டெல்லி: 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மே 1ந்தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளதால், அதற்கான ஆன்லைனில் பதிவுசெய்யும் முறை அரசு அறிவித்தபடி இன்று மாலை 4 மணி அளவில் தொடங்கியது. ஆனால், ஒரே நேரத்தில் பல ஆயிரம் பேர் இணையதளத்தில் பதிவு செய்ய முயன்றதால், அரசின் இணையதளங்கள், செயலிகள் முடங்கின. சில பகுதிகளில் தடுமாற்றத்துடன் அதிக நேரம் எடுத்துக்கொண்டதாகவும் இளைய தலைமுறையினர் குற்றம் சாட்டி உள்ளனர்.
கொரோனா 2வது அலை தீவிரமடைந்து வருவதால், தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தற்போது 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில், மே 1ந்தேதி முதல் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. இதற்காக அரசின் இணைதயதளத்தில் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. முன்பதிவுக்காக பிரத்யேகமாக COWIN என்ற அரசின் இணையதளம், ஆரோக்ய சேது, யுமாங் செயலிகள் மூலமாகவும் முன்பதிவு செய்துகொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டது.
இந்த பதிவானது இன்று பிற்பகல் 4 மணிக்கு தொடங்கியது. பல லட்சக்கணக்கான இளைய சமுதாயத்தினர் ஒரே நேரத்தில் இணையதளத்தை முற்றுகையிட்டதால், இணையதளம் முடங்கியது. இதனால், தடுப்பூசி பதிவு செய்ய முடியாமல் ஏராளமானோர் ஏமாற்றமடைந்தனர்.
சுமார் 1 மணி நேரம் தடுமாறிய இணையதளம் 5 மணிக்கு மேல் மெதுவாக வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் தடுப்பூசிக்கு பதிவு செய்வதில் தாமதம் ஏற்படுவதாக குற்றம் சாட்டி வருகின்றனர்.