சென்னை:

மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் ஐ.ஜி அலுவலகம் எதிரே இருந்த  நடிகர் சிவாஜி கணேசன் நள்ளிரவு அதிரடியாக அகற்றப்பட்டு, சிவாஜி கணேசனின் மணி மண்டபத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாகக் கூறி சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட பொதுநல வழக்கில், உயர்நீதி மன்றம் சிவாஜி சிலையை அகற்ற உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், இன்று அதிகாலை, சிவாஜி சிலை அகற்றப்பட்டு அடையாறில் உள்ள சிவாஜி மணி மண்ட பத்தில் வைக்கப்பட்டுள்ளது.

நடிகர் திலகம் சிவாஜி சிலை அகற்றப்பட்டதற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், நடிகர் மன்சூர் அலிகான் உள்பட பலர் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்  திருநாவுக்கரசர்:

‘பெரியார், காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர், அம்பேத்கர் உள்பட எல்லா தலைவர்களுக்குமே மணிமண்டபம் அல்லது நினைவிடம் தனியாகவும், சிலைகள் தனியாகவுமே உள்ளது. அதுபோல் சிவாஜி கணேசனுக்கும் மணிமண்டபமும் சிலையும் தனித்தனியாக அமைவதுதான் பொருத்தமாக இருக்கும்.  அதோடு, தலைவர்கள், அறிஞர்களின் சிலைகள் பொதுமக்கள் பார்வையில் படும்படியான இடத்தில் அமைப்பதுதான் சிறப்பு.

அதுமட்டுமின்றி, சிவாஜிகணேசனுக்கு சென்னையில் அமைந்துள்ள ஒரே சிலையாக இது உள்ளது. எனவே, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், நடிகர்திலகத்தின் சிலையை தற்போதிருக்கும் இடத்திலிருந்து மாற்றியமைக்கும்போது, சென்னை, கடற்கரை சாலையிலேயே, காந்தி சிலைக்கும் காமராஜர் சிலைக்கும் நடுவில் மாற்றி அமைக்கவேண்டும் என்றும்  மணிமண்டபத்தில், நடிகர்திலகத்தின் வேறு சிலையை அமைக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்’.

தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர்  ஈவிகேஎஸ் இளங்கவோன்:

தமிழ்நாட்டில் காங்கிரஸ் என்றாலே காமராஜரும், சிவாஜி கணேசனும்தான் என்பது ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டனுக்கும் தெரியும். அந்த அப்பழுக்கற்ற நடிகர் திலகத்தின் சிலையை ஒதுக்குப்புறமாக மணிமண்டபத்துக்குள் வைப்பது கவுரவமாக இருக்காது.

சத்தியமூர்த்தி பவனில் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை அவரது படத்தை வைத்து கொண்டாடிய இப்போதைய தலைமைக்கு சிவாஜி கணேசனின் சிலை கடற்கரையில் உள்ள தலைவர்களின் சிலையின் வரிசையில் வைக்க நடவடிக்கை எடுக்காதது வருத்தம் அளிக்கிறது.

எம்.ஜி.ஆருக்கு காட்டிய ஆர்வத்தை காங்கிரஸ் தலைமை, காங்கிரசை வளர்த்த தலைவனுக்கு ஆர்வம் காட்டாதது நிச்சயமாக ஒவ்வொரு தொண்டனையும் வருத்தத்தில் ஆழ்த்தும்.

பாமக தலைவர் ராமதாஸ்

சிவாஜி சிலையால் விபத்துகள் ஏற்படுவதாகவும், அதனால் அதை அகற்றக் கோரியும் 2006 ஆம் ஆண்டு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. சிவாஜி சிலையை அகற்ற முடியாது என்று உயர்நீதிமன்றம் இடைக்கால தீர்ப்பளித்தது.

2013 ம் ஆண்டு இது தொடர்பான வழக்கு விசாரணையின்போது, சிவாஜி சிலையால் சாலை விபத்துகள் எதுவும் ஏற்படவில்லை என்றும், சிவாஜி சிலையை அகற்றத் தேவையில்லை என்றும் தமிழக அரசு தெரிவித்தது.

ஆனால், அடுத்த சில நாட்களில் தனது நிலைப்பாட்டை தமிழக அரசு மாற்றிக்கொண்டு, சிவாஜி சிலையால்தான் விபத்துகள் ஏற்படுவதாகவும், எனவே சிலையை அகற்றலாம் என்றும் கூறியது. இதனடிப்படையில், சிவாஜி சிலையை அகற்ற உயர்நீதிமன்றம்
உத்தரவிட்டது.

சிலை அமைக்ப்பட்டு 7 ஆண்டுகளில் அப்பகுதியில் எந்த விபத்தும் ஏற்படாத நிலையில், விபத்துகள் ஏற்பட்டதாக பொய்யான தகவலை நீதிமன்றத்துக்கு வழங்கி சிலை அகற்றும்படி நீதிமன்றமே உத்தரவிடும் நிலையை ஏற்படுத்தியது  அப்போதைய ஜெயலலிதா அரசு
திட்டமிட்டு செய்த சதி.

தற்போது சிவாஜி  சிலை இரவோடு இரவாக அகற்றியிருப்பது இரண்டாவது சதி என்றும் கூறியுள்ளார்.

சிவாஜி சிலையை அகற்றவதற்காகவே தமிழக அரசு திட்டமிட்டு பல நடவடிக்கைகளை எடுத்ததை அவரது ரசிகர்கள் மன்னிக்க மாட்டார்கள். இப்போது கடற்கரை சாலையில் இருந்து அகற்றப்பட் சிலை, அவரது மணி மண்டபத்தில் வைக்கப்பட்டுவிட்ட நிலையில், அதேபோன்ற  புதிய சிலை ஒன்றை தயாரித்து அதை மெரினா கடற்கரையில் காந்தி மற்றும் காமராஜர் சிலைகளுக்கு இடையில் நிறுவ வேண்டும் என்றும் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளர்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 90 ஆவது பிறந்தநாள் வரும் அக்டோபர் ஒன்றாம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், அவரது புதிய சிலையை, அந்த நாளில் அரசு திறக்க வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்:-

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலையை நடு நிசியில் அகற்றி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. போக்குவரத்திற்கு இடையூறு என்று காரணம் காட்டி தொடரப்பட்ட வழக்கில் அதனை அப்புறப்படுத்த வேண்டும் என்று உயர்நீதிமன்றம் ஆணையிட்டு இருப்பது வியப்பாக உள்ளது.

போக்குவரத்துக்கு இடையூறாக எத்தனையோ ஆக்கிரமிப்புகள் சென்னையில் உள்ளன. குறிப்பாக சாலையின் நடுவே பல தலைவர்கள் சிலைகள் உள்ளன. அதே போல சிவாஜி கணேசன் சிலையும் சாலையின் நடுவே அமைந்துள்ளது.

அதன் அருகில் விடுதலை பொன் விழாவிற்கான நினைவு தூண் ஒன்று சாலையில் அமைத்து இருக்கிறார்கள். அதனால் போக்குவரத்து இடையூறு இல்லை. ஆனால் சிவாஜி சிலையால்தான் இடையூறு என்பது ஆச்சரியமாக உள்ளது.

அவருடைய சிலையை அப்புறப்படுத்தியவர்கள் அதே சாலையில் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத இடத்தை தேர்வு செய்து நிறுவி இருக்கலாம். ஆனால் அவரது மணிமண்டபத்திற்கு கொண்டுபோய் கிடத்தி இருக்கிறார்கள் என்பது அவரை அவமதிக்கும் செயலாகும்.

அவர் நடிகர்தான் என்றாலும் நாட்டுப்பற்று உள்ளவராக விளங்கினார். திரைப் படங்கள் மூலம் நாட்டுப் பற்று உணர்வை பொது மக்களிடையே கொண்டு போய் சேர்த்தார்.

அவருடைய சிலையை அவர் பெரிதும் மதித்த காந்தி, காமராஜர் சிலைகளுக்கு இடையில் மெரீனா கடற்கரையிலேயே வைக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்

நள்ளிரவில் நடிகர் சிவாஜி கணேசன் சிலை அகற்றப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறேன். மத்திய- மாநில அரசுகள் எந்த நடவடிக்கை எடுத்தாலும் இரவில்தான் எடுப்பார்களா? பணமதிப்பு நீக்க நடவடிக்கை, வரிவிதிப்பு போன்றவை நள்ளிரவில் அமல்படுத்தப்பட்டது.

காந்தி இரவில் சுதந்திரம் வாங்கி கொடுத்தார் என்பதற்காக இதுபோன்று செயல்படுகிறார்களா?

நீதிமன்ற உத்தரவுப்படி சிவாஜி சிலை அகற்றப்படும் பட்சத்தில் அதனை மெரினா கடற்கரையில் ஏதாவது ஒரு இடத்தில் வைக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். எத்தனையோ தலைவர்கள் சிலைகள் அங்கு இருக்கும் போது, சிவாஜி சிலையை மட்டும் வைக்க மறுப்பது ஏன்?

சிவாஜி சிலை நள்ளிரவில் அகற்றப்பட்டது போல ஆட்சியும் நள்ளிரவில் அகற்றப்படும். சிவாஜி சிலையை மெரினாவில் வைக்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் அறிவிப்போம்.

நடிகர் மன்சூர் அலிகான்

சென்னை கடற்கரை சாலையில் இருந்த சிவாஜி சிலையை இரவோடு இரவாக அகற்றி இருக்கிறார்கள். கோர்ட்டு உத்தரவுப்படி அகற்றி இருக்கிறோம். மணி மண்டபத்தில் அதை வைப்போம் என்று கூறுகிறார்கள். சிவாஜி சிலையை அகற்ற வேண்டும் என்று வழக்கு போட்டதும், அதற்கு ஆதரவாக அரசு செயல்பட்டதும் தவறு.

நடிப்புக்கு இலக்கணம் வகுத்தவர் சிவாஜி கணேசன். அவரைப் பார்த்து தான் பலர் திரை உலகத்துக்கு வந்தார்கள். நடிப்பால் உலகப் புகழ் பெற்றவர். அவருக்கு மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசு கூட எந்த பெருமையும் செய்யவில்லை. செவாலியே என்ற பட்டத்தை கூட வெளிநாட்டுகாரன்தான் கொடுத்தான்.

சிவாஜி சிலையை இரவோடு இரவாக அகற்றியது நடிகர் திலகம் சிவாஜி கணேசனை அவமானப்படுத்தும் செயல். இதற்கு தமிழர்கள் வெட்கி தலைகுனிய வேண்டும். பெருமை படுத்தப்பட வேண்டிய ஒரு புகழ்பெற்ற தமிழனை இதுபோன்று அவமானப்படுத்தக் கூடாது.

தமிழக அரசு, மத்திய அரசு சொல்லும் எதற்கும் தலையாட்டும் அரசாக இருக்கிறது. ஒரு நல்ல கலைஞனை பெருமைப்படுத்த தவறி விட்டது.