மும்பை: கொரோனா பாதிப்பில் முதலிடம் பிடித்துள்ள மகாராஷ்டிரா மாநிலத்தில் அறிவிக்கப்பட்டுள்ள  முழு ஊரடங்கு மேலும் 15 நாட்கள் நீட்டிப்பு செய்யப்படும் என மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு கடுமையாக உயர்ந்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கையைத் தொடர்ந்து அம்மாநிலத்தில் ஏப்ரல் 14 இரவு 8 மணி முதல் முழு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பொதுமுடக்கம் ஏப்ரல் 30ந்தேதியுடன் முடிவடையும். ஆனால், தொற்றின் தாக்கம் குறையாததால், மேலும் 15 நாட்கள் பொதுமுடக்கத்தை  நீட்டிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.

இந்த நிலையில், தொற்று பரவல், ஆக்சிஜன் மற்றும் மருந்துகள் தட்டுப்பாடு, தொற்று பரவலை கட்டுப்படுத்த  மேலும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து, முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில்  இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.  இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் டோப்,  மகாராஷ்டிராவில்  லாக்டவுன் ஏப்ரல் 30 க்கு அப்பால் மேலும் 15 நாட்கள் நீட்டிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையிலான கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சரவை உறுப்பினர்கள் அனைவரும் ஆதரவு தெரிவித்து உள்ளதாகவும்,  கொரோனா பரவலின் ஆபத்தான உயர்வைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறினார்.