சென்னை,

திரைப்பட தொழிலாளர்கள் சங்கம் மேற்கொண்டு வந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாக பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.

பெப்சி நிர்வாகிகளுடன் நடத்திய ஆலோசனையை தொடர்ந்து, போராட்டம் வாபஸ் பெறப்பட்ட தாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட ஊதிய பிரச்சினை காரணமாக திரைப்பட தொழிலாளர்கள் அமைப்பு (பெப்சி) கடந்த 3 நாட்களாக போராட்டம் நடத்தி வந்தது. இதன் காரணமாக 30க்கும் மேற்பட்ட படப்பிடிப்புகள் தடைபட்டன.

இதற்கிடையில், பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி நடிகர் ரஜினியை சந்தித்தும் பேசி னார்.  அப்போது இரு தரப்பினரும் சமாதானமாக செல்லும் படி நடிகர் ரஜினிகாந்த் வலியுறுத்தி இருந்தார்

மேலும் போராட்டம் தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்த பெப்சி, தயாரிப்பாளர்கள் சங்கத்தை தமிக தொழிலாளர் நலத்துறை ஆணையம் அழைப்பு விடுத்துள்ள நிலையில் தற்போது போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய, பெப்சி தலைவர்  ஆர்.கே.செல்வமணி…. ரஜினி, தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களும் வேலை நிறுத்த போராட்டத்தை கைவிட சொல்லி வலியுறுத்தினர்.

பல படப்பிடிப்புகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் கவலை தெரிவித்தனர்.

நாளை தொழிலாளர்கள் நல ஆணையத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற இருக்கிறது. தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகளும் கலந்து கொள்ள சம்மதம் சொல்லி உள்ளனர்.

இதில் நல்ல முடிவு கிடைக்கும் என நம்புகிறோம். இதையெல்லாம் கருத்தில் கொண்டு 23 சங்க நிர்வாகிகளுடன் கலந்து பேசி வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெறுவது என்றும், நாளை முதல் படப்பிடிக்கு செல்லவும் முடிவு செய்துள்ளோம்.

இவ்வாறு ஆர்.கே.செல்வமணி கூறினார்.