சென்னை:

பேனர் காரணமாக சுபஸ்ரீ பலியான நிலையில், ரூ.1 கோடி நஷ்டஈடு கேட்டு அவரது தந்தை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, வழக்கை விசாரித்த நீதிபதிகள், சீன அதிபர் வருகையால் சென்னை சுத்தமாகி உள்ளது என்றும், சென்னை தொடர்ந்து சுத்தமாக இருக்க தினசரி ஒரு தலைவர்கள் வரவேண்டும்போல என்று கூறினார்.

சுபஸ்ரீ மரணத்துக்கு ரூ.1 கோடி நஷ்டஈடு வழங்கக்கோரி தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதி மன்ற நீதிபதிகள்  எஸ்.வைத்தியநாதன், சி.சரணவன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,  ‘சுபஸ்ரீ பலியானது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளை கண்காணிக்க போலீஸ் கமி‌ஷனருக்கு ஏற்கனவே உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு இருப்பதாகவும், வழக்கு தொடர்பாக ஜெயகோபால், மேகநாதன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர், மேலும், இடைக்கால இழப்பீடாக ரூ.5 லட்சம் வழங்கப்பட்டு விட்டது என்று கூறினார்.

அதையடுத்து,  மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘சுபஸ்ரீ பலியானது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 2 வழக்குகளை சிறப்பு புலனாய்வு பிரிவு மூலம் விசாரணை நடத்த வேண்டும்’ என்று வலியுறுத்தினார்.

அதையடுத்து கூறிய நீதிபதி, ‘ஏற்கனவே, சுபஸ்ரீ மரணம் தொடர்பான கோர்ட்டு அவமதிப்பு வழக்கை நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், என்.சே‌ஷசாயி ஆகியோர் அமர்வு விசாரித்து வருகிறது. அந்த வழக்குடன் இந்த வழக்கை விசாரிக்க அதே அமர்வுக்கு பரிந்துரை செய்கிறோம்’ என்று உத்தரவிட்டனர்.

மேலும், சென்னைக்கு சீன அதிபர் வருகிறார் என்றதும், சென்னை மாநகரே சுத்தமாக உள்ளதாக தெரிவித்தவர், தமிழகத்துக்கு தினமும் உலக தலைவர்கள் வந்தால், எப்போதுமே சுத்தமாக இருக்கும் என்று கருத்து தெரிவித்தார்.