தமிழகத்தில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 40 சதவீத நோயாளிகள் மருத்துவமனையில் சேர்ந்த முதல் மூன்று நாட்களிலேயே உயிரிழந்திருக்கும் அதிர்ச்சி செய்தி வெளியாகி இருக்கிறது.

கொரோனா நோய் குறித்த தரவுகளை ஆய்வு செய்யும் தரவு ஆர்வலர் விஜய் ஆனந்த் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் விரிவாக பதிவிட்டிருக்கிறார்.

ஜூன் மாதம் 1 ம் தேதி முதல் 6 ம் தேதி வரை 2767 பேர் உயிரிழந்திருக்கும் நிலையில், அதில் 18 சதவீதம் பேர் அதாவது 505 நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல் நாளிலேயே உயிரிழந்திருக்கின்றனர்.

இரண்டு நாட்களில் 29 சதவீத அளவுக்கு 798 பேர் உயிரிழந்துள்ளனர். இரண்டாவது நாளில் மேலதிகமாக 11 சதவீதம் 293 பேர் உயிரிழந்துள்ளனர்.

மூன்று நாட்களில் 40 சதவீதம் பேர் அதாவது 1093 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.

மருத்துவமனையில் சேர்ந்த முதல் ஒருவாரத்தில் மட்டும் கிட்டத்தட்ட 70 சதவீதம் பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழக்க நேரிடுகிறது.

கொரோனா நோய் அறிகுறி தென்படுபவர்கள் உடனடியாக மருத்துவரையோ, மருத்துவமனையையோ நாடி ஆரம்பத்திலேயே சிகிச்சை மேற்கொள்ளவேண்டியதன் அவசியத்தை உணர்த்துவதாக இந்த புள்ளிவிவரங்கள் இருப்பதாக அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.