சென்னை: தமிழகத்தில் அதிகரித்துள்ள போதை கலாச்சாரத்தால் பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா குற்றம் சாட்டியுள்ளார்.
கஞ்சா மற்றும் போதையால் மனிதர்கள் மிருகங்களாக மாறி, பெண்களைச் சீரழிக்கும் மனித மிருகங்களைக் குண்டர் சட்டத்தில் கைது செய்து, குற்றம் நிரூபிக்கப்பட்டவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என திமுக அரசை வலியுறுத்தி உள்ளார்.
தமிழ்நாட்டில் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சமீப காலமாக பள்ளிகள், கல்லூரிகளில் மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படும் நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன. சமீபத்தில் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லைகள் நடைபெற்றிருப்பது தொடர்கதையாகி உள்ளது. மேலும் சமீபத்தில், ஓடும் ரயிலில் இருந்து பெண் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டு, ரயிலில் இருந்து தள்ளி விடப்பட்ட சம்பவங்களும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து தேசிய மகளிர் ஆணையம் தமிழ்நாட்டில் பெண்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதாக கவலை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகளுக்கு அதிகரித்துள்ள போதைக்கலாச்சாரம் என தேமுக பொதுச்செயலாளர் பிரேமலதா குற்றம் சாட்டி உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டப்பட்ட அறிக்கையில், ”தமிழ்நாட்டில் பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது என்பது கவலை அளிக்கிறது. இதுபோன்ற துயர நிகழ்வுகளின் தொடர்ச்சியாக, கோவையிருந்து திருப்பதி செல்லும் விரைவு ரயிலில், 4 மாத கர்ப்பிணிப் பெண்ணுக்குக் கயவர்கள் சிலர் பாலியல் தொல்லை கொடுத்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
மேலும், கூச்சலிட்ட அப்பெண், கர்ப்பிணி என்று கூட பார்க்காமல் அவரை ஓடும் தொடர் வண்டியிலிருந்து வெளியே தள்ளியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அப்பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இந்த கொடூரச் செயலில் ஈடுபட்ட கயவர்கள் தப்பித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
எனவே, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரியச் சிகிச்சை அளிப்பதோடு, தப்பியோடிய கயவர்களை கைது செய்து, கடும் தண்டனை பெற்றுத்தரத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் மட்டும் கடந்த ஒரு மாதத்தில் 100-க்கும் மேற்பட்ட பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகியுள்ளன. பதிவு செய்யப்படாத வழக்குகள் இன்னும் அதிகமாக இருக்கும் எனத் தெரிகிறது.
இளைஞர்களிடையே அதிகரித்துள்ள போதை கலாச்சாரமும், ஆபாச இணையதளங்களும், பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளுக்குக் காரணமாக உள்ளன. எனவே, சமீப காலமாக தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் போதை கலாச்சாரத்தை முற்றிலும் ஒழிப்பதோடு, படிப்படியாக மது விலக்கை அமல்படுத்தத் தமிழக அரசு விரைந்து செயல்பட வேண்டும் என தேமுதிக கேட்டுக்கொள்கிறது.
மேலும் சென்னையில் 84 வயது மூதாட்டியை கை, கால்கள் கட்டப்பட்டு பாலியல் வன்கொடுமை, வேலூரில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை, கிருஷ்ணகிரியில் மாணவியை ஆசிரியர்களே பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் என்று தொடர்ந்து இதுபோன்று நடப்பது மிகப்பெரிய தலை குனிவாகத் தமிழ்நாட்டைப் பார்க்க வேண்டியுள்ளது. இதுபோன்று செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் குண்டர் சட்டத்தில் கைது செய்து, வெளியே வர முடியாத அளவுக்கு கடும் தண்டனை வழங்கினால் மட்டுமே, பாலியல் வன்கொடுமைகளுக்கு தீர்வு காண முடியும்.
கஞ்சா மற்றும் போதையால் மனிதர்கள் மிருகங்களாக மாறி, பெண்களைச் சீரழிக்கும் மனித மிருகங்களைக் குண்டர் சட்டத்தில் கைது செய்து இந்த அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், குற்றம் நிரூபிக்கப்பட்டவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்”.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.