சேல்ம்: தமிழக முதல்வரை ‘டயர் நக்கி’ என்று விமர்சித்த ராமதாஸ் நோட்டுக்கும் சீட்டுக்கும் கொள்கைகளை அடகு வைக்கிறார் என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர்  வேல்முருகன் கடுமையாக விமர்சித்தார். மேலும், திமுக எனக்கு நெய்வேலி தொகுதியில் போட்டியிட அனுமதித்தால், அங்கு போட்டியிடத் தயார் என்றும் கூறினார்.

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழ்நாட்டில் தமிழர்களுக்கே வேலை என்பதை வலியுறுத்தி, ஓமலூரில் வருகிற 28ம் தேதி எங்கள் கட்சி சார்பில் வாழ்வுரிமை மாநாடு நடக்க உள்ளது.

பினாமி அரசாக செயல்பட்டு வரும் எடப்பாடி அரசு,  மாநில உரிமைகளை மத்திய அரசுக்கு மாநில அரசு காவு கொடுத்து வருகிறது. தமிழக மக்களுக்கு அடுக்கடுக்காக துரோகம் செய்து வரும் பாஜ, அதிமுக கூட்டணிக்கு சரியான பாடம் கற்பிக்கும் வகையில், வரும் சட்டமன்ற தேர்தலில் அந்த கூட்டணியை தோற்கடிக்க வேண்டும்.

தேர்தலை மனதில் வைத்து பாமக, வன்னியர்களுக்கு 20சதவீதம் உள் ஒதுக்கீடு தரவேண்டும் என கேட்டு வருகிறது. வன்னியர்களுக்கு 15% உள் ஒதுக்கீடு கோரி 30 ஆண்டுகளுக்கும் மேலாக 26-க்கும் மேற்பட்ட வன்னியர் சங்கங்கள் போராடி வருகின்றன ஆனால் பாமக தலைமைக்கு இவை பற்றியெல்லாம் அக்கறை இல்லை, நோட்டுக்கும் சீட்டுக்கும் தன் கொள்கைகளை அதிமுகவிடம் விற்பனை செய்துள்ளது.

ராமதாசும், அன்புமணி ராமதாசும் வன்னியர்களை ஏமாற்றி வருகின்றனர். தனது உயிரே போனாலும் தனி ஒதுக்கீடு வேண்டும் என்றார் ராமதாஸ். அவரது மகன் மந்திரியானவுடன், அந்த கோரிக்கையை கைவிட்டார்.  தற்போது, கலைக்கல்லூரி, பொறியியல் கல்லூரி சட்ட கல்லூரி ஆகிய சொத்துகள் எல்லாம் கைவிட்டு போய்விடக்கூடாது என்பதற்காக, அவரது பெயருக்கு மாற்றிக்கொண்டார். தன் கல்வி நிறுவனங்கள் வன்னியர் நல வாரிய சொத்துக்களுடன் சேர்ந்து விடாமல் இருக்கவே ராமதாஸ் பாஜக, அதிமுக கூட்டணியில் இருந்து வருகிறார்.

பாமக தற்போது உள் ஒதுக்கீடு என்ற கோரிக்கையை சீட்டுக்காகவும் நோட்டுக்காகவும் தான் கேட்டு வருகிறது. வன்னியர்கள் மீது உண்மையான பற்று இருந்தால், அதிமுகவில் இருந்து வெளியேறி தனியாக தேர்தலை சந்திக்க தயாரா?

லோக்சபா தேர்தலுக்கு முன்னர் வரை தமிழக முதல்வரை ‘டயர் நக்கி’ என்று ராமதாஸ் விமர்சித்து வந்தவர், தற்போது அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளார்.   அதை முதல்வரும் மறந்து விட்டு ராமதாஸ் உடன் சேர்கிறார். வரும் தேர்தலில் தமிழக மக்கள் அதிமுகவிற்கு சரியான பாடம் புகட்டுவார்கள். திமுக ஆட்சி அமைப்பது உறுதி

தமிழகத்தில் 4 கட்சித் தலைவர்கள் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். எனவே நெய்வேலி தொகுதியில் போட்டியிட கடும் போட்டி நிலவுகிறது. எனவே திமுக எனக்கு அந்தத் தொகுதியை ஒதுக்கினால் போட்டியிடுவேன்.

இவ்வாறு கூறினார்.