இந்திய அணியின் முன்னணி ஆட்டக்காரராக விளங்கிய வீரேந்தர் சேவாக் பேட்டிகளில் அதிரடியாக நகைச்சுவையுணர்வுடன் பேசுவதில் வல்லவர்.

இவரது நகைச்சுவை உணர்வு பத்திரிகையாளார்கள் மத்தியில் மட்டுமல்ல மைதானத்திலும் மேலோங்கி இருந்தது என்பதற்கு சில உதாரணம் :

டெண்டுல்கருக்கும் சேவாகிற்கும் என்ன வித்தியாசம்

பேட்டிங்கில் டெண்டுல்கரின் ஸ்டைலை வார்த்து எடுத்தார் போல் விளையாடும் இவர் சில நேரங்களில் டெண்டுல்கர் தான் விளையாடுகிறாரோ என்று நினைக்கும் அளவிற்கு விளையாடுவார்.

“டெண்டுல்கருக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்” என்று செய்தியாளர் ஒருமுறை கேட்டபோது சட்டென்று

“வங்கி கையிருப்பு (பேங்க் பேலன்ஸ்) தான்” என்று கூறி கலகலப்பை உண்டாக்கினார்.

(நடிகராக டெண்டுல்கர் கோடிகளில் சம்பாதித்தது அனைவருக்கும் தெரிந்ததே)

ரிவர்ஸ் ஸ்விங் பந்தை அனாயாசமாக எதிர்கொள்வது எப்படி ?

இங்கிலாந்தில் கவுண்டி போட்டிகளில் விளையாடிய சேவாக் ஒரு போட்டியில் எதிரணி பந்து வீச்சாளராக களமிறங்கிய பாகிஸ்தான் வீரர் அப்துல் ரசாக் பந்து வீச்சில் திணறினார்.

தன்னுடன் சக பேட்ஸ்மேனாக களத்தில் நின்ற இங்கிலாந்து வீரர் ஜெர்மே ஸ்னாப்-பிடம், ரிவர்ஸ் ஸ்விங் ஆகும் இந்த பந்து தொலைந்தால் தான் அப்துல் ரசாக்-கிடம் இருந்து நாம் தப்பிக்க முடியும் என்று கூறினார்.

அடுத்த ஓவரில், அந்த பந்தை மைதானத்திற்கு வெளியில் அடித்து அது தொலைந்து போனது, பின்னர் புது பந்து கொண்டு வரப்பட்டது.

இது குறித்து ஸ்னாப்-பிடம், “இன்னும் ஒரு மணி நேரத்திற்கு நமக்கு கவலையில்லை – இந்த பந்தை இப்படி தான் எதிர்கொள்ளவேண்டும்” என்று குறும்பாக கிசுகிசுத்தார்.

அனுபவமிக்க பந்து வீச்சாளரை விளாசுவது சரியா ?

உலகின் எந்த முன்னணி பந்து வீச்சாளரின் பந்தையும் லாவகமாக ஆடும் திறம் படைத்த சேவாக்.

“அனுபவமிக்க பந்து வீச்சாளர்களை இப்படி விளாசுவது சரியா ?” என்று கேட்டதற்கு

“நான் பந்து வீச்சாளரை விளாசவில்லை, பந்தை தான் விளாசுகிறேன்” என்று கிண்டலாக கூறினார்.

நீங்கள் இரட்டை சதம் அடிக்காதது பெரிய இழப்பு தானே ?

2003 ம் ஆண்டு டிசம்பரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடிய சேவாக், முதல் நாள் ஆட்டத்தில் 195 ரன்கள் எடுத்திருந்தார், இன்னும் 5 ரன்கள் அடித்தால் இரட்டை சதம்.

பொறுமையாக விளையாடி 200 ஐ தொடாமல், தூக்கி அடித்து பவுண்டரி லைனுக்கு அருகில் நின்றிருந்த வீரரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

“நீங்கள் இரட்டை சதம் அடிக்காதது பெரிய இழப்பு தானே ?” என்று அவரிடம் கேட்டபோது.

“இன்னும் 10 அடி போயிருந்தால் சிக்ஸராக மாறியிருக்கும்” என்று குறும்பாக பதிலளித்தார்.

சேவாக் – பாய்காட் மோதல்

இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜெப்ரி பாய்காட் டெஸ்ட் போட்டிகளில் எதிரணியினரின் பொறுமையை சோதிக்க கூடிய அளவுக்கு நிதானமாக விளையாட கூடியவர், ஆனால் சேவாக், டெஸ்ட் போட்டியாக இருந்தாலும் பந்து வீச்சாளர்களை ஒரு கை பார்த்து விடுவார்.

சேவாக்-கின் விளையாட்டு திறன் குறித்து கருத்து தெரிவித்த பாய்காட், “நன்றாக விளையாடும் திறம் இருந்த போதும், அவருக்கு மூளை கிடையாது” என்று கூறியிருந்தார்.

இதுகுறித்து சேவாகிடம் செய்தியாளர் ஒருவர் கேள்வி கேட்க, “ஒரு நாள் முழுக்க விளையாடி அவர் அடித்தது என்னமோ ஒரே ஒரு பவுண்டரி மட்டுமே” என்று பதிலுக்கு கூறி சலசலப்பை ஏற்படுத்தினார்.