மும்பை

கோவாவில் நடைபெறும் திரைப்பட விழாவை புறக்கணிக்க வேண்டும் என ஷபனா ஆஸ்மி தெரிவித்துள்ளார்.

பாலிவுட்டில் மிகவும் புகழ்பெற்ற நடிகைகளில் ஒருவர் ஷபனா ஆஸ்மி.  இவர் ஐந்து முறை சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கியுள்ளார்.  இவர் ஒரு சமூக ஆர்வலரும் கூட.  தற்போது நடைபெற்று வரும் கோவா சர்வதேசத் திரைப்பட விழாவைப் பற்றி ஒரு அறிக்கை விடுத்துள்ளார்.

அந்த அறிக்கையில் அவர், “அனைத்து திரையுலக பிரமுகர்களும் தற்போது நடைபெற்று வரும் கோவா சர்வதேச திரைப்பட விழாவை ஒட்டு மொத்தமாக புறக்கணிக்க வேண்டும்.   இதன் மூலம் நாம் தீபிகா படுகோனே, சஞ்சய் லீலா பன்சாலி மற்றும் பத்மாவதி திரைப்படத்துக்கு விடுக்கப்பட்டுள்ள மிரட்டல்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.  ராஜஸ்தான் முதல்வர் இதுவரை இந்த திரைப்படத்துக்கு எதிரான வன்முறைக்கு எந்த ஒரு கண்டனமும் தெரிவிக்கவில்லை.  தற்போது பட வெளியீட்டை தள்ளிப் போடச் சொல்கிறார்.  உ. பி. அரசு இந்தத் திரைப்படம் வெளியானால் சட்டம், ஒழுங்கு சீர்கெடும் என சொல்கிறது.  ராஜஸ்தான் மற்றும் உ. பி அரசினால் வன்முறையை கட்டுப்படுத்த முடியாதா? முடியவில்லை என்றால் அவர்கள் பதவி விலகி யாரால் வன்முறையைக் கட்டுப் படுத்த முடியுமோ அவர்களை பதவியில் அமர வைக்கலாம்.

சென்சார் போர்டு இந்தப் படம் சமர்ப்பிக்கப்பட்டு 63 நாட்களுக்குப் பின் சில டாகுமெண்டுகளை கேட்கிறது.  இந்த 63 நாட்கள் அந்த சென்சார் போர்ட் என்ன செய்துக் கொண்டிருந்தது?  அல்லது பட வெளியீட்டை குஜராத் தேர்தலுக்குப் பின் தள்ளி வைக்க திட்டமிட்டு இவ்வாறு நடந்துக் கொள்கிறதா?  இதைக் கூட புரிந்துக் கொள்ள முடியாத அளவுக்கு மக்கள் முட்டாள்களா?

நான் திரையுலகின் மேல் கடும் கோபம் கொண்டுள்ளேன்.  நமக்குள் ஒற்றுமையே இல்லை.  ஒரு நடிகையைக் கொல்வேன், தாக்குவேன்,  படத்தயாரிப்பாளரை கொல்வேன்,  படம் வெளியானால் கொளுத்துவோம் என்றெல்லாம் சொல்வதை எந்த திரையுலகப் பிரமுகராவது கண்டிதார்களா>  நாமெல்லாம் மற்றவர்கள் போல் இந்த நாட்டின் குடிமகன் இல்லையா?  ஸ்மிருதி இரானி தற்போது ஒரு திரைப்படத்துக்கு விடப்பட்டிருக்கும் மிரட்டலை கண்டு கொள்ளாமல் இந்த திரைப்பட விழாவை மும்முரமாக நடத்தி வருகிறார்.  முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் எச் கே எல் பகத் சஃப்தார் ஹஷ்மி கொலையுண்ட போது 1989ல் திரைப்பட விழா நடத்தியதற்கும் இதற்கும் வித்தியாசம் இல்லை.

நான் இதை அப்போதே எனது திரைப்படம் மேடம் சௌசாத்ச்கா திரையிடப்படும் போது மேடை ஏறி எதிர்ப்பை தெரிவித்துள்ளேன்.  இதே போல தஸ்லிமா நஸ்ரினுக்கு கொலை மிரட்டல் வந்த போதும் நானும் எனது கணவர் ஜாவேதும் தான் அவருக்கு துணையாக இருந்தோம்.  இது நிச்சயமாக பிரிவினை வாதம் அல்ல.  குடியரசு நாட்டில் ஒரு பெண்ணின் தலையைக் கொய்வேன் என்பது ஒரு கிரிமினல் நடவடிக்கை ஆகும்.  அவ்வாறு எச்சரிக்கை விடுப்போர் மீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.   எந்த ஒரு போராட்டமும் தவறு என நான் சொல்லவில்லை.  ஆனால் அது வன்முறை ஆன பிறகும் அரசு அதை கவனிக்காமல் விடுவது தவறுதான்” என குறிப்பிட்டுள்ளார்.