மும்பை:

மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் கவர்னர் உரை குஜராத்தி மொழியில் ஒலிபரப்பானதால் எம்எல்ஏ.க்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

மகாராஷ்டிரா சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கவர்னர் வித்யாசாகர் ராவ் உரையுடன் இன்று தொடங்கியது. இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் கவர்னர் உரையாற்றினார். வழக்கமாக ஆங்கிலத்தில் கவர்னர் உரையை வாசிப்பார். அது உறுப்பினர்களுக்கு மராத்தியில் மொழிபெயர்க்கப்பட்டு ஒலிபரப்பாகும். இதை எம்எல்ஏ.க்கள் ஹெட்போன்கள் மூலம் கேட்பார்கள்

ஆனால், இன்று கவர்னரின் பேச்சு சிறிது நேரம் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பானது. அதன் பின்னர் குஜராத்தி மொழியில் மொழிபெயர்ப்பானது. இதனால் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் ஆவேசமடைந்து கோஷம் எழுப்பினர்.

சட்டமன்றத்தில் இப்பிரச்னை விஸ்வரூபம் எடுத்ததை தொடர்ந்து முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் பகிரங்க மன்னிப்பு கோரினார். இதன் பின்னர் மராத்தி மொழி பெயர்ப்பு ஒலிபரப்பானது. சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் அறிவித்தார்.

நாளை மராத்தி மொழி தினம் மகாராஷ்டிராவில் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் இதற்கு முந்தைய நாள் சட்டமன்றத்தில் இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.