“ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் விஷால் போட்டியிடுவதாக இருந்தால், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியில் இருந்து அவர் விலக வேண்டும். அதுவரை தயாரிப்பாளர் சங்கத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்துவோம்” என்று அறிவுத்து நேற்று மதியத்தில் இருந்து போராட்டம் நடத்தி வருகிறார் இயக்குநர் சேரன். அவருடன்  சுரேஷ்காமாட்சி உட்பட பல தயாரிப்பாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் சேரனை தொடர்புகொண்டு, பத்திரிகை டாட் காம் இதழுக்காக சில கேள்விகளைக் கேட்டோம்.

சேரன்

ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிடுவதாக இருந்தால், தயாரிப்பாளர் சங்க பதவியைவிட்டு விஷால் விலக வேண்டும் என்று ஏன் வலியுறுத்துகிறீர்கள்?

1730 உறுப்பினர்களைக் கொண்ட வருடத்திற்கு 500 கோடி வர்த்தகம் செய்யும் தொழிலாகிய தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக இருக்கும் விஷால் தயாரிப்பாளர்கள் நலன் பற்றி துளி கூட கவலைப்படவில்லை. 

சிறுபிள்ளைத்தனமாக ஆர்கே நகர் தேர்தலில் களமிறங்கியுள்ளார். தன்னை மட்டுமே உயர்த்திக் கொள்ள தயாரிப்பாளர்கள் சங்கப் பெயரை விஷால் பயன்படுத்துகிறார்.

தயாரிப்பாளர் சங்கம் என்பது அரசைச் சார்ந்தே இயங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

திரைத்துறை மானியம், வரி, வரிக்குறைப்பு, டிக்கெட் விலை நிர்ணயம், பைரசி திருட்டு, ஆன்லைன் பைரசி உள்ளிட்ட அனைத்து விவகாரங்களிலும் அரசாங்கம் சார்ந்தே இயங்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அப்படி இருக்க அவ்வபோது அரசியல் தலைவர்களை சந்திப்பது, அமைச்சர்களை விமர்சிப்பது போன்ற செயல்களாலும், அரசியலில் குதிப்பதாக சொல்லும் அறிவிப்புகள் எல்லாம் பாதிப்பை ஏற்படுத்தும்.

அனைத்து கட்சிகளின் எதிர்ப்பையும் விஷால் சம்பாதிக்கிறார். எதிர்காலத்தில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு எந்த ஒத்துழைப்பும் கிடைக்காது. இதனால் திரையுலகம் சார்ந்துள்ள தொழிலாளர்கள் 10லட்சம் பேரை பாதிக்கும்.

அதனால்தான் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியை விட்டு விலகிவிட்டு அவர் ஆர்கே நகர் அல்ல அசோக் நகர், கே கே நகர்.. டில்லியில் கூட போட்டியிடட்டும் என்று சொல்கிறோம்.

தயாரிப்பாளர் சங்க பொறுப்பில் இருப்பவர் அரசுக்கு எதிரானவராக இருந்தால் சிக்கல் ஏற்படும் என்கிறீர்கள். அப்படியானால் தங்களுக்கு எதிரானவர் சங்க பொறுப்பில் இருந்தால் தயாரிப்பாளர்களுக்கு எதிராக அரசு செயல்படும் என்கிற குற்றச்சாட்டாக இதை எடுத்துக்கொள்ளலாமா?

அப்படி ரொம்ப நேரடியாக… குற்றச்சாட்டாக… எடுத்துக்கக் கூடாது. காலம்காலமாக, அரசை சார்ந்துதான் எல்லா சங்கங்களும், எல்லா இயக்கங்களும் எல்லா மக்களும் இயங்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது என்பது யதார்த்தம். ஒரு விசயத்தைக் கேட்க வேண்டும் என்றால்கூட “அரசுகிட்ட கேளுங்க” என்றுதான் சொல்கிறோம்.. ஊரில் சாலை சரியில்லை என்றால்கூட அரசாங்கத்திடம் போய் கேளுங்க என்றுதான் சொல்றோம்.. அதுபோல சினிமா குறித்து  பிரச்சினைகளுக்காக அரசை நாட வேண்டி இருக்கிறது. அப்படி அரசிடம் கேட்கும்போது.. விசால் போல ஒருவர் அரசை கோபப்படுத்துவது நன்றாக இருக்காது. அப்படிச் செய்தால்,  அரசாங்கத்தில் முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள்  தங்களுடைய கருத்தை வெளியில் காண்பிக்காமல் உள்ளுக்குள் கோபப்பட்டால் எங்களுக்குத் தெரியாது. அதனால் சிக்கல் ஏற்படும். இப்படி ஏற்படதற்கான  முன்னுதாரணங்கள் நிறைய இருக்கு.

ஒரு ஐந்து பேர் செய்யும் தவறால், சங்கத்தில் உள்ள மற்ற பலரும் பாதிக்கப்படுகிறார்கள். இது ஒட்டுமொத்த திரைத்துறைக்கும் கெடுதலை விளைவிக்கும்.

எல்லாவற்றையும் நானே செய்துவிடுவேன்.. நானே சாதித்துவிடுவேன் என்றெல்லாம் பேசுகிறார்கள். அப்படியானால் அரசாங்கம் எதுக்கு இருக்கு..

மத்தபடி அரசாங்கம் தவறு செய்தால் கேட்கக்கூடாதா.. அரசாங்கத்துக்கு அடிபணிந்துதான் போகவேண்டுமா என்ற கேள்விக்கு நாங்க போகவில்லை.

உதாரணமாக.. நாங்க மானியம் கேட்கிறோம்.. அதை பணிவாகத்தான் கோரிக்கையாக வைக்க முடியும்.  “ஏய்.. என் மானியத்தைக் கொடு” என்று அதட்டி கேட்க முடியாது.

இப்படி கேட்கும்போது தயவா கேட்கணுமா. இதைத் திமிரா கேட்க முடியுமா..

 

உரிமையை உரிமையா கேட்கவேண்டியதுதான்..

விஷால்

அதைத்தான் சொல்றேன். உரிமையை உரிமையா கேட்க யார் சார்பாகவும் இல்லாமல் சாதாரண மனிதனா இருக்க வேண்டும் என்று சொல்கிறேன்.

சரி… சங்க பொறுப்பில் இருப்பவர் மாற்றுக்கட்சியைச் சேர்ந்தவர் என்பதால், கோரிக்கைகளை அரசு நிராகரிக்கும் என்றால்.. சேரன் போன்ற நியாயமானவர்கள் அரசைத்தானே குறை கூற வேண்டும்.. “ஜனநாயக நாட்டில் தனக்கான அரசியல் சார்போடு இருக்கக்கூடாதா” என்று அரசை எதிர்த்துத்தானே குரல் எழுப்ப வேண்டும்..?

தவறாக புரிந்துகொண்டீர்கள்..  ஒரு விசயத்தைத் தெரிந்துகொள்ளுங்கள்..  எனக்கும் விசாலுக்கும் எந்தவித போட்டி பொறாமையும் கிடையாது.

ஐந்து வருடங்களாக விருது வழங்கவில்லை.. அதை அரசிடம் கேட்போம். ஆனால் மிரட்டி கேட்க மாட்டோம். ஒரு குடிமகனுக்கான தன்மையோடு கேட்போம். அவர்களும் கொடுப்பார்கள்.  அப்படி கொடுக்கவில்லை என்றால், பிறகு எப்படி கேட்கவேண்டுமோ  அப்படி கேட்போம்..  போராடியும் கேட்போம். ஆனால் எதிராளியா மாற மாட்டோம். எதிர்த்து அரசியல் செய்ய நினைக்க மாட்டோம்.

ஆக.. அரசிடம் கேட்கும் இடத்தில் இருப்பவர்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும்.

மற்றபடி அரசின் நவடிக்கைகளை விமர்சனமே செய்யக்கூடாது என்று சொல்லவில்லை. எனது படங்களிலும் அரசை விமர்சிக்கும் காட்சிகள் இருந்திருக்கின்றன. நேர்மையான முறையில் யாரும் பாதிக்காத அளவில் விமர்சனம் செய்வது தவறே இல்லை.

அதே நேரம் ஒரு சங்கத்தின் பொறுப்பில் இருந்துகொண்டு அரசை விமர்சித்தால் சங்கத்தின் அனைவரும் பாதிக்கப்படுவார்கள். ஏனென்றால் தலைவரின் கருத்து என்பது அவர் சாரந்த சங்கத்தின் அனைவரின் கருத்தாக பார்க்கப்படும்.

தவிர, தலைமைப் பொறுப்பில் இருப்பதாலேயே சங்கத்தில் இருக்கும் அனைவரும் தனது கருத்தை ஆதரிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தக்கூடாது.

சேரன்

ஏற்கெனவே விசாலை எதிர்த்துப்போட்டியிட்டவர்கள், பிடிக்காத சிலர்கள்தான் சேரனுடன் வந்து இப்போது உள்ளிருப்பு போராட்டம் நடத்துகிறார்கள். விசாலுக்கு வாக்களித்த பெரும்பான்மையானவர்கள் இந்த போராட்டத்துக்கு ஆதரவு அளிக்கவில்லை என்று சொல்லப்படுகிறதே..

விசாலுக்கு மெஜாரிட்டி கிடையாது. 40 சதவிகிதம் பேர்தான் அவருக்கு வாக்களித்திருக்கிறார்கள். சங்க தேர்தலில் மூன்று அணிகள் போட்டியிட்டன. மற்ற இரு அணிகள் தலா 30 சதவிகித ஓட்டுக்களை பெற்றிருக்கின்றன. ஆகவே 60 சதவிகிதம் பேர் விசாலை ஆதரிக்கவில்லை என்பதுதான் உண்மை.

ஆனால் விசாலைவிட மற்ற இரு தரப்பினரும்  குறைவாக ஓட்டு வாங்கியிருக்கிறார்கள் என்பதுதானே உண்மை.. தவிர வாக்களித்தவர்களில் அதிகம் ஓட்டுபெற்றவர்தானே மெஜாரிட்டி.. இதுதானே ஜனநாயகம்?

அதுதான் உண்மை. ஆனால் இந்தப் பிரச்சினையைப் பொறுத்தவரை ஒட்டுமொத்த சங்க உறுப்பினர்களின் எண்ணத்தைத்தான் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். விசாலின் நடவடிக்கை சங்கத்தைப் பாதிக்கும் என 60 சதவிகிதம் பேர் கருதுகிறார்கள்.

அவரை ஆதரித்த 40 சதவிகிதம் பேரில் சிலர்தான் இன்று விசாலுக்கு ஆதரவாக இருக்கிறார்கள். மற்றவர்கள் வெளியூரில் இருப்பதால் இங்கே எங்களது உள்ளிருப்புப் போராட்டத்தில் அவர்கள் கலந்துகொள்ளவில்லை.  ஆக.. விசால் வெற்றி பெற்ற போது அவருக்குக் கிடைத்த ஆதரவை விட இப்போது மிகவும் குறைந்துவிட்டது.  பெரும்பாலான தயாரிப்பாளர்கள் விசாலின் அரசியல் விளையாட்டை விரும்பவில்லை.

விசால் தமிழர் அல்ல என்பதால் ஆதரிக்க முடியாது என்ற முழக்கம் நடிகர் சங்கத் தேர்தலின் போதே எழுந்தது. நீங்கள் அவரை எதிர்க்கவும் இதுதான் காரணமா?

இல்லை, இல்லை, இல்லை. சங்கத்தின் எதிர்காலம்.. ஒட்டுமொத்த தமிழ்த்திரையுலகின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்பதால்தான் விசாலின் நடவடிக்கையை எதிர்க்கிறேன். வேறு எந்தக் காரணமும் கிடையாது.