மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் நகரில் உள்ள சாத் சாலையில் இலகல் மற்றும் சோலாப்பூர் நகரங்களுக்கு இடையே இயக்கப்படும் வடமேற்கு கர்நாடக சாலைப் போக்குவரத்துக் கழகத்திற்குச் சொந்தமான பேருந்தை (KA 29 F 1350) சிவசேனா (உத்தவ் தாக்கரே) பிரிவைச் சேர்ந்த 15 முதல் 20 பேர் கொண்ட கும்பல் இன்று வழிமறித்தனர்.
அவர்கள் டிரைவரை பேருந்திலிருந்து வெளியே இழுத்து, அவரது முகத்தில் காவி சாயம் பூசி, “ஜெய் மகாராஷ்டிரா” போன்ற கோஷங்களை எழுப்பினர். அவர்கள் பேருந்தில் “ஜெய் சத்ரபதி சிவாஜி மகராஜ், ஜெய் மகாராஷ்டிரா, ஜெய் பவானி” என்று எழுதி கோஷங்களை எழுப்பினர்.
அந்த நேரத்தில் பேருந்தில் சுமார் 35 பயணிகள் இருந்தனர். வாக்குவாதத்திற்குப் பிறகு, அவர்கள் பேருந்தை அனுப்பினர். சதார் பஜார் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர்.
கர்நாடக மாநிலம் பெல்காமில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று அரசுப் பேருந்து ஒன்றில் பயணித்த பெண் பயணி மராத்தியில் பேசியதாகவும் இதுதொடர்பாக நடத்துனர் மற்றும் பயணி இடையே வாக்குவாதம் எழுந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து இருமாநில எல்லையில் உள்ள பகுதிகளில் மொழி பிரச்சனையாக உருவெடுத்ததை அடுத்து சனிக்கிழமை இரவு 7 மணி முதல் KSRTC மற்றும் MSRTC-க்கு சொந்தமான இரண்டு பேருந்து சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
பெல்காம் அருகே ஒரு MSRTC பேருந்து மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பிறகு இந்த நிகழ்வு நடந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த பிரச்சனை தொடர்ந்து வந்த நிலையில் இன்று மீண்டும் பேருந்து இயக்கப்பட்ட நிலையில் சிவசேனா கட்சியினரின் இந்த மறியல் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.