சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை சட்டத்திற்கு புறம்பாக கைது செய்ததாகக் கூறி அவரது மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு ஏற்கனவே நீதிபதிகள் நிஷா பானு, பரதசக்ரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்த போது உரிய நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை எனவும், கைது குறித்து குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை என்றும் செந்தில் பாலாஜி மனைவி தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து, ஆட்கொணர்வு வழக்கில், செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்ற அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனு, விசாரணைக்கு உகந்ததுதான் என்பதற்கு ஆதரவாக உள்ள உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற தீர்ப்புகளை சுட்டிகாட்டி வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ வாதங்களை முன் வைத்தார்.

அமைச்சரின் கைது சட்டவிரோதம் இல்லை என்றால் ஆட்கொணர்வு வழக்கு தேவையில்லை. ஆனால், இதில் சட்டவிரோத நடவடிக்கை உள்ளது என வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ வாதிட்டார்.

ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததல்ல, எனவே அமலாக்கத்துறை தரப்பில் தான் முதலில் வாதம் முன்வைக்க வேண்டும் என அமலாக்கத்துறை சார்பில் வாதிடப்பட்டது.

மனுதாரரின் அடிப்படை மற்றும் அரசியலமைப்பு உரிமைகள் மீறப்பட்டதால் எங்கள் தரப்பு வாதம் முக்கியமானதாகிறது என்று என். ஆர். இளங்கோ குறுக்கிட்டார்.

மேலும், கைதுக்கான காரணங்களை தெரிவிக்காமல் யாரையும் கைது செய்யக்கூடாது என்பதற்காகவே அரசியல் சாசன சட்டத்தின் 15ஏ பிரிவை அம்பேத்கர் சேர்ந்திருக்கிறார். செந்தில் பாலாஜியை கைது செய்ததற்கான காரணத்தை தெரிவித்திருக்க வேண்டும் அது அடிப்படை உரிமை. செந்தில் பாலாஜியை நீதிமன்ற காவலுக்கு அனுப்பியதே தவறு.

2014-2015 காலகட்டத்தில் தொடரப்பட்ட வழக்கிற்கு திமுகவில் சேர்ந்ததால் பழிவாங்கப்படுகிறார் செந்தில் பாலாஜி, திமுக அரசின் அமைச்சரான பிறகே செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை 2021ல் வழக்குப் பதிவு செய்தது, செந்தில் பாலாஜி மீதான நடவடிக்கையில் உள்நோக்கம் உள்ளது என என்.ஆர்.இளங்கோ வாதிட்டார்.

அனல் பறந்த இந்த விவாதங்களைக் கேட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை மீண்டும் ஜூன் 27 ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.