சென்னை:

மிழகத்தில் 21 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ள நிலையில், 18 தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் ஆணையம், தேர்தல் அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

இதை எதிர்த்து, 18 தொகுதிகளுடன் சேர்த்து விடுபட்ட 3 தொகுதிளுக்கும் தேர்தல் நடத்த  உத்தர விட வேண்டும் என்று வலியுறுத்தி, திமுக சார்பில், உச்சநீதி மன்றத்தில் அவசர வழக்கு தொடரப்பட்டது.

இந்த மனுக்கள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வசம் தாக்கல் செய்யப்பட்டு அவசர வழக்காக விசாரிக்க  கோரப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி,  விரைவில் விசாரிப்பதாக  தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,  3 தொகுதிகளில் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இதற்கு காரணமாக தேர்தல் வழக்குகள் நிலுவையில் இருப்பதாக காரணங்கள் தெரிவிக்கப்பட்டு உள்ளது.  வழக்கு இருந்தால் தேர்தல் நடத்தக் கூடாது என்பது மரபல்ல.  மேலும் இந்த வழக்குகளில் தேர்தல் நடத்த தடை உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை.  எனவே, குறிப்பிட்ட தொகுதிகளில் தேர்தல் நிறுத்தி வைத்துள்ளதில் உள்நோக்கம் தெரிகிறது என்று குற்றம் சாட்டினார்,

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியை தக்க வைக்க, தேர்தல் ஆணையம் உள்நோக்கத்துடன் செயல்படக் கூடாது.

இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.