விபத்து நடந்த அன்று…

நெட்டிசன்:

பரணி வெங்கடாசலம் அவர்களின் முகநூல் பதிவு:

கும்பகோணம் பள்ளி தீ விபத்துக்குக் காரணமானவர்கள் என கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்ட தீர்ப்பை அறிந்தவுடன், அனைவருக்கும் அதிர்ச்சிதான்.இத் தீர்ப்பை விமர்சிக்காதவர்களே இல்லை.

ஆனால் இதே போன்று அதற்கு பல வருடங்களுக்கு முன்பே மதுரை பள்ளியில் விபத்து ஏற்பட்டது குறித்து என் தாயார் தெரிவித்தவுடன் இன்னும் அதிர்ச்சியானேன்.

இன்று அந்த இடம்..

மதுரை மணிநகரம் மேலத்தெருவில் செயல்பட்டு வந்த சரஸ்வதி (மகளிர்) நடுநிலைப்பள்ளி 4-4-1964  அன்று இடிந்து விழுந்தது.  36 குழந்தைகள் பலியானார்கள்.

அந்த பள்ளி இருந்த இடம். அந்தப் பள்ளியைத் தாங்கி நின்ற 12 அடி உயரக் கல்சுவர் இப்போதும் இருக்கிறது. காலியிடத்தின் மையத்தில் கற்கோயில் ஒன்றும் இருக்கிறது.  இதைச் சுற்றி இருந்த பள்ளிக் கட்டிடம்தான் இடிந்து விழுந்து 36 குழந்தைகள் பலியானார்கள்.

இந்த விபத்துக்கான காரணம் என்ன தெரியுமா.. பள்ளிக்கு அருகில் இருக்கும் ரயில் பாதையில்..எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று வேகமாகச் சென்றதுதான்!

ஆம்..ரயில் சென்ற அதிர்வைக்கூட தாங்க முடியாத நிலையில் இருந்தது பள்ளிக்கட்டிடம்!

இந்தச் சம்பவத்தால், பள்ளிக்கூடம் மூடப்பட்டது.  நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. விபத்துதான் என்று அது முடித்துவைக்கப்பட்டது.

இடுகாட்டில் கல்வெட்டுகள்..

பள்ளி நிர்வாகி பிச்சையா பிள்ளை, தன் உறவினரான அன்றைய மதுரை மேயரும், திமுகவில் செல்வாக்கு மிக்கவருமான மதுரை முத்து மூலம் புதிய பள்ளி துவங்க அனுமதி பெற்றார்.

பரணி வெங்கடாசலம்

விபத்து நடந்த மூன்றாவது ஆண்டு, பள்ளி இருந்த அடுத்த தெருவிலேயே மங்கையர்க் கரசி என்ற பெயரில் பள்ளிக்கூடம் கட்டினார். இன்று அது, மேநிலைப்பள்ளி, கல்லூரி என ஐந்தாறு நிறுவனங்களாக தழைத்து நிற்கிறது.

ஆம்..மதுரை விபத்தின்போதே சட்டம் சரியாக செயல்படுத்தப்பட்டிருந்தால் கும்பகோணம் சோகம் நடந்திருக்காது.

வரலாற்றை மறந்த சமூகம் தண்டனைக்குள்ளாகும் என்பார்கள். அது இந்த விசயத்தில் நூற்றுக்கு நூறு சரியாகிவிட்டது.