சென்னை:

கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டுள்ள சந்தைகளை திறக்க வலியுறுத்தி ஆகஸ்டு 10ந்தேதி தமிழகம் முழுவதும் கடையடைப்பு நடத்தப்படும் தமிழ்நாடு வணிகர்கள் பேரவை தலைவர் ஏ.எம் விக்கிரமராஜா அறிவித்து உள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த நிலையில் 7வது கட்ட ஊரடங்கு ஆகஸ்டு 31ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. சென்னை உள்பட மாவட்டங்களிலும் தொற்று பரவல் தீவிரமடைந்து உள்ளது. தற்போதைய நிலையில்,  கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,63,222 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,241 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்று பரவலுக்கு பெரிதும் காரணமாக திகழ்ந்த சென்னை கோயம்பேடு மார்க்கெட் உள்பட  தமிழகம் முழுவதும் பெரும்பாலான மார்க்கெட்டுகள் மூடப்பட்டு, வணிகர்களுக்கு மைனதானங்களில் சமூக விலகளுடன்  வியாபாரம்  செய்ய அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், சென்னையில் அடைக்கப்பட்டுள்ள  கோயம்பேடு மார்க்கெட் உள்பட பிற மாவட்டங்களில் மூடப்பட்டுள்ள மார்க்கெட்டுகளையும் திறப்பது தொடர்பாக  சென்னை புரசைவாக்கத்தில் வணிகர்கள் சங்க பேரமைப்பு ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த விக்கிரமராஜா,

கோயம்பேடு சந்தையை மீண்டும் திறக்க வலியுறுத்தி, வரும் 10ஆம் தேதி தமிழகம் முழுவதும் காய்கறி, பூ, பழ கடைகள் மற்றும் மார்க்கெட்டுகள் அடைக்கப்படும் என  தெரிவித்தார்.

மேலும், அன்றைய  ஒரு நாள் போராட்டத்திற்கு அரசு செவிசாய்க்கவில்லை என்றால் தொடர் போராட்டம் நடத்தப்படும்.

திருமழிசை சந்தையில் போதிய வசதிகள் இல்லாததால் டன் கணக்கில் காய்கறிகள் வீணாகின்றன என்று குற்றம்சாட்டிய விக்கிரமராஜா, கோயம்பேடு சந்தையை மீண்டும் திறக்க வியாபாரிகள் முழு ஒத்துழைப்பு கொடுக்க தயார் என்று கூறினார்.

கோயம்பேடு சந்தையில் உள்ள கடைகள் மறுபடியும் அதே வியாபாரிகளுக்குத்தான் கிடைக்கும் என்றும், இதுதொடர்பாக வதந்திகள் பரப்பப்படுவதாகவும் தெரிவித்தவர், வரும்  10 ஆம் தேதி தமிழகத்தில் அனைத்து காய்கறி மற்றும் பூ மார்க்கெட் மூட வியாபாரிகள் முடிவெடுக்கப்பட்டு உள்ளது என்றும் கூறினார்.