சென்னை:
சேது சமுத்திர திட்டத்தை உடனடியாக செயல்படுத்த ஒன்றிய அரசை வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் இன்று அரசினர் தனித்தீர்மானம் கொண்டு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்று நான்காவது நாள் அமர்வு நடைபெற உள்ளது. இந்த அமர்வில பல திட்டங்கள் முன்மொழியப்படலாம் என்று சொல்லப்படுகிறது. குறிப்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சேது சமுத்திர திட்டத்தை உடனே செயல்படுத்த மத்திய அரசை வலியுறுத்தி தனித்தீர்மானம் கொண்டு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் ராமர் பலம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, ‘இந்த பாலம் இருந்ததற்கான உறுதியான சான்றுகள் இல்லை’ என்று மத்திய அரசு கூறியிருந்தது.

இந்த திட்டம் வெற்றிகரமாக முடிந்தால் தூத்துக்குடி, சென்னை, விசாகப்பட்டினம் என வங்க கடல் ஓரத்தில் இருக்கும் துறைமுகங்கள் சிறப்பான வளர்ச்சி பெறும். தற்போது வரை அரபு நாடுகள் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து வரும் கப்பல்கள் சென்னைக்கு வரவேண்டும் எனில் இலங்கையை சுற்றிக்கொண்டுதான் வருகிறது. ஆனால் ‘சேது சமுத்திர’ திட்டம் நிறைவு பெற்றால் இப்படி இலங்கையை சுற்ற வேண்டிய அவசியமில்லை. பயண நேரமும் சுமார் 30 மணி நேரம் குறையும். எரிபொருளும் மிச்சமாகும். இந்த பாதையை சர்வதேச அளவில் பயன்படுத்தும்போது இந்தியாவின் அந்நிய செலாவனியும் அதிகரிக்கும். இந்த திட்டத்தைதான் உடனடியாக செயல்படுத்தக் கோரி மத்திய அரசை தமிழ்நாடு அரசு வலியுறுத்த உள்ளது. இதற்கான தீர்மானத்தைதான் முதலமைச்சர் கொண்டுவர உள்ளார்.

பாராளுமன்ற தேர்தலையொட்டி திமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில்,சேது சமுத்திர திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும் என்றும், கூறப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.