சென்னை,
தமிழக உள்ளாட்சி தேர்தலை ரத்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டதை தொடர்ந்து, தனி அதிகாரிகள் நியமனம் செய்வது தொடர்பான அரசாணை விரைவில் வெளியாகும் என தெரிகிறது.
தமிழக உள்ளாட்சி தேர்தல் வரும் 17 மற்றும் 19ந்தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், இட ஒதுக்கீடு சரியான முறையில் நிர்ணயம் செய்யப்படாமல் அவசர கோலத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதாக கூறி சென்னை ஐகோர்ட்டில் திமுக தொடர்ந்த வழக்கின் காரணமாக உள்ளாட்சி தேர்தல் குறித்த அரசின் 3 அரசாணைகளை உயர்நீதி மன்றம் ரத்து செய்து உள்ளாட்சி தேர்தலும் ரத்து செய்யப்பட்டது.
மேலும், உள்ளாட்சி உறுப்பினர்களின் பதவி காலம் முடிவடைவதால், தனி அதிகாரிகளை நியமித்து டிசம்பர் இறுதிக்குள் தேர்தலை நடத்த தமிழ்நாடு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது.
தமிழ்நாட்டில் 12 மாநகராட்சிகள், 124 நகராட்சிகள், 528 பேரூராட்சிகள், 385 ஊராட்சி ஒன்றியங்கள், 31 மாவட்ட ஊராட்சி அமைப்புகள் மற்றும் பஞ்சாயத்துக்கள் உள்ளன.
இதில் உள்ள கவுன்சிலர்கள், தலைவர், மேயர் ஆகியோரது 5 ஆண்டு பதவி காலம் வருகிற 24-ந்தேதியுடன் முடிகிறது.
ஐகோர்ட்டு உத்தரவு காரணமாக, அக்டோபர் 25-ந்தேதிக்குள் உள்ளாட்சி அமைப்புகளில் அதன் தலைவர், கவுன்சிலர்கள், மேயர் ஆகியோரை தேர்ந்தெடுக்க முடியாது என்பதால் தேர்தல் முடியும் வரை பதவிகள் காலியாகவே இருக்கும்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் பதவி ஏற்கும் வரை உள்ளாட்சி அமைப்புகளில் தனி அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும். இதற்கு முந்தைய காலங்களில், மக்கள் பிரதிநிதிகள் இல்லாத நிலையில் தனி அதிகாரிகள் பொறுப்பில் இருந்துள்ளனர். அந்த நடைமுறையின்படி இன்னும் 10 நாட்களில் தனி அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும்.
எனவே தனி அதிகாரிகள் நியமனத்திற்கு விரைவில் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டு கவர்னர் ஒப்புதல் பெறப்படும். அதன்பிறகு அரசாணை வெளியிடப்படும்.
எனவே வருகிற 24-ந்தேதிக்கு பிறகு மாநகராட்சி, நகராட்சிகளில் அந்தந்த ஆணையாளர்கள் தனி அதிகாரியாக செயல்படுவார்கள் என தெரிகிறது.
பேரூராட்சிகளுக்கு செயல் அதிகாரிகளும் (இ.ஓ) பஞ்சாயத்து யூனியன்களில் பி.டி.ஓ. தனி அதிகாரியாகவும் செயல்படுவார்கள்.இதற்கான முறையான அறிவிப்பு வருகிற 21-ந்தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படு கிறது.