சென்னை,

பொதுத்துறை வங்கிகளை தனியார்மயம் ஆக்கக்கூடாது என ஏற்கனவே பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வந்த வங்கி ஊழியர்கள் மீண்டும் வரும் 15ந்தேதி போராட்டத்தை அறிவித்து உள்ளனர்.

தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி பாராளுமன்றத்தை முற்றுகையிடப்போவதாக கூறி உள்ளனர்.

அகில இந்திய அளவில் வங்கி ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து டில்லியில் கடந்த மாதம் நடைபெற்ற  பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டாததால் திட்டமிட்டப்படி மீண்டும் போராட்டங்களை நடத்த வங்கி ஊழியர் கூட்டமைப்பு  திட்டமிட்டு உள்ளது.

பொதுத்துறை வங்கிகளைத் தனியார்மயம் செய்யக் கூடாது, வாராக் கடன்களை வசூலிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் வரும் 15-ம் தேதி நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்த உள்ளனர்.

இதுகுறித்து, வங்கி சங்கங்களின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்  கூறியிருப்ப தாவது,

பொதுத்துறை வங்கிகளைத் தனியார்மயம் செய்யக் கூடாது. வங்கிகளை இணைக்கக் கூடாது. வங்கிகளுக்கு போதிய அளவு மூலதனம் வழங்க வேண்டும். அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் வங்கி சேவையை விரிவுபடுத்தப்பட வேண்டும். அதிகளவு நிலுவையில் உள்ள வங்கி வாராக்கடன்களை வசூலிக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடந்த மார்ச் 31-ம் ஆண்டு முடிந்த நிதியாண்டில் பொதுத்துறை வங்கிகளின் செயல்பாட்டு லாபம் ரூ.1.50 லட்சம் கோடியாக இருந்தது. ஆனால், வாராக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டதால் வங்கிகளின் நிகர லாபம் ரூ.574 கோடியாக குறைந்தது.

ஏழை மக்கள், மாணவர்கள் மற்றும் விவசாயிகள் கடன்களை திரும்ப செலுத்தவில்லை என்றால் அவர்களை வங்கி நிர்வாகம் கடும் நெருக்கடி கொடுக்கிறது. அதே சமயம், பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஏராளமான சலுகைககள் வழங்கப்படுகின்றன. இதைத் தடுத்து நிறுத்த வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 15-ம் தேதி டெல்லியில் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்தப்பட உள்ளது.‘ இதில் பொதுத்துறை வங்கிகள், பழைய தலைமுறை தனியார் வங்கிகள், மண்டல கிராமப்புற வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் உள்ளிட்ட பல்வேறு வங்கிகளைச் சேர்ந்த அதிகாரிகள், ஊழியர்கள் இப்பேரணியில் கலந்துகொள்வார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.