சிறப்புக்கட்டுரை: ஆர். ஆதித்யன்

பிளவுபட்டுக் கிடக்கும் அ.தி.மு.க ஒன்றிணைய அறுபது நாட்கள் கெடு வித்தாதர் அக்கட்சியின் துணைப்பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன்.

இந்தக் கெடு இன்று ( ஆகஸ்ட் 4)டன் முடிவடைகிறது.

ஆனாலும், இரு அணிகளும் இணைவது குறித்த நேரடி பேச்சு வார்த்தை எதுவும் இன்னும் ஆரம்பிக்கவே இல்லை.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியினரும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியினரும் ஆளுக்கொரு பக்கமாக முறுக்கிக்கொண்டு நிற்கிறார்கள்.

எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசை ஓ.பன்னீர்செல்வம் கடுமையாக தாக்கி வருகிறார்.   தமிழக அரசை ஊழல் அரசு என்று வெளிப்படையாக பேசியிருக்கிறார். தவிர, இரு  அணிகள் இணைப்பு குறித்து பேச்சு வார்த்தை எதுவும் நடக்கவில்லை என்றும் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், டி.டி.வி.தினகரன் விதித்த கெடு இன்றுடன் முடிவடைககிறது. அவர், கட்சிப் பணியில் இறங்க தயாராகிவிட்டார்.

இது குறித்து  சில நாட்களுக்கு முன்பு, “‘தீவிர கட்சிப் பணியில் ஈடுபட இருக்கிறேன். வரும் ஐந்தாம் தேதி (நாளை) அ.தி.மு.க. தலைமை அலுவலகம்  சென்று நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த இருக்கிறேன்” என்று  கூறியிருந்தார்.

உடனே  முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அவரது அணியினர் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர்.   டி.டி.வி. தினகரனை கட்சி அலுவலகத்துக்குள் நுழைய விடக்கூடாது என்றும், தடையை மீறி உள்ளே நுழைய முயன்றால் கைது நடவடிக்கையில் இறங்குவது என்றும் அந்த ஆலோசனையின் முடிவில் தீர்மானிக்கப்பட்டதாக  தகவல் கசிந்தது.

ஆகவே  டி.டி.வி.தினகரன் தனது ஆதரவாளர்களுடன் நாளை தலைமை  அலுவலகத்துக்கு வரும் பட்சத்தில் பெரும்  பிரச்சினை ஏற்படும் நிலை உருவானது.

ஆனால், நேற்று முன்தினம் பெங்களூருவில் பேட்டியளித்த டி.டி.வி.தினகரன், ‘‘ஐம்தாம் தேதி கட்சி தலமை அலுவலகத்துக்கு செல்வேன் என்று  நான் எப்போதும் சொல்லவில்லை. அங்கு செல்லும்போது செய்தியாளர்கள் அனைவருக்கும் தகவல் தெரிவித்துவிட்டுத்தான் செல்வேன்” என்று பல்டி அடித்தார்.

ஆகவே அ.தி.மு.க. தலைமை அலுவலகத்துக்கு செல்லும் திட்டத்தை டி.டி.வி.தினகரன் கைவிட்டுவிட்டதாகவே அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

ஒருவேளை டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர்கள் நாளை கட்சி அலுவலகத்திற்கு வந்தால், அவர்களை தடுத்து எதிர்கொள்ள  எடப்பாடி பழனிசாமி அணியினர் ஆயத்தமாகவே இருக்கிறார்கள். அங்கு காவல்துறை பாதுகாப்பும் போடப்பட்டிருக்கிறது.

தினகரனின் நிலை என்ன?

”தினகரன் ஆதரவாளர்கள் சொல்லிக்கொள்வது போல அவர் பின்னால் 122 எம்.எல்.க்கள். இல்லை.  அவரை   7 எம்.எல்.ஏ.க்களே ஆதரிக்கிறார்கள்.

கட்சி ரீதியாக பார்த்தால்  வி.பி.கலைராஜன், பி.வெற்றிவேல் ஆகிய இரு மாவட்ட செயலாளர்கள் மட்டுமே அவருக்கு ஆதரவாக உள்ளனர்.

தொண்டர்கள் மத்தியில் அவருக்கு சுத்தமாக ஆதரவு இல்லை. பொதுவாக சசிகலா குடும்பத்தினர் மீது தொண்டர்கள் அதிருப்தியில்தான் உள்ளனர். சசிகலா படம் போட்ட போஸ்டர்கள் தமிழகம் எங்கும் கிழிக்கப்பட்டது நினைவிருக்கலாம். இப்போதும் அதே நிலைதான் தொடர்கிறது.

இதையடுத்துதான், அ.தி.மு.க. தலைமை  அலுவலகத்துக்கு வருவதை தவிர்த்துவிட்டார் தினகரன்.

தனது ஆதரவைப் பெருக்கத்தான் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்ல திட்டமிட்டு இருக்கிறார்.

இந்த பயணத்திட்டம் குறித்து நேற்று மாலை சென்னை அடையாறில் உள்ள தனது வீட்டில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். ஆனால் அவர் சுற்றுப்பயணம் செய்தாலும் தொண்டர்கள் ஆதரவைப் பெற முடியாது. ஆதாயத்துக்காக சில நிர்வாகிகள் அவர் பின் அணிவகுக்கலாமே தவிர, தொண்டர்கள் அவரை ஏற்கவே மாட்டார்கள்” என்பதுதான் எடப்பாடி மற்றும் ஓபி.எஸ். அணியினரின் கருத்தாக இருக்கிறது.

“அ.தி.மு.க. தலைமை அலுவலகத்துக்குச் செல்லப்போவதாக கூறி, அதை தினகரன் மறுப்பது இரண்டாவது முறை அரங்கேறியிருக்கிறது. தனக்கு தொண்டர்கள் ஆதரவு இல்லை என்பதை அவர் நன்றாகவே உணர்ந்திருக்கிறார். தவிர மத்திய மாநில அரசுகளும் தனக்கு எதிராக இருப்பதையும் தெரியாமலா இருக்கும்? ஆகவே தமிழகம் முழுதும் சுற்றுப்பயணம் செய்து தொண்டர்களை சந்திக்கப்போவதாக அவர் சொல்வது பரபரப்புக்காக இருக்கலாமே தவிர.. பயனுள்ளதாக இருக்காது” என்பதே அரசியல் நோக்கர்களின் கருத்தாகவும் இருக்கிறது.