டெல்லி: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் இன்று தாக்கல் செய்த பொது பட்ஜெட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கான நிதியை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு  30% குறைதுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ள கிராமப்புற ஏழை மக்களும்  பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்திரவாத திட்டம் (Mahatma Gandhi National Rural Employment Guarantee Scheme – MNREGS) என்றறியப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்திரவாதச் சட்டம் (Mahatma Gandhi National Rural Employment Guarantee Act-MGNREGA) எனும் இந்தியச் சட்டமானது 2005 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 அன்று இயற்றப்பட்டது. இது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள அரசு நெறிமுறைக் கொள்கைகளின் 41வது சரத்தின் கீழ் வரும்  வேலைக்கான உரிமையை ஆதாரமாகக் கொண்டது.

இச்சட்டமானது கிராமப்புற குடும்பங்களில் உள்ள திறன் சாரா உடல் உழைப்பில் ஈடுபட விருப்பமுள்ள அனைத்து வயது வந்த உறுப்பினர்களுக்கும் வருடத்திற்கு அதிகபட்சமாக 100 நாட்கள் ஊதிய வேலை வாய்ப்பிற்கு உத்திரவாதம் அளிக்கின்றது. இந்திய அரசின் ஊரக மேம்பாட்டு அமைச்சகமானது மாநில அரசுகளுடன் இணைந்து இச்சட்டத்தின் செயல்பாடுகளை கண்காணித்து வருகின்றது. உலக வங்கியானது அதன் 2014 ஆம் ஆண்டிற்கான “உலக மேம்பாட்டு அறிக்கையில்” இத்திட்டத்தினை “கிராமப்புற வளர்ச்சியின் மிகச்சிறந்த உதாரணம்” எனக் குறிப்பிட்டுள்ளது.

ஆனால், இந்த திட்டம் முறையாக செயல்படுத்துவதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருகின்றன. முறையாக பணிகள் செய்யப்படுவது இல்லை என்றும், அதற்கான ஊதியமும் முறையாக கொடுப்பதில் முறைகேடுகள் நடைபெறுவதாகவும் குற்றச்சாட்டுக்கள் உள்ளன. இதுதொடர்பான வழக்குகளும் உள்ளன. ஆனால், கிராமப்புற ஏழை மக்களின் வாழ்வாதாரத்துக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் பேருதவியாக இருந்து வருகிறது. இதனால் பல கோடி பேர் தங்களின் வாழ்க்கை கழித்து வருகின்றனர்.

ஆனால், மத்திய பாஜக அரசு ஏழை மக்களின் வயிற்றில் அடிக்கும் வகையில், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மேலும் 30சதவிகிதம் நிதியை குறைத்துள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த திட்டத்துக்கு கடந்த  2021-22ம் ஆண்டு பட்ஜெட்டில் 98,468 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், 2022-23 பட்ஜெட்டில், அது 73000 கோடியாக குறைக்கப்பட்டது. இது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியது. இதையடுத்து கடந்த ஆண்டு (2022–23) பட்ஜெட்டில், இதற்கான நிதி மத்தியஅரசு உயர்த்தியது. அதன்படி, 89,400 கோடியாக அறிவித்தது. இந்த நிலையில், தற்போது அதற்கான நிதியை 30 சதவிகிதம் அளவுக்கு குறைத்துள்ளது. அதாவது, 60ஆயிரம் கோடி மட்டுமே அறிவித்துள்ளது. இது கடந்த ஆண்டை விட,29,400 கோடி குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.