தப்பு செஞ்சாங்க..ஆனா குற்றவாளி இல்ல…

சிறப்புக்கட்டுரை:  ஏழுமலை வெங்கடேசன்

பாமரனைவிட படிச்சவன் குழப்பினா அக்கப்போரா இருக்கும் என்பார்கள்… இங்கே உச்சநீதிமன்றம் குழப்பினால் மண்டையே ரிவர்சுல சுத்துது..

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட நால்வருக்கும் 4 ஆண்டு சிறை, ஜெயலலலிதாவுக்கு நூறுகோடி ரூபாய் அபராதம் என்பது பெங்களுரு தனிநீதிமன்ற நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பு. இதனை கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி, மேல்முறையீட்டில் செல்லாது எனச்சொல்லி நால்வரையும் விடுதலை செய்கிறார்.

அடுத்த மேல்முறையீடு உச்சநீதிமன்றத்திடம் செல்கிறது. கடந்த பிப்ரவரி மாதம் 14-ந்தேதி வழங்கிய தீர்ப்பில், குமாரசாமியின் தீர்ப்பு செல்லாது என்று சொல்லிவிட்டு குன்ஹாவின் தீர்ப்பை நிலைநிறுத்துகிறது.. குன்ஹாவின் நீதி பரிபாலன முறையை வானளாவ புகழ்ந்தும் தள்ளுகிறது உச்சநீதிமன்றம்.  சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய மூவருக்கும் நான்கு வருட சிறை தண்டனையை உறுதிசெய்கிறது..

ஜெயலலிதா இறந்துவிட்டதால் அவர் மீதான மேல்முறையீடு அற்றுப்போகிறது என கூறிவிட்டது.. ஆனால் தீர்ப்பின் பல இடங்களில் சசிகலா உள்ளிட்ட மூவரைவிட ஜெயலலிதாவைத்தான் கடுமையாக உச்சநீதிமன்றம் வார்த்தைகளால் சுழற்றி அடித்தது மனசாட்சியே இல்லாமல், எதைப்பற்றியும் கவலைப்படாமல் போயஸ்தோட்டத்தில் இருந்தபடியே கூட்டுச்சதி செய்து சொத்துக்களை குவித்திருக்கிறார் என்றெல்லாம் சாடியது.

ஆனால் ஜெயலலிதா இறந்துவிட்டதால் அவர் மீதான தண்டனை கைவிடப்படுகிறது, மேல்முறையீடு அற்றுப்போகிறது என உச்சநீதிமன்ற நீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவராய் சொன்னார்கள். ஆனால் ஜெயலலிதா நிரபராதி என்று எங்குமே அடித்துச்சொல்லப்பட வில்லை.

இந்த இடத்தைத்தான் தேர்ந்தெடுத்து கர்நாடக அரசு சீராய்வு மனு செய்தது.. மேல்முறையீடு அற்றுப்போகிறது என்பதை மாற்றுங்கள் என்று கேட்டது. இதன் உள்ளர்த்தம் ஜெயலலிதா குற்றவாளி என்பது சட்டபூர்வமாக்கப்பட்டு  100 கோடிரூபாய் அபராதத்தை வசூலிக்க வழிபிறக்கும் என்பது.

ஆனால் சீராய்வு மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என உச்சநீதின்றம் ஒற்றை வரியில் சொல்லிவிட்டது

கீழ்நீதிமன்றம், உயர்நீதிமன்றம் ஆகியவற்றை தாண்டி உச்சநீதிமன்றம் போய் விசாரணை யெல்லாம் முடிந்து தீர்ப்பு சொல்லப்படும் என்ற நிலையில்தான் ஜெயலலிதா காலமாகிறார். நிரபராதி என்ற நிலையில் அவர் தன்னை மீண்டும் நிரபராதியே என சட்டத்தின்முன் நிலைநிலைநிறுத்த வாதம் செய்வதற்கு வாய்ப்புகள் இருந்தபோது, உயிரோடுதான் இருந்தார்.

அவர் தரப்பில் ஜாம்பாவன்கள்வந்து வாதாடினார்கள். வாதங்கள் எல்லாம் முடிந்தபிறகு இனி மேற்கொண்டு வேலையே இல்லை என்கிறபோதுதான் அவர் உயிரோடில்லை. அப்படியிருக்க, அவர் மீதான மேல் முறையீடு அற்றுப்போகிறது என்பதுதான் எப்படியென புரியவேயில்லை.

இப்படி அற்றுப்போவதற்கு அரசியல் சாசனத்தில் எந்த சட்டப்பிரிவும் வகை செய்யவில்லை. உச்சநீதிமன்ற விதிகள் 2013 ஆண்டின்படி, சிவில் அப்பீல் வழக்குகளிலும் சரி, தேர்தல் வழக்குகளிலும் சரி, விசாரணை முடிந்தபிறகு சம்மந்தப்பட்ட நபர் இறந்து விட்டால், வழக்கு அற்றுப்போகும் என்ற நிலை வராது என கூறும் என்ற கர்நாடகாவின் வாதத்தையும் உச்சநீதிமன்றம் ஏற்கவில்லை.

எல்லாவற்றையும்விட முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த வழக்கே கூட்டுச்சதி என்ற குற்றத்தின் அடிப்படையில் சுழன்ற ஒன்று.. மாட்டினால் எல்லாரும் குற்றவாளிகள், இல்லை யென்றால் அனைவருமே நிரபராதிகள் என்பதுதான் பெரும்பாலும் இதுபோன்ற வழக்குகளில் முடிவு இருக்கும்..

‘’பெரிய அளவில் சட்ட விரோதமாக சொத்துகளை குவிக்கவும், அவற்றை பல்வேறு விதமாக சட்டபூர்வமாக்குவதிலும் போயஸ் தோட்டத்தில் ஜெயலலிதாவும் சசிகலாவும் கிரிமினல் சதித்திட்டத்தில் ஈடுபட்டனர்’’ என்பது இதே உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பில் சொன்னது..

மனசாட்சியே இல்லாமல் எதைப்பற்றியும் கவலைப்படாமல் ஊழல், வஞ்சித்தல் போன்றவற்றை இவர்கள் செய்துள்ளனர் என்றெல்லாம் தீர்ப்பில் காட்டமாக கூறப்பட்டுள்ளது. ஆனால் இப்போது சீராய்வு என்று வருகிறபோது இதெல்லாம் எங்கே போனது என்றே தெரியவில்லை..

கூட்டுச்சதி தொடர்பான ஒரு வழக்கில் மூன்றுபேர் குற்றவாளிகள். மூவருக்கும் தலைமையாக இருந்தவர் குற்றவாளி அல்லவாம்.. தலைமை குற்றவாளியில்லை என்றால் மற்ற மூவருக்கும் மட்டும் எப்படி தண்டனை?

உயிரோடு இருந்தால் ஒரு மாதிரி தீர்ப்பு,, இல்லாவிட்டால் தீர்ப்பின் அர்த்தமே வேறு மாதிரி போகும் என்றால் என்ன வகையான நீதி இது?

குன்ஹா தீர்ப்பு செல்லும். ஆனால் ஜெயலலிதா உயிரோடு இல்லாததால் அவருக்கும் மட்டும் பொருந்தாது. இறந்துவிட்டதால் விவகாரத்தை தோண்டுவது நல்லதல்லவாம்..

என்னவேணாம் செய்துவிட்டுபோகட்டும். ஆனால் அவன் இறந்துவிட்டால், அவன் நல்லவனா கெட்டவனா என்று சொல்லமாட்டோம். அப்புறம் எதற்காக ஒருத்தன் விபத்திலேயோ கொலையிலேயோ உயிரிழந்தால் அவன் உடலை ஏன் தண்டத்திற்கு பிரேத பரிசோதனை செய்யவேண்டும்..

சம்பவத்திற்கு காரணமானவனை வேலை மெனக்கெட்டு தேடிப்பிடித்து கைது செய்து வழக்கு நடத்தவேண்டும்.. செத்தவன் உயிரோடு வரப்போகிறானா என்று அவன் குடும்பத்தாரிடம் வியாக்கியானம் பேசிவிட்டு அரசு தரப்பு போய்க்கொண்டே இருக்கவேண்டியதுதானே..

இறந்துவிட்டதால் உள்ளபோக விரும்பவில்லை என்று நீதிமான்களே சொன்னால், அப்போ தற்கொலைப்படைத்தாக்குதல் நடத்துற எவனும் குற்றவாளியே கிடையாது..

அதான், அவனே செத்துப்போய்ட்டான் இல்ல…


English Summary
Jeyalalitha did mistake, but not guilty ... writer Elumalai venkatesam special article