கடலூர்
அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டிருந்த 123 கடைகளை அகற்றிய மாநகராட்சி அதிகாரி வாகனம் முன்பு முற்றுகை போராட்டம் நடந்துள்ளது.
கடலூரில் உள்ள கடற்கரைச் சாலை, பழைய ஆட்சியர் அலுவலக சாலை மற்றும் வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகம் ஆகிய பகுதிகளில் சாலையோரமாக நூற்றுக்கணக்கான கடைகள் இருந்து வருகின்றன. மாநகராட்சியில் உரிய அனுமதி பெற்று சில கடைகள் இயங்கி வருகின்றன. ஆனால் பல கடைகள் அனுமதி இல்லாமல் ஆக்கிரமிப்பு செய்து இயங்கி வருகின்றன.
எனவே கடலூர் மாநகராட்சி சார்பில் சாலையோரமாக 123 கடைகள் ஆக்கிரமித்து இயங்கி வருவதாகக் கணக்கெடுத்து அதன் உரிமையாளருக்கு உரிய நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆக்கிரமிப்பு செய்துள்ள கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தினார்கள்.
இன்று காலை மாநகராட்சி ஆணையாளர் காந்திராஜ் உத்தரவின் பேரில் மாநகராட்சி செயற்பொறியாளர் கலைவாணி தலைமையில் அதிகாரிகள் குருமூர்த்தி, பாஸ்கரன் மற்றும் 20-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு 2 ஜே.சி.பி. மற்றும் 4 டிப்பர் வாகனம் கொண்டு வந்தனர்.
இங்கு அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க 2 0க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். நீதிமன்றம் வளாகம் உள்ள இருந்த ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றும் பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.
மாநகராட்சி உறுப்பினர் அருள்பாபு மற்றும் அங்குக் கடை வைத்திருப்பவர்கள் மாநகராட்சி அதிகாரிகள் வந்த வாகனத்தை முற்றுகையிட்டு தாங்கள் காலம், காலமாக இங்குக் கடை நடத்தி வருவதால் இங்குள்ள கடைகளை அகற்றக் கூடாது எனவும் தங்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் எனவும் வாக்குவாதம் செய்தனர்.
அங்கிருந்த அதிகாரிகள் இது குறித்து மேல் அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும் எனக் கூறி ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். கடை உரிமையாளர்கள் துணை மேயர் தாமரைச்செல்வன் தலைமையில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றிக் கொண்டிருந்த அதிகாரியிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
கடைக்காரர்கள் ,
”தற்போது அகற்றப்படும் கடைகளுக்குக் கூடுதலாக 15 நாட்கள் அவகாசம் வழங்கி கடைகளை அப்புறப்படுத்த அவகாசம் வழங்க வேண்டும். மேலும் கடந்த பல ஆண்டுகளாக ஏற்கனவே நகராட்சியிடம் இருந்து உரிய அனுமதி பெற்று வாடகை செலுத்தி வரும் கடைகளுக்கு நிரந்தரமாக அனுமதி வழங்க வேண்டும்”
எனக் கோரிக்கை விடுத்தனர்.
அதிகாரிகள்,
”முதல் கட்டமாக தற்போது ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்கின்றோம். மேலும் 15 நாட்களுக்குப் பிறகு ஆக்கிரமிப்பு கடைகள் இருந்தால் கண்டிப்பாக அகற்றும் நடவடிக்கையில் மாநகராட்சி ஈடுபடும். வேறு ஏதேனும் கோரிக்கைகள் இருந்தால் மாநகராட்சி ஆணையாளரிடம் மனு அளித்து நடவடிக்கை மேற்கொள்ளுங்கள்”
எனத் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் கடலூரில் கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.