சென்னை
நன்னிலம் நாம் தமிழர் கட்சியினரைக் கைது செய்திருப்பதற்குக் கண்டனம் தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
“திருவாரூர் மாவட்டம், நன்னிலத்தில் ஒ.என்.ஜி.சி.யின் எண்ணெய்க்குழாய் பதிக்கும் முயற்சிகளுக்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து மக்களோடு முதன்மையாய் களத்தில் நின்ற அப்பகுதியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகளான தம்பிகள் அன்புச்செல்வன், ஜானகிராமன், ரவி மற்றும் சமூகச்செயற்பாட்டாளர் திலக் ஆகியோர் மீது 6 கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் பிணையில் வர இயலாத வகையில் வழக்குத் தொடுத்துச் சிறையிலடைத்திருக்கிறார்கள். இவ்வழக்கில் முதன்மையானவராக வரலாற்றுப்பேராசிரியர் ஐயா ஜெயராமன் சேர்க்கப்பட்டிருக்கிறார். இத்தோடு, நன்னிலம் பகுதியைச் சேர்ந்த உத்தமன், சுரேசு, உதயகுமார், அலாவுதீன் ஆகியோர் மீதும் வழக்குத் தொடுக்கப்பட்டிருக்கிறது. காவிரிப்படுகையைக் காவுவாங்கத் துடிக்கும் ஒ.என்ஜி.சி.யின் எண்ணெய்க்குழாய் பதிக்கும் திட்டத்திற்கு எதிராக மக்கள் அணிதிரளும்போதெல்லாம் அவர்களைக் கைதுசெய்து சிறைலடைத்து மக்களின் தன்னெழுச்சிப் போராட்டத்தினை அடக்கி ஒடுக்க முயலும் அதிமுக அரசின் பயங்கரவாத நடவடிக்கைகள் யாவும் சனநாயக நெறிமுறைகளுக்கும், அரசியலமைப்புச்சாசனம் வழங்கியிருக்கும் அடிப்படை உரிமைகளுக்கும் முற்றிலும் எதிரானது. இதனை நாம் தமிழர் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
நன்னிலம் பகுதி போராட்டத்தில் கலந்துகொள்ளாத பேராசிரியர் ஜெயராமனை இவ்வழக்கில் முதன்மையாகச் சேர்த்திருப்பதே இவ்வழக்கின் உண்மைத்தன்மையும், உள்நோக்கத்தையும் அறியச் செய்கிறது. ஹைட்ரோ கார்பன் எடுப்பதன் மூலம் மண்ணிற்கும், மக்களுக்கும் ஏற்படும் படுபாதகத்தினைப் பரப்புரை செய்துவிடக்கூடாதென்பதற்காகவும், அவற்றிற்கெதிராக மக்களை அணிதிரள விடாது அச்சுறுத்த வேண்டும் என்பதற்காகவும்தான் போலித்தனமாக இவ்வழக்குகள் புனையப்பட்டிருக்கிறது என்பது வெளிப்படையாகும். அடக்குமுறைகளும், ஒடுக்குமுறைகளும் போராட்டத் தீயினை ஊதிப்பெரிதாக்கி பற்றிப் பரவச்செய்யுமே ஒழிய, அவற்றினை அணைக்காது என்பது சமகாலப் போராட்ட வரலாறுகள் சொல்லும் பாடமாகும். மண்ணின் மக்களின் விருப்பத்திற்கு மாறாக ஹைட்ரோ கார்பன் எடுத்திட முயலும் மத்திய, மாநில அரசுகளின் செயலானது அப்பட்டமான மக்கள்விரோதம்; வாக்குச் செலுத்தி ஆட்சி அதிகாரத்தில் ஏற்றி வைத்த மக்களுக்குச் செய்கிற பச்சைத்துரோகமாகும். உலகின் மிக நீண்ட சமவெளி பகுதிகளுள் ஒன்றாக இருக்கிற காவிரிப்படுகையைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கக்கோரியும், காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து காவிரி நதிநீர் உரிமையினைத் தமிழகத்திற்குப் பெற்றுத்தரக் கோரியும் மக்கள் போராடிக்கொண்டிருக்கும் இவ்வேளையில் காவிரித்தாயின் மார்பு அறுத்து குருதி குடிக்க முனையும் இக்கொடுஞ்செயலை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. ஆகவே, மண்ணிற்கும், மக்களுக்கும் கேட்டைத்தரும் இக்கொடியத் திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். இல்லையேல், மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டங்களை ஆளும் வர்க்கத்திற்கு எதிராக நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும் என எச்சரிக்கிறேன்.
இத்தோடு, போராட்டக்களத்தில் நிற்கும் பொதுமக்கள் மீதும், சமூகச் செயற்பாட்டாளர்கள் மீதும் தொடர்ச்சியாகப் பொய் வழக்குகளைக் கட்டவிழ்த்துவிடும் சனநாயகத்துரோகத்தினை, அரசப்பயங்கரவாதத்தினை மாநில அரசானது நிறுத்திக்கொள்ள வேண்டும் எனவும், 9 பேர் மீதும் புனையப்பட்டுள்ள பொய் வழக்குகளை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.”
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.