னெச்சரிக்கைகள் அகற்றப்பட்டால், நகரங்களில் வைரஸ் பரவக்கூடும். கேரள கிராமப்புறங்களில் வீடுகள் ஒருவருக்கொருவர் வெகு தொலைவில் இருப்பதால் எந்த பிரச்சனையும் இருக்காது. கோழிக்கோடு அல்லது திருவனந்தபுரம் பகுதியில் கொரோனா வைரஸ் மீண்டும் வந்தால் கடுமையான பிரச்சினைகளை சந்திக்க நேரிடும், ஏனெனில் அங்கு மந்தை நோய் எதிர்ப்பு சக்தி இல்லை.
கே: ஆனால் கேரளாவில் கொரோனா தொற்றுகள் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளன. அதே நேரத்தில் இங்கு இல்லை. இது ஏன்?
ப: இங்கு இருப்பதை போன்று தப்லிகி ஜமாஅத் மாநாட்டிலிருந்து அதிகம் பேர் வந்தவர்கள் அங்கு இல்லை. மேலும் தமிழ்நாட்டில் மக்கள் அடர்த்தி மிகவும் அதிகமாக உள்ளது, குறிப்பாக நகரங்களில். நமது தர்மபுரி அல்லது கிருஷ்ணகிரி பகுதிகளில் இருக்கும் மக்கள் கூட்டத்தின் அளவு தான் கேரளாவில் இருக்கும். தொற்றுகள் இல்லாதது ஆபத்தானது, ஏனெனில் நிரந்தரமாக ஆபத்து நீடிக்கும். நாம் செய்ய வேண்டியது தொற்றுகளை தாமதப்படுத்துவதும், வயதானவர்களையும் பாதிக்கப்படக் கூடியவர்களையும் பாதிக்காத வகையில் அதைக் கட்டுப்படுத்துவதும் ஆகும்.
கே: லாக்டவுன் நீக்கப்பட்ட பிறகு செயல்பாட்டுக்கு வர வேண்டிய பரந்த வழிகாட்டுதல்கள் எவை?
ப: மொத்தம் 7 முக்கிய அம்சங்கள் வழியாக நாம் இதை எதிர்நோக்க வேண்டும்.
- சாலைகள், கட்டிட நுழைவாயில்கள், கட்டிடங்கள்,பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் போன்ற இடங்களில் சோப்பு மற்றும் தண்ணீர் கொண்டு கைகள் கழுவும் வசதி.
- முகக்கவசங்கள் பயன்பாட்டை செயல்படுத்துதல்.
- நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்த கட்டுப்பாட்டு பற்றி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்வது.
4.60 மற்றும் அதற்கு மேற்பட்ட பாதிக்கப்படக்கூடியவர்கள் என்று வகைப்படுத்தப்படுவர்களை வீடுகளிலேயே தனிமைப்படுத்துதல்
- ஓய்வு பெற்ற நபர்கள் அல்லது 60 வயதிற்கு மேற்பட்டவர்கள், நகரங்களில் எந்த தேவையும் இல்லாதவர்கள், சொந்த கிராமங்கள், மூதாதையர் வீடுகளுக்கு கொண்டு செல்வது.
- புற்றுநோய் மருத்துவமனைகள், அனாதை இல்லங்கள், மனநல குறைபாடுகள் உள்ளவர்களுக்கான மையங்களை நாம் பாதுகாப்பது.
- நகரங்களின் ஒருங்கிணைப்பு ஆகியவற்றின் மூலம் நாம் இதை செய்யலாம் என்று அவர் கூறினார்.