சென்னை:
செந்தில் பாலாஜி கைது தொடர்பாக அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை வரும் 27ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான ஆட்கொணர்வு மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

சட்டவிரோத பணபரிவர்த்தனை தண்டனை சட்டத்தின் கீழ் மாநில அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை கைது செய்தது. இதையடுத்து, அவருக்கு ஏற்பட்ட உடல்நிலைக் குறைபாடு காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சரியான சட்ட விதிமுறைகளின் படி செந்தில் பாலாஜி கைது செய்யப்பட வில்லை என்றும், இடைக்கால ஜாமின் வழங்கிடவும், சிகிச்சைக்காக அவரை காவிரி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கவும் உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தில்பாலாஜியின் மனைவி மேகலா ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், இடைக்கால ஜாமின் வழங்க மறுத்தது. இருப்பினும், சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில், இந்த வழக்கின் நீதிபதிகள் நிஷா பானு மற்றும் பரத சக்கரவத்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

இரு தரப்பினரின் வாதங்களை தொடர்ந்து விசாரணையை தள்ளி வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.