சென்னை: ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு, அனைவரும் ஒன்றிணைந்து, வெற்றிக்கனியை அம்மாவின் காலடியில் சமர்ப்பிப்போம் என்று சசிகலா பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், அதிமுக கூட்டணி கட்சிகளான சமத்துவ மக்கள் கட்சி,தேமுதிக உள்பட சில கட்சிகள் சசிகலாவை சந்தித்து பேச இருப்பதாக கூறப்படுகிறது.
சொத்துக்குவிப்பு வழக்கில், சிறையில் இருந்து விடுதலையான ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவும் தனது தி.நகர் இல்லத்தில் ஜெயலலிதா படத்துக்கு மரியாதை செலுத்தி, தொண்டர்களிடையே உரையாற்றினர். அப்போது, உடன்பிறப்புகள் ஒன்றாக இணைந்து சட்டமன்றத் தேர்தலில் களமிறங்குவோம். அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம். விரைவில் தொண்டர்களையும் சந்திப்பேன் என்று கூறினார்.
இந்த நிலையில், சசிகலாவை சமத்துவ மக்கள் கட்சித்தலைவர் நடிகர் சரத்குமார் தனது மனைவி ராதிகாவுடன் சென்று சந்தித்துபேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சரத், நன்றி மறப்பது நன்றன்று பஞ்ச் டயலாக்கை உதிர்த்தார்.
அவரைத்தொடர்ந்து நாம் தமிழர் கட்சித்தலைவர் சீமானும் சசிகலாவை சந்தித்து பேசினார். அவருடன் இயக்குனர் பாரதிராஜா உள்பட சிலர் இருந்ததாகவும், அவர்களின் சந்திப்பு, சசிகலாவின் உடல்நலம்குறித்து விசாரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், சசிகலாவை தேமுக பொருளாளர் பிரேமலதாவும் சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக, தங்களுக்கு 41 தொகுதிகளை ஒதுக்காவிட்டால் 3வது அணி அமைப்போம், 234 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் தயாராக இருப்பதாக கூறியதுடன், எடப்பாடி பழனிசாமி மக்களால் முதல்வராகவில்லை என்றும் தெரிவித்து கூட்டணியில் குழப்பத்தை உருவாக்கினார். இந்த நிலையில், ஏற்கனவே சிறையில் இருந்து விடுதலையான சசிகலாவை வரவேற்ற பிரேமலதா, தனது கட்சி சார்பாக முக்கிய நிர்வாகிகளை அனுப்பி ரகசியமாக பேசி வருவதாகவும் தகவல்கள் பரவின. ஆனால், அதை பிரேமலதா மறுத்து வந்த நிலையில், தற்போது சசிகலாவை பிரேமலதா விரைவில் சந்திப்பார் என்று தகவல்கள் பரவி வருகின்றன.
இதுமட்டுமின்றி, கமல்ஹாசன், ஜாதிய மற்றும் மதரீதியிலான கட்சித் தலைவர்களையும் சசிகலா சந்திக்க திட்டமிட்டு உள்ளதாகவும், அதற்கான ஏற்பாடுகளை டிடிவி தினகரன் மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே தமிழக அரசியலில் கூட்டணி பேரம் என்பது, பண பேரமாகவே நடைபெற்று வரும் நிலையில், சசிகலாவின் அரசியல் நகர்வு, அரசியல் நோக்கர்களால் உற்றுநோக்கப்பட்டு வருகிறது..