மதுரை,

நாட்டின் நீராதாரத்தை அடியோடு அழிக்கும் கருவேல மரங்களை அகற்ற சிறப்பு சட்டத்தை உடனே இயற்ற வேண்டும் என்று தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டு உள்ளது,

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஏற்கனவே மதுரை ஐகோர்ட்டில், தமிழ்நாட்டில் உள்ள சீமைகருவேல மரங்களை அகற்ற உத்தரவிடக்கோரி வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

ஏற்கனவே பலமுறை விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், சீமைகருவேல மரங்களை குறிப்பிட்ட காலத்திற்குள் அகற்ற கோர்ட்டு வலியுறுத்தியது.

மேலும் இந்த மரங்கள் அகற்றும் பணியினை மாவட்ட நிர்வாகம் தீவிரப்படுத்த வேண்டும். இதனை மாவட்ட நீதிபதிகள் ஆய்வு செய்து ஐகோர்ட்டுக்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தனர்.

ஐகோர்ட்டு மதுரை கிளையின் உத்தரவு காரணமாக மரங்களை அகற்றும் பணி தென் மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது. மேலும்  ஒருசில மாவட்டங்களில் மந்தமான  போக்கே  காணப்பட்டது.

இதுகுறித்து ஐகோர்ட்டு கிளை, அந்த மாவட்ட நிர்வாகிகளுக்கு கண்டனம் தெரிவித்ததோடு,  தனியார் நிலங்களில் வளர்ந்துள்ள கருவேல மரங்களை அவர்களே அகற்ற வேண்டும். அப்படி அகற்றாதபட்சத்தில் அரசு சார்பில் அதனை அகற்றி அதற்கான தொகையினை இருமடங்காக வசூலிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.

மதுரை ஐகோர்ட்டு கிளையின் உத்தரவு செயல்படுத்தப்படுகிறதா என்பதை நேரில் கண்டறிய, நீதிபதிகள் செல்வம், கிருபாகரன் ஆகியோர் நேரடியாக பல இடங்களுக்கு சென்று ஆய்வு செய்தனர்.

இந்த நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதிகள்,  நாங்கள் உத்தரவு போட்ட காலத்தில் இருந்து இதுவரை 10 சதவீத மரங்கள் மட்டுமே அகற்றப்பட்டுள்ளன. சீமைகருவேல மரங்களை அகற்றும் வி‌ஷயத்தில் சில மாவட்ட கலெக்டர்கள் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டினர்.

மேலும் இந்த மரங்களினால் ஏற்படும் பாதிப்பை உணர்ந்து இதனை அகற்ற அரசு உரிய நிதியை ஒதுக்க வேண்டும். 2 மாதத்திற்குள் இதற்காக சிறப்பு சட்டத்தை இயற்ற வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.