ஈழத்தின் இன்றைய நிலையைக் கூறும் “கூட்டாளி” என்ற திரைப்படத்துக்கு சென்சார்போர்டு சான்றிதழ் மறுத்ததை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கண்டித்துள்ளார்.
பிரபல இயக்குநர் சீனு ராமசாமியிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய ஈழத்தமிழரான நிரோஜன், “கூட்டாளி” என்ற பெயரில் தமிழ் ஈழத்தின் இன்றைய நிலை குறித்து திரைப்படம் எடுத்துள்ளார். இரண்டு மணி நேரம் ஓடக்கூடிய இந்தத் திரைப்படத்தில் பல காட்சிகளை வெட்டினால் மட்டுமே சான்றிதழ் அளிக்க முடியும் என்று சென்சார் போர்டு தெரிவித்துவிட்டது. இதையடுத்து தமிழர்கள் வாழும் வெளிநாடுகளில் படத்தைத் திரையிட்டு வருகிறார்கள். மொத்தம் 18 நாடுகளில் படம் திரையிடப்பட்டு வருகிறது. ஆங்கிலப்படம் போல, படத்தின் நீளம் ஒரு மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ப்ரிவ்யூ தியேட்டரில் சிறப்புக்காட்சியாக “கூட்டாளி” திரைப்படம் திரையிடப்பட்டது.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, திரைப்பட இயக்குநர்கள் சீனு ராமசாமி, சமுத்திரகனி, ராஜூ முருகன், நடிகர்கள் ராஜேஷ், இளவரசு உள்ளிட்ட பலர் இத்திரைப்படத்தை பார்த்தனர். பிறகு செய்தியாளர்களிடம் பேசினர்.
வைகோ:
“பல மாதங்களுக்குப் பிறகு என் இருதயத்திலே உறைந்து கிடந்த துக்கமும், கொந்தளித்துக்கொண்டிருந்த ஆத்திரமும், வெடித்துச் சிதற காத்துக்கொண்டிருந்த போர்க்குணமும் இந்த கூட்டாளி என்ற வீர காவியத்தைக் கண்டவுடன் எல்லா கவலைகளுமே பறந்துவிட்டன.
படத்தின் ஒவ்வொரு காட்சியும் அது கனவு என்று சொன்னாலும்கூட அப்படி ஒரு நாள் மலரும் என்ற எண்ணக்கை ஏற்படுத்துகிறது. இந்த காவியத்தை அளித்த இயக்குநர் நிரோஜன் பாரா்டுக்குரியவர். கதை வசனம் எழுதியிருப்பதோடு பகலவன் என்கிற அற்புதமான கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார்.
படததில் வசனங்கள் மிகச் சிறப்பாக இருக்கின்றன. குறிப்பாக, . கேள்விகள் ரத்தத்தால் எழுதப்படுமானால் பதில்களும் ரத்தத்தால் எழுதப்படும் என்கிற வசனம் மனதிலேயே நிற்கின்றது.
தேசத்துக்காக சாக்காட்டுக்கு செல்வோம் என்று நாயகனுடன் நாயகியும் செல்லும் கடைசி காட்சியில் மனது திக் என்று ஆகிறதுது.
ஒளிப்பதிவு இசை பாடல்கள் அனைத்தும் அருமை.
இந்தத் திரைப்படம் கனடா நாட்டிலே திரையிடப்படுகிறது. இன்னும் பல நாடுகளில் திரையிடப்படுகிறது. ஆனால் ஏழரை கோடி தமிழர்கள் வாழும் தாய்த் தமிழ்நாட்டில் வெளியிட முடியவில்லை. சென்சார் தடுக்கிறது.
இளம் தமிழர்கள், தாய்மார்கள் அனைவரும் பார்க்கவேண்டிய திரைப்படம் இது.
இதை. கோடிக்கணக்கான தமிழ் மக்களிடம் கொண்டு போய் சேர்ப்போம்.
இந்த படத்தை திரையிட முடியாத நிலைமை ஏற்பட்டால் இயக்குநர் நிரோஜனின அனுமதியை பெற்று எல்லா கிராமங்களில் கொண்டு போய் சேர்ப்போம்!”
சீனு ராமசாமி:
ஈழத்தமிழரின் வாழ்க்கையை மிகநுட்பமாக நேர்மையாக உண்மைக்கு மிக அருகில் சென்று பதிவு செய்திருக்கிறார்இயக்குநர் நிரோஜன். ஏன் இப்படிச் சொல்கிறேன் என்றால், அந்த நாடு பற்றிய கனவில் இருந்த எல்லோருக்கும் அது நினைவாக இருந்தால் எப்படி இருக்கும்.. என்பதை அற்புதமாகச் சொல்கிறது இந்தத் திரைப்படம்.
உலகத் தமிழர்கள் எல்லோரும் இந்த படத்தைப் பார்க்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறேன். நிரோஜன் என் மாணவன். இதைச் சொல்வதில் எனக்கு மிக பெருமையாக இருக்கிறது.
சமுத்திரகனி:
ஈழத்தமிழர் நிலை குறித்த நிஜமான பதிவு, இந்தத் திரைப்படம். தமிழன் என்ற தட்டி எழுப்பும் திரைப்படம்.
ராஜு முருகன்
உலக வரலாற்றில் மிகப்பெரிய அநீதியான தமிழ் ஈழத்தில் நடந்த இன அழிப்பிற்குப் பிறகு அந்த மண்ணில் இருந்து ஒலிக்கக்கூடிய ஒவ்வொரு குரலும் முக்கியமானது. இந்தப்படம் அப்படி ஒலிக்கிறது. இதை உலகெங்கிலும் எடுத்துச் செல்வது நமது கடமை.
ராஜேஷ்:
டாக்குபிக்சன் பிக்சர் என்கிற முறையிலே தயாரிக்கப்பட்டுள்ள சிறந்த படம், கூட்டாளி. ஈழத்துக்காக போராளிகள் எவ்வளவு தியாகம் செய்திருக்கிறார்கள் என்பதை மனதில் பதியும்படி எடுத்திருக்கிறார் இயக்குநர். ஈழ மக்களின் து நிஜ வாழ்க்கையை நேரடியாக பார்த்தது போல் இருக்கிறது.
வீடியோ: