ஜெனிவா

நா பொதுச்சபை கூட்டத்தில் வங்க பிரதமர் ஷேக் ஹசினா 1971ஆம் வருடம் பாக் ராணுவம் வங்க தேசத்தில் இனப் படுகொலையை தூண்டியது என கூறி உள்ளார்.

ஐநா பொதுச்சபை கூட்டத்தில் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா கலந்துக் கொண்டு உரையாற்றினார்.

அந்த உரையில் அவர் தெரிவித்ததாவது :

”எங்கள் நாட்டின் பாராளுமன்றம் மார்ச் 25ஆம் தேதியை இனப்படுகொலை தினமாக அறிவிக்க உள்ளோம்.  ஏனென்றால் 1971ஆம் ஆண்டு அதே தினத்தில் தான் திடீரென பாகிஸ்தான் ராணுவம் எங்கள் நாட்டின் மீது தாக்குதலை துவங்கியது.  அப்போது பாகிஸ்தான் நாட்டின் கட்டுப்பாட்டில் இருந்தோம்.  எங்களது சுதந்திரப் போராட்டத்தை ஒடுக்கவே இந்த தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டது,

அப்போது இனப் படுகொலையை தூண்டியதே பாக் ராணுவம்தான்,  அந்தக் கலவரத்தில் சுமார் 30 லட்சம் வங்காளிகள் கொல்லப்பட்டனர். சுமார் 2 லட்சம் வங்கப் பெண்கள் மானபங்கப் படுத்தப் பட்டனர்.  நாடிழந்து மக்கள் அண்டை நாடான இந்தியாவில் தஞ்சம் புகுந்தனர்.

இந்திய ராணுவத்தின் உதவியோடு அதே வருடம் நாங்கள் சுதந்திரம் அடைந்தோம்.  ராணுவத்தினர் தோற்கடிக்கப்பட்டனர்.  எங்களை கூண்டோடு அழிக்க நினைத்தது பாகிஸ்தான் ராணுவம்.  எத்தனையோ அறிவுஜீவிகளும், சாதாரண மக்களும் காரணமின்றி ராணுவத்தால் கொல்லப்பட்டனர்.

பயங்கரவாதிகள் என்றும் பயங்கரவாதிகளே.  அவர்களுக்கு மதம், இனம், மொழி என எந்தப் பாகுபாடும் இல்லை.  நானே பயங்கரவாதத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட ஒரு பெண்.  பலமுறை பயங்கரவாத தாக்குதல்கள் என் மேல் ஏவப்பட்டன.  எனக்கு பயங்கரவாதத்தின் கொடுமை தெரியும்.  மதத்தின் பெயராலோ அல்லது இனத்தின் பெயராலோ ஆரம்பிக்கப்படும் எல்லா பயங்கர வாதமும் கொலை நோக்கம் மட்டுமே கொண்டவை.” எனக் கூறி உள்ளார்.

பாகிஸ்தான் அவர் கூற்றை மறுத்துள்ளது.  “ஹசீனா வரலாற்றை ஒருமுறை திரும்பிப் பார்க்க வேண்டும்.  தேவையற்ற வெறுப்பையும் கோபத்தையும் தொடரக் கூடாது.  1971ல் நடந்த விளைவுகள் பற்றி 1974ஆம் ஆண்டே விவாதிக்கப்பட்டு அனைத்தும் முடித்து வைக்கப்பட்டு விட்டது.  அந்த விவாதத்தில் இந்தியாவும்,  அப்போதைய வங்க தேச தலைவரான பங்க பந்துவும் கலந்துக் கொண்டது ஹசீனாவுக்கு தெரிந்திருக்கும்.  தேவையற்ற பழைய பகையையும் வெறுப்பையும் மறப்பேதே நல்லது” என பாகிஸ்தான் அறிக்கை வெளியிட்டுள்ளது.

பங்க பந்து என அழைக்கப்படும் வங்கதேச சுதந்திரப் போராட்டத்தலைவர் ஷேக் முஜிபுர் ரகுமானின் மகள் ஷேக் ஹசினா என்பது குறிப்பிடத்தக்கது.