புனே

கோவிஷீல்ட் மருந்து மாநிலங்களுக்கான கொள்முதல் விலையை ரூ.300 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக அதார் புனேவாலா தெரிவித்துள்ளார்.

வரும் மே மாதம் 1 ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.  மேலும் கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியில் 50% மத்திய அரசுக்கும் மீதி உள்ள 50% மாநில அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கும் விற்கலாம் எனவும் அதற்கான விலையை முன் கூட்டியே அறிவிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தற்போது சீரம் இன்ஸ்டிடியூட் உற்பத்தி செய்யும் கோவிஷீல்ட் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனம் உற்பத்தி செய்யும் கோவாக்சின் ஆகிய தடுப்பு மருந்துகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.   இதில் கோவிஷீல்ட் மருந்து விலை மத்திய அரசுக்கு டோஸ் ஒன்றுக்கு ரூ.150 எனவும் மாநில அரசுகளுக்கு ரூ.400 எனவும் தனியாருக்கு ரூ.600 எனவும் சீரம் இன்ஸ்டிடியூட் விலை நிர்ணயித்தது.

இந்த விலை மிகவும் அதிகம் என அனைத்து எதிர்க்கட்சியினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.  மேலும் விலையைக் குறைக்க வேண்டும் என மருந்து நிறுவனங்களை மத்திய அரசு கேட்டுக் கொண்டது.  இதையொட்டி சீரம் இன்ஸ்டிடியூட் தலைமை அதிகாரி அதார் புனேவாலா கோவிஷீல்ட் மருந்துக்கான விலையை  மாநில அரசுகளுக்கு ரூ.400லிருந்து ரூ.300 ஆகக் குறைப்பதாக அறிவித்துள்ளார்.