ஈரோடு,
தமிழகத்தில் நிலவி வரும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், அரசியல் சார்ந்த கேள்விகளுக்கு என்னால் பதிலளிக்க முடியாது என்று ஜகா வாங்கியுள்ளார் செங்கோட்டையன்.
எடப்பாடியின் அறிவிப்பு, தினகரன் நீக்கம் குறித்த கேள்விகளுக்கு பதில் அளிக்க மறுத்துவிட்டார்.
எடப்பாடி தலைமையில் அதிமுக அம்மா அணியினர் கலந்துகொண்ட ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி, டிடிவி தினகரனின் துணைப்பொதுச்செயலாளர் பதவி செல்லாது என்று கூறினர்.
இந்த தீர்மானத்தில் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன் போன்றோர் கையெழுத்திடவில்லை. அதன் காரணமாக சசிகலா மற்றும் டிடிவி தினகரனால் நியமனம் செய்யப்பட்ட செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன் போன்றோர் பதவிகளும் கேள்விக்குறியாகி உள்ளது.
இந்நிலையில் தமிழக கல்வி அமைச்சர் செங்கோட்டையன் இன்று ஈரோடு வந்தார். எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவையொட்டி ஈரோட்டில் மாணவர்கள் பங்கேற்ற மாரத்தான் போட்டி நடந்தது. இந்த போட்டியை அமைச்சர்கள் செங்கோட்டையன், விஜயபாஸ்கர், கருப்பண்ணன் தொடங்கி வைத்தனர்.
அப்போது செய்தியாளர்கள் அவரிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அதற்கு பதில் அளிக்க மறுத்து விட்டார்.
தினகரன் நியமனம் செல்லாது என்ற அறிவிப்பு குறித்து கருத்து தெரிவிக்க மறுத்த செங்கோட்டையன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்பு குறித்தும், கருத்துக்கூற செங்கோட்டையன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பதில் அளிக்க தனி அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளார் என்று கூறினார்.
அமைச்சர் செங்கோட்டையன் சசிகலாவால் அவைத்தலைவராக நியமிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.