டில்லி:
டிஆர்டிஓ பவனில் வடகிழக்கு கருத்தரங்கம் நடந்தது. இதில், ராணுவத் தளபதி பிபின் ராவத் பேசுகையில்,‘‘ அசாமில் பாஜக.வை விட அனைத்து இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி (ஏஐயுடிஎப்) வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த பகுதியில் ஜாதி, மதம், சமயம், பாலின வேறுபாடின்றி மக்கள் வசிப்பது பாராட்டுக்குறியது.
ஒற்றுமையுடன் இருந்தால் மகிழ்ச்சியுடன் வாழலாம் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். அதோடு ஒற்றுமையாக இருக்கும் மக்கள் மத்தியில் பிரச்னைகள் ஏற்படுத்த முயற்சி செய்வோரை அடையாளம் காண வேண்டும் ’’ என்றார்.
ராவத்தின் இந்த கருத்த கண்டித்துள்ள ஏஐயுடிஎப் தலைவர் பத்ருதீன் அஜ்மல் கூறுகையில், ‘‘ராணுவ தளபதி அரசியல் குறித்து பேசுவது அதிர்ச்சியளிக்கிறது. முக்கிய அரசியல் கட்சிகளின் செயல்பாடு சரியில்லாத காரணத்தால் தான் எங்கள் கட்சி வளர்ச்சி அடைந்து வருகிறது.
இதில் ராணுவ தளபதிக்கு என்ன கவலை என்று தெரியவில்¬. பெரிய கட்சிகளின் தவறான நிர்வாகம் காரணமாக ஏஐயுடிஎப் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் வளர்ச்சி அடைந்துள்ளன. அரசியலமைப்புக்கு எதிராக தளபதி பேசியுள்ளார்’’ என்று தெரிவித்துள்ளார்.
அகில இந்திய மஜ்லிஸ் இ இத்தேஹதுல் முஸ்லீமின் தலைவர் அசாதுதீன் ஒவைசி கூறுகையில், ‘‘அரசியல் கட்சியின் வளர்ச்சி குறித்து பேசுவது ராவத்தின் பணியல்ல. ஜனநாயகமும், அரசியலமைப்பும் பலதரப்பட்ட அரசியல் கட்சிகள் வளர்வதற்கு அனுமதி வழங்கியுள்ளது. ராணுவம் எப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதியின் தலைமையில் கீழ் தான் பணியாற்ற வேண்டும்’’ என்றார்.