பெங்களூருவில் செப்டம்பர் 30 வரை 144 தடை நீட்டிப்பு

Must read

பெங்களூரு :
காவிரி விவகாரத்தால் மீண்டும் வன்முறை நிகழாமல் தடுக்க பெங்களூரு நகரில் 144 தடை உத்தரவு செப்டம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அம் மாநில காவல்துறை அறிவித்துள்ளது.
கடந்த 21-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை தமிழ்நாட்டுக்கு தினமும் விநாடிக்கு 6,000 கன அடி காவிரி நீரைத் திறந்து விட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடாமல் நிறுத்த, கர்நாடக அரசின் வழக்கறிஞர் நரிமன் தலைமையிலான சட்ட நிபுணர்களுடன் மாநில நீர்ப்பாசனத் துறை அமைச்சர் பாட்டீல் செப்டம்பர் 25ம் தேதி ஆலோசனை நடத்தினார்.
bengaluru-army-story_647_092016062030
பருவமழை முடிவுக்கு வரும் நிலையில், கர்நாடகாவில் உள்ள அணைகளில் நீர் குறைவாக உள்ளது என்றும், அணைகளில் நீர் நிரம்பும் வரை காவிரியில் நீர் திறந்து விட முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்தது. அதோடு, தமிழகத்திற்கு காவிரியில் நீர் திறக்க வேண்டும் என்ற இடைக்கால உத்தரவுக்கு வரும் ஜனவரி மாதம் வரை தடை விதிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்தது.
இந்த நிலையில், தமிழகத்திற்கு மேலும் 3 நாட்களுக்கு தினமும் வினாடிக்கு 6000 கன அடி வீதம் நீர் திறக்க வேண்டும் என்று கர்நாடகாவுக்கு இன்று உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதனால் கர்நாடகாவின் மாண்டியாவில் போராட்டம் வெடித்துள்ளது. பெங்களூருவில் மீண்டும் கலவரம் நிகழாமல் தடுக்க, வரும் செப்டம்பர் 30ம் தேதி நள்ளிரவு வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என அம்மாநில காவல்துறை அறிவித்துள்ளது.

More articles

Latest article