மகாராஷ்டிர மாநிலத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசில் சமூக நீதித்துறை அமைச்சராக இருக்கும் தனஞ்செய முண்டே மீது பாடகி ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார்.
இதனை முண்டே மறுத்துள்ள நிலையில், “அவர் பதவி விலக வேண்டும்” என பா.ஜ.க. வலியுறுத்தியுள்ளது.
குற்றச்சாட்டுக்கு ஆளான தனஞ்செய முண்டே சரத்பவாரின், தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் ஆவார்.
இந்நிலையில் கோவா மாநிலம் பானாஜி சென்றுள்ள சரத்பவாரிடம் செய்தியாளர்கள் “பாலியல் புகாருக்கு ஆளான உங்கள் கட்சி அமைச்சர் முண்டே, பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பா.ஜ.க. கூறி உள்ளதே?” என கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர் “அமைச்சர் தனஞ்செய முண்டே மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் வரை அவர் மீது நடவடிக்கை எடுக்கும் பேச்சுக்கே இடம் இல்லை” என பதில் அளித்தார்.
“ஒருவர் மீது குற்றச்சாட்டுகளை சுமத்துவதும், இதன் தொடர்ச்சியாக அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைப்பதும் இப்போது பேஷனாகி விட்டது” என்று சரத்பவார் மேலும் குறிப்பிட்டார்.
– பா. பாரதி