டில்லி:

மீனவர் நலனுக்காக தனி அமைச்சகம் அமைக்க வேண்டும் என்று மக்களவையில் கேரள மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் வலியுறுத்தினார்.

கடந்த 2014ம் ஆண்டு ஜனவரி மாதம், பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக, தமிழக மீனவர்கள் ராமேஷ்வரத்தில்  நடத்திய இலங்கை அரசுக்கு எதிரான ‘கடல் தாமரை போராட்டத்துக்கு தலைமை ஏற்று நடத்திய பா.ஜனதா மூத்த தலைவர்  சுஷ்மா ஸ்வராஜ், தமிழக மீனவர்கள் பிரச்னையை இந்திய மீனவர்கள் பிரச்னையாக கருத வேண்டும் என்றும், மத்தியில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் மீனவர்கள் நலனுக்காக தனி  அமைச்சகம் உருவாக்கப்படும் என உறுதியளித்திருந்தார்.

அதைத்தொடர்ந்து நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஆனால், அறிவித்தபடி மீனவர்கள் நலனுக்காக தனி அமைச்சகம் உருவாக்கப்படவில்லை.  தற்போது மீண்டும் பாஜகவே ஆட்சி அமைத்துள்ளது. இந்த நிலையில்,  இன்று மக்களவையில் நடைபெற்ற விவாதத்தின்போது, முன்னாள் மத்திய அமைச்சரும், கேரள மாநிலத்தை சேர்ந்த மக்களவை எம்.பி.யுமான சசிதரூர்,  மத்திய பா.ஜ.க அரசு ஏற்கனவே உறுதி அளித்தபடி மீன்வள அமைச்சகம் ஏன் அமைக்கவில்லை என்று கேள்வி எழுப்பியவர்,  மீனவர் நலனுக்காக மத்தியில் தனி அமைச்சகம் அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.