சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் 3ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ள திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில், அரசு சாட்சிகள் பிறழ் சாட்சிகளாக மாறி வருகின்றனர். இதுவரை 10 சாட்சிகள் பிறழ்சாட்சிகளாக மாறி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த வழக்கில், முக்கிய சாட்சியான ஓய்வுபெற்ற விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் ராதாகிருஷ்ணன் எந்த உத்தரவையும் நான் சுய நினைவுடன் போடவில்லை என கூறியுள்ளார்.
ஏற்கனவே திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான ஊழல் வழக்கிலும், அதிகாரத்துக்கு வந்தவுடன் பலர் பிறழ் சாட்சிகளாக மாறிய நிலையில், பின்னர், ஒருவர் நீதிமன்றத்தை நாடிய நிலையில், நீதிமன்றம் தலையிட்டு வழக்கை மீண்டும் விசாரிக்க செய்துள்ள நிலையில், தற்போது திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பொன்முடி வழக்கிலும் தொடர்ந்து, முக்கிய சாட்சிகள் ஒவ்வொருவராக பிறழ் சாட்சிகளாக மாறி வருவது, காவல்துறை மற்றும் நீதித்துறையின் மீதான நம்பகத்தன்மை கேள்விக்குறியாகி, அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.
பொன்முடிக்கு எதிரான செம்மண் குவாரி வழக்கில், இதுவரை 9 பேர் பிறழ் சாட்சியம் ஆன நிலையில், மேலும் ஒருவர் பிறழ் சாட்சியம் அளித்துள்ளார். ஓய்வு பெற்ற அதிகாரி பிறழ் சாட்சியம் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மறைந்த முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி தலைமையிலான தி.மு.க ஆட்சி நடந்த 2006 – 11 காலகட்டத்தில் அமைச்சராக இருந்த பொன்முடி, கனிம வளத்துறைக்கும் அவர் பொறுப்பு வகித்து வந்தார். அப்போது, விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டத்தில் உள்ள பூத்துறை கிராமத்தில் உள்ள குவாரியில், அனுமதிக்கப்பட்டதைவிட அளவுக்கு அதிகமாக 2லட்சத்து 64 ஆயிரத்து 644 லோடுகள் செம்மண் எடுத்து அரசுக்கு ரூ.28.36 கோடி இழப்பை ஏற்படுத்தியதாக, அதற்குப் பிறகு வந்த அ.தி.மு.க ஆட்சியில் குற்றம்சாட்டப்பட்டது.
இதுதொடர்பாக, முன்னாள் அமைச்சர் பொன்முடி. அவரது மகன் கவுதம சிகாமணி எம்.பி., உறவினர் ராஜமகேந்திரன், சதானந்தன், கோதகுமார், ஜெயச்சந்திரன், கோபிநாத், லோகநாதன் ஆகிய எட்டு பேர் மீது, 2012ல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்தனர். இந்த வழக்கு மீதான விசாரணை விழுப்புரம் மாவட்டம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில், குற்றம்சாட்டப்பட்ட சதானந்தன், கோதகுமார், ஜெயச்சந்திரன், கோபிநாத் ஆகிய 4 பேர் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். மற்ற 3 பேர் ஆஜராகாததை அடுத்து, இந்த வழக்க்கு விசாரணை பிப்ரவரி 28-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கில் அரசு தரப்பு சாட்சிகளாக 67 பேர் சேர்க்கப்பட்டு இருந்தனர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 11 நபர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில் 9 பேர் பிறழ் சாட்சியாக மாறினர். 2 பேர் மட்டுமே தங்களது சாட்சியை பதிவு செய்தனர்.
அதன்படி வழக்கு நேற்று ( 28ந்தேதி) மீண்டும் நீதிபதி பூர்ணிமா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மேலும் ஒருவர் பிறழ் சாட்சியம் அளித்துள்ளார். ஓய்வு பெற்ற விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் ராதாகிருஷ்ணன், ஏற்கனவே அளித்த சாட்சியத்துக்கு மாறாக பிறழ் சாட்சியம் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அவர், “இந்த வழக்கில் எந்த உத்தரவையும் என்னுடைய சுய நினைவுடன் போடவில்லை” என்று கூறினார். மேலும், மேலும், “மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் எனக்கு அழுத்தம் கொடுத்ததால் மட்டுமே செம்மண் குவாரி முறைகேடு வழக்கில் நான் கையெழுத்து போட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் இந்த வழக்கில் அரசுத் தரப்பு சாட்சிகளில் மொத்தம் 10 பேர் பிறழ்சாட்சிகளாக மாறியுள்ளனர். சாட்சிகள் மிரட்டப்படுகின்றனரோ என்ற ஐயம் மக்களிடையே எழுந்துள்ளது.
தற்போது திமுக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், திமுகவைச் சேர்ந்த பல அமைச்சர்கள் முக்கிய நபர்கள் மீது உள்ள வழக்குகள் திடீரென மீண்டும் விசாரணைக்கு வருவதும், பலர் விடுதலை செய்யப்படுவதும் பேசும்பொருளாக மாறி உள்ளது. இந்த நிலையில், தற்போது பொன்முடி வழக்கிலும், பல அதிகாரிகள் தொடர்ந்த பிறழ் சாட்சிகளாக மாறி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நீதிமன்றத்தின் மீதான நம்பிக்கை மக்களிடையே தகர்ந்து வருகிறது.
பிறழ் சாட்சி என்றால் என்ன
குற்ற வழக்குகளில் குற்றத்தை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்க முக்கிய காரணியாக விளங்குவது சாற்றியங்கள் ஆகும். திறமையான அரசு வழக்கறிஞர்களின் வாதத்தால் பெரும்பாலான வழக்குகளில் குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு, தண்டனை பெற்றுக் கொடுக்கப்படுகிறது. இதற்கு முக்கிய காரணியாக விளங்குபவர்கள் சாட்சிகளே ஆகும்.
பிறழ் சாட்சி என்றால் என்ன இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 154 IEA பிறழ் சாட்சி (Hostile witness) என்பது பற்றி கூறுகின்றது. புகாரின் அடிப்படையில் புலன் விசாரணையை மேற்கொள்ளும் காவல்துறை ஆய்வாளர் குற்றம் பற்றி அறிந்த சாட்சிகளிடம் விசாரணை மேற்கொள்வார். சாட்சிகள் சொல்லும் வாக்குமூலத்தைப் பதிவு செய்துகொள்வார். இது குற்றவிசாரணை முறைச் சட்டம் பிரிவு 161ன் கீழ் பதிவு செய்யப்படும். இந்த வாக்கு மூலத்தில் சாட்சிகள் கையெழுத்திட வேண்டியதில்லை. இந்தச் சாட்சிகளின் வாக்கு மூலங்களும், இதர ஆவணங்களும், குற்றவாளிகளுக்கு குற்றப்பத்திரிகை கொடுக்கப்படும் போது வழங்கப்படும். நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரும் போது ஏற்கனவே காவல்துறை ஆய்வாளரிடம் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சாட்சிகள் சாட்சியம் தர வேண்டும். அவர்கள் சாட்சியம் அப்படி அமையாவிட்டால் அவர்கள் எதிராகப் போய்விட்டார் என்பார்கள். இத்தகைய சாட்சிகளை “பிறழ் சாட்சி” என்பார்கள்.
ஆயிரம் குற்றவாளிகள் தப்பினாலும் ஒரு நிரபராதி தண்டிக்கப்பட்டுவிடக் கூடாது என்பது ஒரு சட்டவியல் கோட்பாடு ஆகும். அதனால்தான் குற்றம்புரியாத ஒரு நிரபராதி தண்டனைக்கு ஆளாகக்கூடாது என்பதில் நீதிமன்றங்கள் கவனமாக இருக்கின்றன. நிரபராதி தண்டனைக்கு உட்படக் கூடாது என்பதால்தான் வழக்கில் நீதிமன்றத்திற்கு சந்தேகம் எழுந்தால், அந்தச் சந்தேகத்தின் பலனைக் குற்றவாளிகளுக்கு கொடுக்கிறது. இதன் பொருட்டே சாட்சிகள் கூறும் வாக்கு மூலங்கள் ஆழ்ந்து, கவனத்துடன் பரிசீலிக்கப்படுகின்றன. அதனால்தான் குற்றவியல் வழக்குகளில் வழக்கை நியாயமான எல்லாச் சந்தேகங்களுக்கும் அப்பால் நிரூபிக்க வேண்டும் என்பது வலியுறுத்தப்படுகிறது.
சுருக்கமாக சொல்வதென்றால், எவர் ஒருவர் நீதிமன்றத்தில் நடைபெறுகின்ற ஓர் வழக்கில் தமது தரப்புச் சாட்சியாக அழைத்து வரக் கூடிய நபர் அவர் அதற்கு மாறாக சாட்சியம் அளிக்கின்ற போது அவர் பிறழ் சாட்சி என்று அழைக்கப்படுவர்.
சாட்சிகள் பிறழ் சாட்சிகளாக மாறிவிட்டால் குற்றவாளிகளின் வழக்கறிஞருக்கு குறுக்கு விசாரணை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஏன் என்றால் அச்சாட்சிதான் அரசு தரப்பை ஆதரிக்கவில்லையே. ஆனால் அப்படிப்பட்ட பிறழ் சாட்சியை, நீதிமன்றத்தின் அனுமதியோடு அரசு வழக்கறிஞர் குறுக்கு விசாரணை செய்வார்.
குற்றவியல் வழக்குகளில் சாட்சிகள் தடம் மாறுவதும், புரள்வதும் புதிதல்ல. சில சாட்சிகள் பிறழ் சாட்சிகளாக மாறிவிடுவதாலேயே குற்றவாளிகள் விடுதலை பெற்றுவிடுவார்கள் என்று நினைப்பதும் சரியானது எனவும் கூறிவிட முடியாது. எனினும் பல பிறழ் சாட்சியங்களால் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்ட சம்பவங்களும் நடைபெற்றுள்ளமை மறுப்பதற்கல்ல.
மாறாத இதர சாட்சிகளின் வாக்குமூலங்கள், கோர்வையயாகவும், முரண்பாடு இல்லாமலும், நம்பும்படியும் இருந்தால், அவைகளின் அடிப்படையில் குற்றவாளிகளை தண்டிக்க முடியும்.
ஆனால் நடைமுறையில், பிறழ் சாட்சிகள், மிரட்டல்களுக்கு பயந்தே, தங்களது சாட்சியங்களை மாற்றி கூறி வருகின்றனர் என்பதே உண்மை நிலவரம்.