மும்பை

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் இணைவது குறித்து விளக்கம் அளிக்க சிவசேனா கேட்டுள்ளது.

வரும் 2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு எதிரான கட்சிகளை ஒன்றிணைக்கும் பணியை மேற்கு வங்க முதல்வரும் திருணாமுல் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி செய்து வருகிறார்.  இதையொட்டி அவர் பல எதிர்க்கட்சி தலைவர்களைச் சந்தித்துப் பேசினார்.  அதில் மகாராஷ்டிரா மாநில சிவசேனா கட்சித் தலைவர் மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை சந்தித்துப் பேசினார்.

ஆனால் அவர் மகாராஷ்டிர ஆளும் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியினரைச் சந்திக்கவில்லை.  டில்லி சென்ற போது சோனியா காந்தியைச் சந்திக்கவில்லை.   மேலும் தாம் டில்லி வரும் போது எல்லாம் சோனியா காந்தியைச் சந்திக்க வேண்டும் என அரசியலமைப்பு சட்டத்தில் தெரிவிக்கவில்லை எனப் பதிலளித்ததால் அவர் காங்கிரஸ் கட்சியை ஒதுக்க முடிவு எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து சிவசேனா கட்சியின் அதிகாரப் பூர்வ நாளேடான சாம்னாவில், “பாஜகவுக்கு எதிராகக் கூட்டணி அமைக்கும் கட்சிகள் எதுவாக இருந்தாலும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முன்னணி கூட்டணி குறித்து தங்கள் கருத்தை வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும்.   பாஜகவுக்கு எதிராகக் காங்கிரஸ் போராடி வரும் வேளையில் வேறு கட்சிகள் காங்கிரஸ் இல்லாத கூட்டணி அமைப்பது தவறான விளைவை உண்டாக்கும்.

மம்தா பானர்ஜி தனது சமீபத்திய மும்பை பயணத்தில் தற்போது ஐக்கிய முற்போக்கு கூட்டணி இல்லை எனத் தெரிவித்துள்ளார்.   அவர் பிறகு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இணைவாரா என்பதை தெளிவாக்க வேண்டும்.   மம்தாவின் மும்பை வருகைக்கு பிறகு எதிர்க்கட்சிகள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளன.

இந்நிலையில் பாஜகவை எதிர்க்கக் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களான சோனியா மற்றும் ராகுல் காந்தி என்ன திட்டங்களை வைத்துள்ளனர் என்பதையும் தெளிவு படுத்த வேண்டும்.  தற்போது காங்கிரஸ் கட்சி மீண்டும் வலுவடைந்து வரும் நிலையில் மம்தா பானர்ஜி அதன் தலைமையை ஏற்று பாஜகவுக்கு முடிவு கட்ட தயாராக உள்ளாரா அல்லது பாஜகவுக்குத் தனது பிடிவாதம் மூலம் மீண்டும் வாய்ப்பு அளிப்பாரா ?” எனக் கேள்வி எழுப்பி உள்ளது.