சென்னை: பிரபல பள்ளியான  பத்ம சேஷாத்ரி பள்ளியை சேர்ந்த ஆசிரியர் ராஜகோபாலன் மீதான பாலியல் புகார்கள்  தொடர்பான வழக்கில், அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்ட நீதிமன்றம், அவரை புழல் சிறையில் அடைக்கவும் உத்தரவிட்டது.

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும், மொபைல் மூலம் பாலியல் மெசேஜ் கொடுத்து தொல்லைப்படுத்தியதாகவும், ஆன்லைன் வகுப்புகளில் அரைகுறை ஆடைகளுடன்  மாணவிகளுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், புகார் எழுந்தது. இதையடுத்து அவர் மீது  நடவடிக்கை எடுக்க அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள் குரல் எழுப்பினர். மேலும், ஏற்கனவே பலமுறை  ஆசிரியர் ராஜகோபாலன் மீது புகார்கள் தெரிவிக்கப்பட்டபோதும், நிர்வாகம் இதை கண்டுகொள்ளவில்லை எனக்கூறப்பட்டது.

இதையடுத்து, பாலியர் புகார்கள் தொடர்பாக காவல்துறையினர் ஆசிரியர் ராஜகோபாலன் மீது சிறார் வன்கொடுமை தடுப்புச் சட்டமான போக்சோ உள்பட 5 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவரை இன்று காலை காவல்துமுறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டதுடன், புழல் சிறையில் அடைக்கவும் அனுமதி வழங்கியது.

முன்னதாக புகாரின் பேரில் நேற்று  ஆசிரியர் ராஜகோபாலன் வீட்டுக்கு சென்ற காவல்துறையினர் ராஜகோபாலனிடம் விசாரணை நடத்தினர். அப்போது,  பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளியில் அவர் 27 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தது தெரியவந்துள்ளது. அவரது வீட்டிலிருந்த அவரது செல்போன், லேப்டாப் போன்றவற்றை காவல்துறையினர்  பறிமுதல் செய்தனர்.  அவற்றை ஆய்வு செய்தபோது வாட்ஸ் அப் மெசேஜ்களை ராஜகோபாலன் டெலிட் செய்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து சைபர் க்ரைம் போலீசாரின் உதவியுடன் டெலிட் செய்யப்பட்ட மெசேஜ்களை காவல்துறையினர் ரெக்கவர் செய்தனர். இதைத்தொடர்ந்து, தன்மீதான குற்றச்சாட்டை  ஆசிரியர் ராஜகோபாலன் ஒப்புக்கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர்.

இதையடுத்து,  ராஜகோபாலனால் பாதிக்கப்பட்ட மாணவிகளும் அவர்களது பெற்றோர்களும் புகார் அளிக்க முன்வரவேண்டும் என காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது. துணை ஆணையர் ஜெயலட்சுமியின் கைபேசி எண்ணான 94447 72222-ஐ தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் எனத் கூறப்பட்டுள்ளது. புகார்தாரர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.