சென்னை:

திமுக கூட்டணியில் தமாகா சேர கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மீறி கூட்டணி வைத்தால், கட்சியினர் கூண்டோடு மாற்று கட்சிக்கு தாவ தயாராகி வருகின்றனர்.,

அதிமுக பாஜக கூட்டணியில் ஜி.கே.வாசனின் தமாகா இணையும் என்று கடந்த ஒரு மாதமாக கூறப்பட்டு வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியும், தங்களது அணிக்கு வந்தால் பரிசீலிப்போம் என்று கூறி உள்ளது.

இதன் காரணமாக எந்த கூட்டணியில் சேருவது குறித்து முடிவு எடுக்க முடியாமல் வாசன் குழப்பி போய் உள்ள நிலையில், இன்று தமாகா மாவட்ட தலைவர்களுடன் ஜி.கே.வாசன் ஆலோசனை நடத்துகிறார்.

நாடாளுமன்ற தேர்தல் காரணமாக தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் கூட்டணிகள் உறுதி செய்யப்பட்டு விட்ட நிலையில், தமாகா எந்த அணியில் சேரும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

அதிமுக கூட்டணியில் தமாகாவுக்கு ஒரு இடம் ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தொடர்ந்த அ.தி.மு.க. பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. கூட்டணியில் சேருவது குறித்து, இன்று தமிழக அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி ஜி.கே.வாசனை  நேரில் சந்தித்து பேசினர். ஆனால், த.மா.கா. 2 தொகுதிகளை கேட்டு முரண்டு பிடிப்பதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், திமுக தரப்பில் கூட்டணி தொடர்பாக பேச்சு வார்த்தைக்கு அழைக்காத நிலை யில்,  தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர்,  தமாகா, காங்கிரஸ் கூட்டணியில் சேர்ந்தால், தொகுதிகள் ஒதுக்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என கூறினார்.

அ.தி.மு.க. தரும் ஒரு தொகுதியை ஏற்பதில் த.மா.கா.வுக்கு தயக்கம் மட்டும் இல்லாமல், அவர்களின் இரட்டை இலை சின்னத்திலும் போட்டியிடவும்  தயக்கம் உள்ளது. இதன் காரணமாக இருதலை கொள்ளி எறும்பாக தவிக்கும் ஜிகே.வாசன்,  கடந்த 2 நாட்களாக கட்சி நிர்வாகிகளுடன்  ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் அதிமுக கூட்டணியில் தமாகா  சேர கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளதாக தெரிகிறது. கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் , பாஜக கூட்டணி அமைத்துள்ள அதிமுகவுடன் சேருவதா என பகிரங்கமாக எதிர்த்து கருத்து தெரிவித்து உள்ளனர்.

தற்போதைய சூழலில், தமிழகத்தில் அதிமுக, பாஜகவுக்கு பொதுமக்களிடையே கடுமையான எதிர்ப்பு உள்ளதை சுட்டிக்காட்டியவர்கள், மீறி நாம் கூட்டணி வைத்தால் கட்சியின் தலைவர்கள் மட்டுமல்லாது தொண்டர்களும் சிதறி விடுவார்கள், கட்சியினர் கூண்டோடு காங்கிரஸ் கட்சிக்கு  சென்றுவிடுவார்கள்  என்பதையும் சுட்டிக்காட்டி உள்ளனர்.

காங்கிரஸ் கட்சிக்கு ராகுல்காந்தி தலைமை ஏற்றது முதல், அவரின் மென்மையான அணுகுமுறை யால், ஏற்கனவே காங்கிரஸ் கட்சியில் இருந்த பிரிந்து சென்ற பல தலைவர்கள் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைந்து வருகின்றனர். இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியில் பிரிந்து வந்த தமாகா, காங்கிரசுக்கு எதிரான பாஜகவுடன் கூட்டணி வைத்தால், அதை முப்பனாரின் ஆன்மா ஏற்றுக்கொள்ளாது என்று கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

தொடக்கத்தில் தமாகாவுக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்கப்பட்ட நிலையில், பின்னர் நடைபெற்ற தேர்தல்களில் வெவ்வெறு சின்னங்கள் ஒதுக்கப்பட்டன. கடந்த தேர்தலில் மக்கள் நல கூட்டணி யில் தென்னந்தோப்பு சின்னத்தில் போட்டியிட்டு, அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட்டை பறிகொடுத்த தமாகா, இந்த தேர்தலில் தனது கட்சியை நிலைநிறுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

இதன் காரணமாக ஜிகேவாசன் முடிவு எடுக்க முடியாமல் தவித்து வருவதாக கூறப்படுகிறது. ஜிகே வாசன் எடுக்கப்போகும் முடிவே… எதிர்காலத்தில் தமாகா என்ற கட்சி இருக்குமா? அல்லது காலியாகுமா?  என்பது தெரிய வரும்…