அருள்மிகு சகிதேவியார் உடனுறை சத்தகிரீசுவரர் திருக்கோயில் திருசேய்ஞலூர்
திருசேய்ஞலூர் (இத்தலம் இந்நாளில் சேங்கனூர் என்று வழங்குகிறது)  கும்பகோணம் – அணைக்கரை பேருந்து மார்க்கத்தில் திருப்பனந்தாள் செல்லும் வழியில் சோழபுரம் ஊரைத் தாண்டி சேங்கனூர் நிறுத்தத்தில் இறங்கி கிழக்கே செல்லும் ஒரு சிறிய சாலையில் (சாலையில் நுழைவு வாயில் உள்ளது) சுமார் 1 கி.மி. சென்றால் இத்தலத்தை அடையலாம். அருகிலுள்ள மற்ற சிவஸ்தலங்கள் திருஆப்பாடி மற்றும் திருப்பனந்தாள். திருப்பனந்தாளில் இருந்து ஆட்டோ மூலம் திருஆப்பாடி மற்றும் சேங்கனூர் ஆகிய இரு தலங்களையும் தரிசிப்பது நல்லது. நேரம் மிச்சமாகும்
தல வரலாறு:-
இப்போது சேங்கனுர் என்று அழைக்கப்படும் இவ்வூர் வாயு பகவானுக்கும் ஆதிசேஷனுக்கும் யார் பலம் வாய்ந்தவர் என்கிற போட்டியில் ஆதிசேஷன் பிடியில் இருந்த மேரு மலையை வாயு பகவான் தகர்த்தபோது ஒன்பது சிகரங்களாக உடைந்து ஒன்பது கண்டங்களில் விழுந்தது. அதில் கந்தமாதனம் எனும் சிகரம் எழு சிகரங்களாகப் பாரதத்தில் எழு இடங்களில் விழுந்தன.
அதில் சத்தியம் எனும் சிகரம் இவ்வாலயம் உள்ள இடத்தில் விழுந்தது. விழுந்தது மேருமலை என்பதால் இவ்வூர் புனிதம் மிக்கதாகக் கருதப்படுகிறது. எனவே முனிவர்களும், மகரிஷிகளும் இங்கு விலங்குகளாகவும், பறவைகளாகவும், மரங்களாகவும் இந்த தலத்தை வழிபட்டு வருகிறார்கள் என்று கூறப்படுகிறது.
முருகப்பெருமான்:-
முருகன் திருக்கைலையில் இருந்து, சூரசம்காரத்தின் பொருட்டு, வீரமகேந்திரத்திற்கு எழுந்தருளியபொழுது, வழிநடையில் இங்கு வந்து சிவபூசை செய்தருளினார் என்பது கந்தபுராண
வரலாறு.
சூரனை அழிப்பதற்காக வந்த முருகப்பெருமான் இத்தலத்தில் சிவபெருமானை வழிபட்டு சர்வசங்காரப் படைக்கலத்தை, உருத்திர பாசுபதத்தைப் பெற்றார். சேய் என்பது முருகனைக் குறிக்கும். சேய்க்கு நல்லதாக அமைந்த ஊராதலின் சேய் + நல் + ஊர் = சேய்ஞலூர் என்று பெயர் பெற்றது. சேய்ஞலூர் தலத்தின் சிறப்பைப் பற்றி கந்தபுராணத்தில், வழிநடைப் படலத்தில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. முருகனுக்கு இத்தலத்தில் பெரிய தனி சன்னதி உள்ளது.
சண்டேசுவர நாயனார் வரலாறு:-
63 நாயன்மார்களில் முதன்மையான இடத்தைப் பெற்ற சண்டேசுவர நாயனாரின் அவதார தலம் சேய்ஞலூர். இத்தலத்தில் எச்சதத்தன் என்ற வேதியருக்கும் பவித்திரைக்கும் மகனாக பிறந்தவர் விசாரசருமன். இவன் தன் இளம் வயதில் அனைத்தும் கற்றான். ஏழாவது வயதில் குல முறைப்படி உபநயனம் நடந்தது. சிவனே அனைத்தும் என நினைத்து அதன்படி வாழ்ந்து வந்தான்.அப்பகுதி அந்தணர்களின் பசுக்களை விசாரசருமன் தானே மேய்த்து வந்தான்.
தாயன்புடன் இவன் மேய்த்ததால் அதிக பால் கொடுத்தது. விசாரசருமன் எப்போதும் சிவசிந்தனையிலேயே இருந்ததால், மண்ணியாற்றங்கரையில் வெண் மணலால் ஆத்திமர நிழலின் கீழ் சிவலிங்கம் செய்து வழிபட்டு வந்தான். அதற்குப் பசுக்கள் சொரியும் பாலை அபிஷேகம் செய்தான்.
இருந்தாலும் பசுவின் சொந்தக்காரருக்குச் சரியான அளவு பால் கிடைத்து வந்தது. விசாரசருமரின் இந்த செயலை பார்த்த சிலர், வேள்விக்கு உபயோகப்படுத்தும் பாலை வீணாக்குவதாகக் கூறினர். இவனது தந்தையும் இதை கேள்விப்பட்டு, மறைந்திருந்து நடப்பதைப் பார்த்தார். இதையெல்லாம் அறியாத விசாரசருமன் எப்போதும் போல் நீராடி விட்டு தன் பூஜைகளைத் தொடர்ந்தான். பசுவின் பாலால் அபிஷேகமும் செய்தான். இதைப்பார்த்த தந்தை அவனை அடித்ததுடன், பால்குடங்களையும் தன் காலால் தட்டி விட்டார்.
சிவ பூஜையில் ஆழ்ந்திருந்த விசாரசருமன், பூஜைக்கு இடையூறு செய்தவரை ஒரு கோலால் தாக்க, அதுவே மழுவாக மாறி எச்சதத்தரின் கால்களை வெட்டியது. கால்கள் வெட்டப்பெற்றவர் தன் தந்தை என்பதை அறியாத விசாரசருமன் மீண்டும் சிவபூஜையில் ஆழ்ந்தான்.
இதைக்கண்ட சிவபெருமான் பார்வதியுடன் தரிசனம் தந்து, “என் மீது கொண்ட பக்தியால் தந்தையின் கால்களை வெட்டினாய். இனி நானே உனக்கு தந்தையாவேன்”, என்று கூறி தன் கழுத்திலிருந்த கொன்றை மாலையை விசாரசருமருக்குச் சூட்டி “சண்டிகேஸ்வரர்” ஆக்கினார். விசாரசருமன் சிவபூஜை செய்து முக்தி பெற்ற திருஆப்பாடி தலம் சேய்ஞலூரிலிருந்து சற்று தொலைவில் உள்ளது. 63 நாயன்மார்களில் ஈஸ்வரப் பட்டம் பெற்றவர் இவரே.
மூலவர் சத்தியகிரீஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். கட்டுமலைக்குக் கீழே அம்பாள் ஆலயம் தெற்கு நோக்கிய சந்நிதியாகவுள்ளது. சோழர்களின் முக்கிய ஐந்து நகரங்களுள் சேய்ஞலூர் தலமும் ஒன்று. வைணவத்தில் நாலாயிர திவ்விய பிரபந்தத்திற்கு உரை எழுதிய பெரியவாய்ச்சான் பிள்ளை அவதார தலம் இது. எதிரே இவருக்கு கோயில் உள்ளது.