சென்னை:

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும், ஓய்வுபெற்ற நீதிபதி  ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்துக்கு  தடை விதிக்க கோரி அப்பல்லோ தொடர்ந்த வழக்கில், விசாரணை முடிவடைந்த நிலையில்  தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஜெ. மரணம் குறித்து விசாரணை நடத்தி  வரும் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத் திற்கு தடை விதிக்க வேண்டும் என்று அப்போலோ மருத்துவமனை  கடந்த மாதம் சென்னை உயர்நீதி மன்றத்தில் திடீரென வழக்கு தொடர்ந்தது.

அப்போலோவில் சுமார் 75 நாட்களாக சிகிச்சை பெற்ற தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, நலமுடன் இருக்கிறார் என்று அப்போலோ மருத்துவமனை வட்டாரம்  கூறி வந்த நிலையில், திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக விசாரணை நடத்தி வரும்  ஆறுமுகசாமி ஆணையம், அப்போலோ மருத்துவர் களையும் விசாரணைக்கு அழைத்தது. இந்த நிலையில், அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் உயர்நீதிமன்றத்தில் கடந்த பிப்ரவரி 9ம் தேதி மனு  தாக்கல் செய்தது.

அதில்,  ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து விசாரிக்க அரசு சாராத மருத்துவர்களை கொண்ட குழு அமைக்க வேண்டும் என்றும், அதுவரை  விசாரணை மேற்கொள்ள ஆணையத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்தது. இன்றைய விசாரணையை தொடர்ந்து, வாதங்கள் முடிவடைந்த நிலையில், தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.