ஸ்டாலின்.. கவிபாடாத கம்பன் வீட்டு தறி…!

சிறப்புக்கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன்

திராவிட இயக்கங்களில் பெரும் மூலதனமே பேச்சாற்றல்தான். பத்திரிகை வாங்க காசில்லாமல் தெருமுனை மன்றங்களில் படித்துவிட்டு பேசும் சாமன்யர்களிடம்கூட பேச்சில் அவ்வளவு சுலபத்தில் வென்றுவிடமுடியாது.
காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் கீழ் மட்டஅளவில் வீழ்ந்துபோனதே விவாத திறமைகொண்ட திராவிடமுன்னேற்ற இயக்க தொண்டர்களால்தான்.

அதிலும் தலைவர்கள் வரிசை என்றால் அதிகம் படித்தவர்கள். எம்ஏ பட்டதாரி தலைவர்கள் நிரம்பிய திமுகவில் பள்ளிப்படிப்பையே முடிக்காத கலைஞரை வெகு உச்சத்திற்கு தூக்கிக்கொண்டுபோனது அவரின் எழுத்தும் மேடைப்பேச்சும்தான். அப்படிப்பட்டவரின் மகனான திமுக தலைவர் ஸ்டாலின் இன்று பொதுவெளியில் சரளமாக பேசுவதற்கே திணறுகிறார்.

கொடுமையின் உச்சகட்டமாக, சமூக வலைத்தளங்களில் ஸ்டாலின் இன்று என்னப்பா உளறினார் என்று கிண்டலாக கேட்கும் அளவுக்கு நிலைமை…

தஞ்சாவூரில் திருவள்ளுவர் சிலை அசிங்கப்படுத்தப்பட்டு தமிழகமே கொந்தளித்துப்போயிருக்கிறது.ஆனால் பிரதான எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் ஸ்டாலின், அலட்டாமல் தெள்ளத்தெளிவாக பெரியார் சிலை அசிங்கப்படுத்தப்பட்டுள்ளது என்று பேட்டி கொடுக்கிறார்.

அருகில் உள்ள அவரது ஆதரவாளர்களும் பதறாமல் அதனை வேடிக்கை பார்த்தபடி இருக்கிறார்கள். அதற்கும் மேலாக, பத்திரிகையாளர்கள்கூட சார் தவறாக குறிப்பிடுகிறீர்கள் என்று திருத்தமுன்வரவில்லை.
சேனல்களில், திருவள்ளுர் சிலை அசிங்கப்படுத்தப்பட்டதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் என்று பேட்ச்அப் செய்துவிட்டார்கள்.

இந்த பேட்டிக்கு முன் தினம்தான் ஒரு திருமண விழாவில் மணமகன் பெயரை பெண்ணின் மாமனார் பெயராக குறிப்பிட்டு அதிர்வலைகளை ஏற்படுத்தினார் ஸ்டாலின்.

ஏற்கனவே பெரும்பாலான நேரங்களில் துண்டு சீட்டு வைத்தே பேசுவதால், அவரை துண்டுச்சீட்டு என்றே அரசியல் களத்தில் எதிரே உள்ளவர்கள் கேலி பேசுகின்றனர்.

ஸ்டாலினுக்கு ஏன் இந்த நிலைமை? அதனை இரண்டு கட்டமாகத்தான் பிரித்து பார்க்கவேண்டும்.

முப்பதாண்டு முன்பு திமுகவில் கலைஞர் வலுவான தலைவராக இருந்தபோது அவரின் மகன் என்ற வகையில் மட்டுமே ஸ்டாலினை மக்களும் கட்சியினரும் பார்த்தார்கள்.

அந்த கட்டத்தில்கூட அவர் தன்னை எழுத்தாற்றலிலும் பேச்சாற்றலிலும் வளர்த்துகொள்ளவில்லை. ஸ்டாலின் வித்தியாசமாக பேசினார் என்றோ, உன்னிக்கத்தக்க கருத்துக்களுடன் பேட்டி கொடுத்தார் என்றோ சொல்ல முடியாது.

கலைஞரின் மகனான அவர், தந்தையை பின்பற்றியது லேசாக குரல் வளத்தில் மட்டுமே. ‘’கலைஞர் குரல் அப்படியே இருக்குப்பா’’ என்று மேடைமுன் அமர்ந்திருந்த கூட்டத்தினர் சிலாகித்தார்களே தவிர, அதிரவிட்ட பேச்சுக்களை அவர்கள் கேட்டதில்லை. ஸ்டாலின் மேடைப்பேச்ககள் எங்குமே பரபரப்புக்காகவோ மேற்கோளுக்காகவேகூட எடுத்துக்காட்டப்படவில்லை.

கலைஞரை சுற்றி பேச்சாற்றல் படை இருந்தபோது, அவர்களிடமிருந்து கற்றதைவிட சுய அறிவோடு அவர் வளர்த்துக்கொண்டவைதான் அதிகம். அவரை அரசியல் களத்தில் முன்னணி வரிசையில் நிலைநிறுத்தியதும் அந்த திறமைதான். எழுத்தாற்றலையும் வியக்கத்தக்க பேச்சையும் வளர்த்துகொள்ள ஒய்வே இல்லாமல் கலைஞர் அசராமல் உழைத்தார்.

ஆரம்பம் முதலே இந்த இடத்தில்தான் அலட்சியம் காட்டினார் ஸ்டாலின். ஒரு மன்னரின் மகனாக இளவரசனாய் வலம் வந்தாரேயொழிய மகுடம் சூடுபவன் வளர்த்துக்கொள்ளவேண்டிய தனித்திறமைகளை அவர் நாடவே யில்லை. காரணம், அவர் தனக்காக விரும்பி உருவாக்கிக்கொண்ட பொன்முடி பொய்யா மொழி உள்ளிட்டோரின் நட்பு வட்டாரம் அப்படி.

அனைவருமே தலைவர் மகனுக்கு நெருக்கமாக இருந்துகொண்டு அதைவைத்து கோலோச்ச நினைத்தவர்கள் தானே தவிர, எவருமே வரலாறுகளையோ, சமூகம் சார்ந்த பாதிப்புகளையோ அக்கறையுடன் பகிர்ந்துகொள்ள இயலாதவர்கள். எம்எல்ஏ, மேயர், அமைச்சர் துணை முதலமைச்சர் என படிப்படியாக முன்னேறிய ஸ்டாலின் தடையின்றி பேசினாரோ தவிர, வியத்தக்க பேச்சாற்றல் நகைச்சுவை, டைமிங் சென்ஸ் போன்றவற்றில் பிரகாசிக்கவேயில்லை.

திமுகவில், மொழி, வரலாறு இலக்கியம், படைப்பாற்றல் கொண்டிருந்த தலைவர்களை நாடுவதில் ஸ்டாலினுக்கு விருப்பமே இல்லாமல் போனதுகூட இதற்கு காரணமாக இருக்கலாம்.

‘கலைஞரை பொறுத்தவரை எண்பதைந்து வயது தாண்டிய பிறகும்கூட அவ்வளவு சுறுசுறுப்பாக செயல்பட்டார். சூரிய உதயத்திற்குள் அத்தனை காலைப்பேப்பர்களையும் அவரே நேரடியாக படித்து முடித்துவிடுவார். உதவியாளர் செலக்ட் செய்து தரும் பேப்பர் கட்டிங்குகளை மட்டுமே படிக்கும் தலைவர்கள் ரகமல்ல அவர். பெட்டிச்செய்தியைகூட விடாமல் பார்ப்பார். அது முக்கியத்துவம் பெற்ற செய்தியென்றால், அதைவைத்தே அன்றைக்கு அசத்தலாக எதிர்வினையாற்றுவார்.

பத்திரிகைகளை படிப்பதோடு நிற்காமல் தன்னைப்போல பத்திரிகைகளை காலையில் கரைத்துக்குடித்த நண்பர்களோடு நேரிலோ தொலைபேசியிலோ உரையாடுவார். சரிக்கு சமமாக இயல்பான நிலையில் விவாதிப்பார். அப்போதுதான் எதிராளியிடமிருந்து அச்சமோ தயக்கமோ இல்லாமல் கருத்துக்கள் வரும் என்பதை உணர்ந்தவர் அவர்.

அரசியல், இலக்கியம், சினிமா, பொருளாதாரம், நாட்டு நடப்புகள் போன்றவற்றில் அப்டேட்டாக இருக்க இதுபோன்ற வகைகளைத்தான் கையாண்டார். கிடைக்கும் புதிய தகவல்களை விடாமல் பிடித்துக்கொள்வார் ஒவ்வொரு விஷயங்களும் மனதில் ஆழப்பதிந்துபோக, அடுத்தகட்டமாக அதன் மேல் புதுப்புது கருத்துருவாக்கங்களை செய்வார்.

ஆனால் ஸ்டாலின் விஷயத்தில் இது முற்றிலும் நேர்மாறான நிலை என்றே சொல்லலாம்.  விஷயம் தெரிந்தவர்களை அருகில் வைத்துக்கொண்டு இயல்பாக கலந்துரையாடுவதை அவர் செய்யவில்லை என்றே தோன்றுகிறது அப்படி பழக்கமாக்கியிருந்தால், பல முக்கியமான நிகழ்வுகளும் பெயர்களும் அவர் மனதில் எளிதாக குடியேறி அழிக்காமுடியா தன்மை பெற்றிருக்கும்.

\

அதிலும் கலைஞர் மறைந்து திமுக தலைவராக பதவியேற்றது முதல் ஸ்டாலினுக்கு என்ன ஆச்சு என்றே தெரியவில்லை. சகட்டு மேனிக்கு வார்த்தைகள் தவறுகின்றன,

தலைவருக்கு நாம் போய் சொல்லுவதா? தலைவருக்கு தெரியாமலா இருக்கும்? தலைவருக்கு தெரியாததா என்று தூரநின்றே வேடிக்கை பார்க்கும் கும்பலால், ஸ்டாலின் கற்றல்கள் பலவற்றை பெற்று மெருகேற்றிக் கொள்ள முடியாமல் திணறுகிறார் என்பது தெள்ளதெளிவாகவே தெரிகிறது.

சூட்டிங் ஸ்பாட்டுக்கு போய் டைரக்டர், வசனகர்த்தா போன்றோர் என்ன செய்யச்சொல்கிறார்களோ அதை மட்டுமே செய்வதுபோல் உள்ளது..

அவர் பழமொழிகளை சொல்லும்போதெல்லாம் பகீர் என்கிறது. ஒரேயொரு முறைதான் படித்துவிட்டு வந்து அதை தேர்வுகூடத்தில் சரியாக எழுத முடியாத நிலைதான் அவருக்கு.

பொதுவாக மனதில் ஒரு திரைப்படம் நினைவுக்கு வந்தால் அது தொடர்பான விஷயங்கள் கூடவே அலைமோத வேண்டும். அத்தனை விஷயங்களையும் எடுத்தாகவேண்டிய அவசியம் இல்லை. அதில் வேண்டியவற்றை எடுத்துக்கொண்டு பேசவோ எழுதினாலே போதும்.. அதுபோலத்தான் ஒரு மாவட்டம் என்று வருகிறது என்றால், ஆளாளுக்கு நினைவுக்கு வரும் விஷயங்கள் வேறுபடும்.

அரசியல்தலைவர்கள், அரசு உயர் அதிகாரிகள், ஊடகத்துறையினர், தொழில் அதிபர்கள், சினிமா தயாரிப்பாளர் கள் என அவரவர் பயன்பாட்டுக்கு தகுந்தவாறு, உடனே தொடர்புடைய ஆட்களும் விஷயங்களும் மனக்கண்முன் வந்தாடும். தொழிலில் ஆத்மார்த்தமாய் ஊறியவர்களுக்கு மட்டுமே இது சாத்தியம், இல்லையென்றால் உதவியாளர்கள் அல்லது வெளியாட்களின் தயவில்தான் ஒவ்வொன்றையும் அணுக முடியும்.

கலைஞர் என்றால், அவருக்கு கட்சியின் அத்தனை மாவட்ட செயலாளர்கள் மட்டுமல்ல, அதில் ஒரு மாவட்டம் என்றாலும் ஒன்றிய நகர அளவில் நிர்வாகிகளை யார் தயவும் இல்லாமல் பெயர் சொல்லி கூப்பிடும் அளவுக்கு இருப்பார். இதற்கு நேரடி நினைவாற்றல் காரணம் அல்ல. ஒவ்வொரு நிர்வாகியுடனா தொடர்பும் அவர் மனதில் நாலைந்து மறக்க முடியாத சம்பவங்களால் கட்டப்பட்டிருக்கும்.

யோவ் நீதானே அந்த பொதுக்கூட்டத்துக்கு தலைமை விஷயத்தில் அக்கப்போர் பண்ணவன் என்று கேட்பார். முரசொலியில் திமுக தொடர்பான, பகுதி செய்திகளையும் ஆழ்ந்து படிப்பதனால் அடிக்கடி பெயர்கள் தென்பட்டு அவர் மனதில் ஊறிப்போயிருந்தது.

தலைவராக இருந்தாலும் தன்னை வளர்த்துக்கொள்ள ஒவ்வொரு நாளும் கலைஞர் பாடுபட்டுக்கொண்டே இருந்தார்.. மாபெரும் தலைவர் மகனாயிற்றே தனக்கா இல்லாமல் போய்விடும் என்றும் எல்லாமும் வராமல் போய்விடும் என்றும் ஸ்டாலின் அன்று நினைத்தரோ என்னமோ, இன்றும் அப்படியேதான் நினைக்கிறாராமோ என்னவோ. அப்படி இருந்தால் பிரச்சினையே ஆதுதான்.

எப்பேர்பட்ட ஆளாக இருந்தாலும் சரி, சிரமேற்கொண்டு பழகப்பழகவும் கேட்டக்கேட்கவும்தான் எதுவுமே வசப்பட்ட சரளமான தன்மையை கொடுக்கும். அதற்கு தனிப்பட்ட ரீதியில் தினமும் கணிசமான நேரம் உழைப்பு அவசியம்

கலைஞரின் மகன் அவரைப்போல நூறு சதவீதமும் இருக்கவேண்டிய அவசியம் இல்லை. ஆனால் அரசியலில் தந்தை எதனால் புகழ்பெற்றாரோ, அதே அரசியல் பாதையில் கட்சியின் தலைவன் என்ற தகுதியோடு பயணிக்கும் மகனுக்கு தந்தையின் ஆற்றலில் கால்பங்குகூட இல்லையே என்பதுதான் இங்கே பலரின் ஆதங்கத்திற்கு எதிர்மறையான விமர்சனங்களும் காரணம்.

ஸ்டாலின் திருவள்ளுவருக்கு பதில் பெரியார் என்று தவறுதலாக பேசும் வீடியோ…