சென்னை:
ராஜ்யசபா உறுப்பினர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த அதிமுக முன்னாள் அமைச்சரும், ஓபிஎஸ் ஆதரவாளருமான பொன்னையனுக்கு, மாநில திட்ட ஆணையத்தின் துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டு உள்ளது. அரசின் உயர்பதவியை வழங்கி, பொன்னையனை அதிமுக சமரசம் செய்து வைத்துள்ளது.
அதிமுகவில் தொடரும் உள்குத்து பஞ்சாயத்து தற்போது மீண்டும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஓபிஎஸ், ஈபிஎஸ் இடையே தொடரும் மோதலும், அதிமுகவில் நடைபெற்று வரும் உள்குத்துக்களும் ராஜ்யசபா உறுப்பினர் பதவிக்கான பெயர் அறிவிப்பிலேயே அம்பலமாகி உள்ளது… இது அதிமுக தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
ஜெ.மறைவைத் தொடர்ந்து, அதிமுக இரண்டு, மூன்றாக பிரிந்த நிலையில், பாஜக தலையிட்டு, அதிமுகவை மீண்டும் இணைத்தது. ஆனால், ஓபிஎஸ்-க்கு முதல்வர் பதவியை விட்டுக்கொடுக்க எடப்பாடி மறுத்துவிட்ட நிலையில், துணைமுதல்வர் பதவியைப் பெற்றுக்கொண்ட ஓபிஸ், தனி ரூட்டிலேயே செயல்பட்டு வருகிறார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தல்களிலும், லோக்சபா தேர்தலிலும் அவரது ஆதரவாளர்களுக்கு பெருவாரி யான பதவிகளுக்கான இடங்களை கேட்ட நிலையில், ஒருசில இடங்கள் மட்டுமே வழங்கப்பட்டது. இந்த நிலையில், காலியாகும் 6 மாநிலங்களவை உறுப்பினர்களில் 3 உறுப்பினர்கள் அதிமுகவுக்கு கிடைக்கும் நிலையில், அதை கைப்பற்றவும் ஓபிஎஸ் முயற்சி செய்தார்.
ஓபிஎஸ் தீவிர ஆதரவாளர்களான கேபி முனுசாமி, பொன்னையன், மனோஜ்பாண்டியன் உள்பட பலர் அந்த பதவிகளை பிடிக்க கடும் முயற்சிகளை மேற்கொண்டு வந்தனர். ஓபிஎஸ் தரப்பில் இருந்தும் எடப்பாடி தரப்புக்கு கடும் நெருக்கடி கொடுக்கப்பட்டு வந்தது.
இதற்கிடையில், லோக்சபா தேர்தல் ஒப்பந்தப்படி, தங்களுக்கும் பதவி வேண்டும் என கூட்டணி கட்சிளான பாஜக, தேமுதிக, தமாகா போர்க்கொடி தூக்க,தர்மச்சங்கடமான நிலைக்கு அதிமுக தள்ளப்பட்டது.
இதற்கிடையில், பாஜக மேலிடம் தரப்பில் இருந்து, தமாகா தலைவர் ஜி.கே.வாசனுக்கு ஒரு இடத்தை ஒதுக்க அறிவுறுத்தப்பட்ட நிலையில், தேமுக பொருளாளர் பிரேமலதாவும் தனது பங்குக்கு அதிமுகவை மிரட்டத் தொடங்கினார். இதனால் என்ன செய்வதன்று தெரியாமல் விழிபிதுங்கி வந்த அதிமுக தலைமை தற்போது, பிரச்சினையை ஓரளவுக்கு சமாளித்து வேட்பாளர்கள் பெயரை அறிவித்து உள்ளது.
அதன்படி, அதிமுக மூத்த தலைவரும், முன்னாள் மக்களவை துணைசபாநாயகருமான தம்பித்துரைக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்பட்டு உள்ளது. இவர் சசிகலாவின் ஆதரவாளர் மட்டுமின்றி எடப்பாடி பழனிச்சாமிக்கும் நெருக்கமானவர். அதே வேளையில் ஓபிஎஸ்-ஐ சமாதானப்படுத்தும் நோக்கில் அவரது தீவிர ஆதரவாளரான கே.பி.முனுசாமிக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டு உள்ளது. மற்றொரு இடத்தை, பாஜகவின் நெருக்குதல் காரணமாக, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசனுக்கு ஒதுக்கி உள்ளது…
இது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இது மட்டுமின்றி, கூட்டணி கட்சியான தே.மு.தி.கவுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது அக்கட்சியினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கூட்டணியில் சேரும்போது கூட்டணி தர்மத்தை மதிக்கும் உங்களுக்கு உரிய மரியாதை தரப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேமுதிகவிடம் தெரிவித்திருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், தற்போது பா.ஜ.க பேச்சைக் கேட்டு சீட் தராமல் ஏமாற்றிவிட்டதாக தேமுக தலைவர்கள் அதிமுக மீது கொலைவெறியில் உள்ளனர்…. அதிமுக கூட்டணியில் இருந்து தே.மு.தி.க விலக முடிவெடுத்திருப்பதாகவும் தகவல் வெளியாகி வருகிறது.
இந்த சூழலில்தான் அதிமுக தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கி வந்த பொன்னையனை அமைதிப்படுத்தும் நோக்கில், அவருக்கு அரசு பதவி வழங்கப்பட்டு உள்ளது. மாநில திட்ட ஆணையத்தின் துணைத் தலைவராக அவரை தமிழகஅரசு நியமனம் செய்துள்ளது…
அதிமுக அரசின் இந்த சமரச நடவடிக்கை அதிமுக தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ள நிலையில், எடப்பாடி, ஓபிஎஸ் தரப்புக்கு இடையே நடைபெற்று வரும் மோதல் தொடர்ந்துகொண்டிருப்பதையும் உறுதி செய்துள்ளது….
அடுத்த ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவோம் என்று மார்த்தட்டிக்கொள்ளும் அதிமுக, தேர்தல் வரை ஒற்றுமையாக இருக்குமா என்பதே கேள்விக்குறியாகி உள்ளது….