மும்பை: சிவசேனா எம்எல்ஏக்கள் 40 பேர் முன்னாள் அமைச்சர் ஷிண்டே தலைமையில் போர்க்கொடி தூக்கி உள்ளதால், உத்தவ் தாக்கரே அரசு ஆட்டம் கண்டு வருகிறது. இந்த நிலையில், சிவசேனா தொண்டர்கள் வீதியில் இறங்கினால் தெருக்கள் தீப்பற்றி எரியும்  என்றும்,  அதிருப்தி எம்எல்ஏக்கள் குடும்பம் இங்குதானே உள்ளது என்று சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளார்.

இதைத்தொடர்ந்து அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு சொந்த இடங்களில் வன்முறை வெடித்துள்ளது. இதனால் மும்பை உள்பட சில மாவட்டங்களில் 144 தடை விதிக்கப்பட்டு உள்ளது.

மகாராஷ்டிரா சட்டசபையில் உள்ள 288இடங்களில் பாஜகவுக்கு 106 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். 2019 தேர்தலில் பாஜகவுடன் இணைந்து போட்டி யிட்ட சிவசேனாவுக்கு 55 இடங்கள் கிடைத்தன. ஆனால் அதிகார மோதல் காரணமாக, சிவசேனா பாஜகவிடம் இருந்து விலகி, காங்கிரஸ் தேசியவாத காங்கிரசுடன் இணைந்து கூட்டணி ஆட்சி நடத்தி வருகிறது.

இந்த நிலையில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கும் நிலையில், தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணியிலிருந்து விலக வேண்டும் எனக் கோரி, சிவசேனா கட்சியின்  மூத்த தலைவரும், மாநில அமைச்சருமான ஏக்நாத் ஷிண்டே போர்க்கொடி தூக்கி உள்ளார். அவருக்கு , 40 சிவசேனா எம்எல்ஏ- க்களும், ஏழு சுயேச்சை எம்எல்ஏ- க்களும்,  ஆதரவு தெரிவித்து உள்ளனர். இவர்கள் தங்கள் பதவிகளை துறந்தாலோ, பாஜகவுக்கு நேரடியாக ஆதரவு வழங்கினாலோ, உத்தவ் தாக்கரே அரசு கவிழும் நிலை உருவாகி உள்ளனத.

தற்போது அதிருப்தியாளர்கள் அனைவரும் அஸ்ஸாம் மாநிலம், கவுஹாத்தியில் உள்ள  ஹோட்டல் ஒன்றில்  தங்கியுள்ளனர். இதனால், மகாராஷ்டிராவில் அரசியல் நெருக்கடி  தீவிரமடைந்து வருகிறது. இதைத்தொடர்ந்து முதல்வர் பதவியை விலக தயார் என்று கூறிய உத்தவ் தாக்கரே அரசு இல்லத்தை விட்டு காலி செய்து, தனது சொந்த வீட்டுக்கு திரும்பினார். இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இநத் நிலையில், அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில், சிவசேனா நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ராவத் சர்ச்சைக்குரிய வகையில் பேசி பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளார். சிவசேனா தொண்டர்கள் வீதியில் இறங்கினால் தெருக்கள் தீப்பற்றி எரியும்  மிரட்டல் விடுத்துள்ளதுடன், அதிருப்தி எம்எல்ஏக்கள்தான் அங்கு (அசாம்) உள்ளனர். ஆனால், அவர்கள் குடும்பத்தினர் இங்குதானே உள்ளனர் என மிரட்டல் விடுத்தார்.

இதையடுத்து, அதிருப்தி எம்எல்ஏக்கள் சார்பில், கவர்னர் கோஷ்யாரிக்கு அவசர கடிதம் எழுதப்பட்டு உள்ளதாகவும், அதில் தங்களது குடும்பத்தி னருக்கு தேவையான பாதுகாப்பு வழங்கும்படி கோரப்பட்டு உள்ளதாக கூறப்பதுகிறது.

இதற்கிடையில், அதிருப்தி எம்எல்ஏக்களின் அலுவலகம் உள்பட சில இடங்களில் சிவசேனா தொண்டர்கள் தாக்குதல் நடத்தி வருகின்னர். புனேயில் அதிருப்தி எம்எல்ஏ தானாஜி சாவந்த் அலுவலகத்தை சிவசேனா தொண்டர்கள் அடித்து நொறுக்கினர்

இதுகுறித்து கருத்து தெரிவித்த சஞ்சய்ராவத்,  சட்டமன்ற உறுப்பினர்களுக்குத்தான் பாதுகாப்பு அளிக்க முடியும் என்றும், அவர்களின் குடும்பத்தி னருக்கு பாதுகாப்பு அளிக்க முடியாது என்றும் கூறி மேலும் பதற்றத்தை உருவாக்கினார்.

இதைத்தொடர்ந்து,  தானேயில் உள்ள ஏக்நாத் சிண்டே வீட்டுக்குப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சிவசேனாவின் கிளர்ச்சி எம்எல்ஏவும், மூத்த தலைவருமான ஏக்நாத் ஷிண்டேவின் கோட்டையாக புனே உள்ளது. இதனால் மேலும் வன்முறைகள் ஏற்படாமல் இருக்கும் வகையில், மும்பை, தானே, புனே நகரங்களில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  தற்போது 5 பேருக்கு மேல் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மும்பை காவல்துறையின் இந்த உத்தரவு ஜூலை 10வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.  பதற்றமான சூழ்நிலையை சமாளிக்க, மாநில காவல்துறை இந்த உத்தரவை அமல்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், இன்று கூடிய  சிவசேனா தேசியச் செயற்குழுக் கூட்டத்தில் பேசிய உத்தவ் தாக்கரே, அதிருப்தியாளர்கள் என்ன முடிவெடுத்தா லும் அதில் தான் தலையிடப் போவதில்லை என்றும், எவரும் பால்தாக்கரே பெயரைப் பயன்படுத்தக் கூடாது என்றும் தெரிவித்தார்.

மேலும், தங்கள் குடும்பத்தினருக்குப் பாதுகாப்பு அளிக்கக் கோரி ஏக்நாத் சிண்டே தலைமையிலான எம்எல்ஏக்கள் கடிதம் எழுதியுள்ள நிலையில், எம்எல்ஏக்களின் வீடுகளுக்கு அளிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு திரும்பப் பெறப்படவில்லை என மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் திலீப் வல்சே பாட்டீல் தெரிவித்துள்ளார்.

இந்த பரபரப்பான சூழலில், அசாமில் முகாமிட்டுள்ள சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்கள் முதலமைச்சர் உத்தவ் தக்கரே, மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் திலிப் வால்சே பாட்டில், டிஜிபி ரஜ்னிஷ் சேத் மற்றும் அனைத்து காவல் ஆணையர்களுக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில், “தங்கள் குடும்பத்தினருக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பை மகாராஷ்டிரா அரசு வாபஸ் பெற்றுவிட்டதாக கூறியுள்ளனர். பழிவாங்கும் விதமாக சட்டவிரோதமான முறையில் பாதுகாப்பு பறிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதனிடையே மும்பையில் பாஜக சட்டமன்றக் குழுத் தலைவரான தேவேந்திர பட்னாவிஸ் இல்லத்தில் பாஜகவினரும், மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலேயும் கூடி ஆலோசனை நடத்தினர்.