சமூக வலைதளத்தில் அவ்வப்போது, தமிழ் திரையுலக பிரபலங்களின் பெயரில் போலி ட்விட்டர் கணக்குகள் தொடங்கப்படும்.

கவுண்டமணி, சார்லி , ஜனகராஜ் உள்ளிட்டோர் பெயரில் போலி ட்விட்டர் கணக்குகள் தொடங்கியிருந்தார்கள். அதற்கு அவர்கள் அனைவருமே இது போலியானது என மறுப்பு தெரிவித்திருந்தார்கள். அந்த வரிசையில் இப்போது செந்திலும் இணைகிறார்.

ட்விட்டரில் தனது பெயரில் யாரோ போலி கணக்கு தொடங்கி, முதல்வர் மீது அவதூறு கருத்து தெரிவித்திருப்பதாக நடிகர் செந்தில் காவல்துறை ஆணையரிடம் புகார் தெரிவித்துள்ளார்.

ஜூன் 12-ம் தேதியன்று எனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் யாரோ சில விஷக்கிருமிகள் நான் பதிவு செய்ததுபோல் தமிழக அரசின் மீதும், மாண்புமிகு தமிழக முதல்வர் மீதும் அவதூறான கருத்துக்களை ட்விட்டரில் போலியாக பதிவிட்டுள்ளார்கள்.

எனது போலியான பெயரில் வெளியான ட்விட்டர் பதிவை நீக்க நடவடிக்கை எடுக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்” என தனது புகார் மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மனு அளித்தபின் பத்திரிகையாளர்களை சந்தித்தவர், எனக்கு சாதாரண கணக்கே தெரியாது, இதில் ட்விட்டர் கணக்கெல்லாம் எப்படித் தெரியும் என்றார் நகைச்சுவையாக.